Knowledge is good only if it is shared.

Saturday, June 13, 2015

வானியல் - 28 ரொஸெட்டா (Rosetta)

ரொஸெட்டா (Rosetta)
எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது பத்தாவது.
                     காஸினி, டான், பயோனியர் என பல விண்வெளித் திட்டங்கள் என்னைக் கவர்ந்தவை. பத்து என சுருக்கிக் கொண்டதால் அதில் கடைசி இந்த 'ரொஸெட்டா'. இப்பத்துத் திட்டங்களில் முதலாவதான 'ஹயபுஸா' -வைப்போன்றது இத்திட்டம். 'ஹயபுஸா' விண்கற்களை (Asteroid) ஆராய ஜப்பானால் அனுப்பி பாதி வெற்றி பாதி தோல்வி என விடைதெரியாக் கேள்வியுடன் முடிந்த திட்டம். 'ரொஸெட்டா'வும் அத்திட்டத்தை ஒத்தது. அதில் விண்கல் எனில் இதில் எரிகல். ஏற்கனவே பார்த்த கைப்பர் பட்டைப் பகுதியிலிருந்து அத்துவாரிக் கொண்டு சூரியக்குடும்பத்தினுள் வரும் எரிகல்லினை ஆராய ஐரோப்பிய விண்வெளி அமைப்பினால் மார்ச் 2, 2004 அன்று அனுப்பப்பட்டது ரொஸெட்டா. எரிகல்லின் பெயர் ''எரிகல் 67பி'' (Comet 67P) பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் எற்ப்புவிசையைப் பயன்படுத்தி ரொஸெட்டா சென்றது. ஐரோப்பிய நாடுகள் 14 மற்றும் அமெரிக்காவும் இத்திட்டத்தில் பங்குபெறுகிறது.

Rosetta


உருவ அமைப்பு: 

     ரொஸெட்டாவின் வடிவம் 2.8 x 2.1 x 2.0 அளவுடையது. அலுமினியத்தாலானது இது. இதில் 2.2 மீட்டர் விட்டமுடைய தகவல்தொடர்பு ஆண்டெனா இருக்கும். மேலே உள்ள படத்திலிருக்கும் சூரியத் தகடுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை 32 மீட்டர்கள் நீளம். அதிக அளவு சூரிய சக்தியை உள்வாங்கும் பொருட்டு 180 டிகிரி அளவில் திரும்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 850 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும். ரொஸெட்டாவின் மொத்த எடை 3000 கிலோகிராம். இதில் 24 bipropellant 10N thrusters இருக்கிறது. இது பாதை மாற்றம் மற்றும் பிற செயல்களுக்காக.

உபகரணங்கள்:

             இந்த ரொஸெட்டாவில் 11 அறிவியல் உபகரணங்கள் மற்றும் விண்கல்லின் அருகில் செல்லும் போது அதில் தரையிறங்கி ஆராய ஓரு ''லேண்டர்'' உள்ளது. இந்த உபகரணங்களெல்லாம் ரொஸெட்டாவின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டு எப்போதும் ''எரிகல் 67பி''-யைப் பார்த்தபடியே இருக்கும்படி ரொஸெட்டா சென்றுகொண்டிருக்கிறது.

ரொஸெட்டா லேண்டர்:
          மொத்தம் ஒன்பது சோதனைகள் செய்ய திட்டமிட்டு இந்த லேண்டர் வடிவமைப்பட்டுள்ளது. இதன் எடை 21 கிலோகிராம். சிறிய ''ட்ரில்லிங்'' மிஷினும் உண்டு இதில். ஒரு வாரம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எரிகல் 67பி சிறியது என்பதான் அதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. எனவே இந்த லேண்டர் அந்தன் ஈர்ப்பு விசையை எளிதாக மீறி விண்வெளியில் நழுவிச் செல்லும் வாய்ப்பும் அதிகம். எனவே லேண்டர் இறங்கியதும் நங்கூரம் போன்ற ஒன்றின் மூலம் எரிகல்லுடன் நிலையாக இருக்கும்படி செய்யப்படும். எரிகல்லின் அருகில் சென்றதும் ரொஸெட்டாவிலிருந்து தானாகவே பிரிந்து எரிகல்லில் இறங்கும்படி திட்டமிடப்பட்டது. எரிகல் 67பியை நோக்கிச் செல்லும் ரொஸெட்டா போகிற வழியில் எதிர்படும் வேறு இரண்டு விண்கற்களையும் ஆராய்ந்தது. 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரொஸெட்டாவின் கருவிகள் பெரும்பான்மையானவை அணைக்கப்பட்டு தூங்கும் நிலையில் எரிகல் 67பி-யை நோக்கி செலுத்தப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்:


