Knowledge is good only if it is shared.

Wednesday, June 24, 2015

வானியல் - 31 டைட்டனும் (Titan) அதன் கடலும்.

                   டைட்டனும் (Titan) அதன் கடலும்


                    பூமியில் மட்டுதான் தண்ணீர் உள்ளிட்ட நீர்மப் பொருட்கள்  இருக்கிறதா என்ன? ஏற்கனவே பார்த்த கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் க்ளவுட் பகுதியிருக்கும் விண்கற்களின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள்  உள்ளன. 200 வருடங்களுக்குள் ஒருமுறை பூமியை எட்டிப் பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் க்ளவுட் வருகின்றன. இது தவிர சூரியக் குடும்பக் கிரகத்தின் நிலவு ஒன்றில் நீர்மப் பொருட்கள்  கடலாகவே இருக்கிறது. அதைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

Two Halves of Titan.png
டைட்டன்


                                  16 - 17 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் கேஸினி எனும் கணிதவியலாளர் மற்றும் வானியல் விஞ்ஞானி வாழ்ந்தார். மேலும் அதே காலக்கட்டத்தில் டச்சுப் பகுதியில் ஹைகன்ஸ் எனும் கணிதவியலாளர் மற்றும் வானியல் விஞ்ஞானியும் வாழ்ந்தார். இவர்கள் இருவரும் புகழ் பெற்ற வானியல் அறிஞர்கள். இவர்களின் பெயரைக் கொண்ட விண்கலன் ஒன்றை சனிக் கிரகத்தை ஆராய 1997 அக்டோபர் 15 அன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் இணைந்து அனுப்பின.

Christiaan Huygens.jpg
ஹைகன்ஸ்
Giovanni Cassini.jpg
கேஸினி
                     2005 ஆம் ஆண்டில் இவ்விண்கலத்திலிருந்து ஹைகன்ஸ் எனும் தானியங்கி ரோபோ சனியின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனில் இறங்கியது. ஒரு உபதகவல் சனிக் கிரகத்திற்கு மொத்தம் 53 நிலவுகள் உண்டு. மேலும் 9 நிலவுகள் இதன் சுற்றுப் பாதையில் சேரக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலவுகளில் ஒன்றுதான் டைட்டன். ஹைகன்ஸ், டைட்டனின் மேற்பரப்பில் இறங்கும்போது இறகைப் போல மிக மெதுவாகத் தரையிரங்கியது. இவ்வளவிற்கும் 318 கிலோகிராம் எடையுடைய ஹைகன்ஸ் அவ்வாறு இறங்கக்காரணம் டைட்டனின் மிகக் குறைவான ஈர்ப்புவிசையே.

டைட்டனின் மேற்பரப்பில் ஹைகன்ஸ் எனும் தானியங்கி ரோபோ. ( இது ஒரு வரைபடம்)


 
                             கேஸினி விண்கலத்தின் தகவல்களின்படி பூமியைத் தவிர டைட்டனில் மட்டும்தான் ஏரிகள் மற்றும் கடல்கள் (இதுவரை 35) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டைட்டனின் மேற்பரப்பின் வெப்பநிலை -180 டிகிரி செல்ஸியஸ். இதில் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் மூலக்கூறு அடங்கியவை உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 37 மூலக்கூறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைட்டனின் துருவங்களில் மிகப் பெரிய கடல்களும் பலநூறு கிலோமீட்டர் நீளமுள்ள பல நூறு அடிகள் ஆழமுள்ள ஆறுகளும் காணப்படுகின்றன. மேலும் பல சிறு ஏரிகளும் கேஸினி விண்கலம் புகைப்படமெடுத்துள்ளது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் வற்றிப்போன ஏரிகளும் இவற்றில் அடக்கம்.

Radar images from NASA's Cassini spacecraft reveal many lakes on Titan's surface, some filled with liquid, and some appearing as empty