  • 2014 ஜனவரி - மே: தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட ரொஸெட்டாவில் உள்ள 24 bipropellant 10N thrusters பலமணிநேரம் இயக்கப்பட்டு ''எரிகல் 67பி'' யை நோக்கி ரெஸாட்டாவின் பாதை வினாடிக்கு 2 மீட்டர்கள் எனும் வேகத்தில் மாற்றப்பட்டது. இவ்வாறு செய்வதற்கு கிட்டத்தட்ட 90 நாட்கள் ஆனது.
  • 2014 ஆகஸ்டு: ரொஸெட்டா எரிகல்லிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் போது அதன் காமிராக்கள் இயக்கப்பட்டு எரிகல்லின் மேற்பரப்பின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தை முடிவு செய்ய இயலும். மேலும் எரிகல்லில் திசைவேகம், சுழலும் அச்சு, நியூக்ளியசுக்கும் ரொஸெட்டாவிற்குமான தொலைவு உள்ளிட்ட பல விஷயங்கள் பெறப்பட்டன.
  • 2014 நவம்பர்: லேண்டர் எரிகல்லிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் (உயரத்தில்?) இருக்கும் போது தரையிறங்கியது.  தரையிறங்கிய வேகம் வினாடிக்கு ஒரு மீட்டருக்கும் குறைவு. இறங்கியது எரிகல்லினை லேண்டர் புகைப்படமெடுத்து அனுப்பியது.
  • 2014 நவம்பர் - 2015 டிசம்பர்: ரொஸெட்டா எரிகல்லைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதன் மூலம் இன்னும் அதிகத் தகவல்களைப் பெற இயலும். பின்னர் எரிகல்லின் பாதை சூரியனைக் கடந்து விண்வெளியின் தொலைதூரத்தில் சென்றுவிடும். ரொஸாட்டாவிற்கும் பூமிக்குமான தொடர்பும் அறுந்துவிடும்.

ஆராய்ச்சி முடிவுகள்:


  • எரிகல்லின் வெப்பநிலை -70 டிகிரி செல்ஸியஸ்.

Comet 67P on 14 March 2015 – NavCam


  • எரிகல்லில் மேற்பரப்பு தூசுகளால் ஆனது.
  • இதில் பெரும்பாலும் 'போரஸ்' உள்ளது.
  • கார்பன் மோனாக்ஸைடு, மெத்தனால், மீத்தேன், அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகிய வாயுக்கள் உள்ளன.
  • எரிகல்லில் இருக்கும் தண்ணீருக்கும் பூமியில் இருக்கும் தண்ணீருக்கும் அதன் அணு அமைப்பில் வேறுபாடு இருப்பதாக கண்டுணரப்பட்டுள்ளது. (இரண்டு வித ஹைட்டிரஜன்கள்)
  • நைட்டிரஜன் அணுவும் இருப்பதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த் எரிகல் மிகமிகப் பழமையானது என தெரியவருகிறது.
              ரொஸெட்டாவிலிருந்து லேண்டர் இறங்கிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. தேவையான சோதனைகள் செய்து முடிந்ததும் லேண்டர் செயலிழந்தது. ரொஸெட்டா இந்த வருட இறுவரை பூமியுடன் தொடர்பில் இருக்கும். அதன் மூலம் எரிகல் தொடர்பான அதிகத் தகவல்களைப் பெறலாம்.

தற்போதையச் செய்தி: இக்கட்டுரை 13-6-2015 அன்றே எழுதி முடிக்கப்பட்டது. பதிவேற்றிய இன்று (14-06-2015) ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் செய்திக் குறிப்பொன்று எரிகல் 67பி- யில் இறங்கிய லேண்டர் சூரிய ஒளி பட்டதும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  முதலில்  லேண்டர் இறங்கிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. அதன் மூலம் மின்சக்திக் குறைவால் செயலிழந்தது. எரிகல் சூரியனை நோக்கிச் செல்வதால் லேண்டரின் சூரியத் தகடுகளில் ஒளி பட்டு 24 வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பான தகவல் கீழே...
 2014 நவம்பர் 13 அன்று செயலிழந்த லேண்டர் 13 ஜூன் 2015 அன்று 300 -க்கும் அதிகமானத் தகவல் பெட்டகங்களை ரொஸெட்டா மூலம் ஜெர்மானிய விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லேண்டர் சூரிய ஒளி விழும் பகுதியில் இருப்பதாக உணரப்பட்டு மேலதிக தகவல்கள் பெறப்பட்டன. -35 டிகிரி வெப்ப நிலையும் 24 வாட் மின்சாரமும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மேலாளர் 'லேண்டர் தொடர்ந்து செயல்படும்' என இன்று (14-06-2015) அறிவித்துள்ளார். இன்றைய நிகழ்வில்  லேண்டர் தொடர்ச்சியாக 85 வினாடிகள் தொடர்பில் இருந்துள்ளது. லேண்டரில் உள்ள  8000 தகவல் பெட்டகங்கள் விரைவில் நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

புகைப்பட உதவி: ஐரோப்பிய விண்வெளி அமைப்பு.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 
No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...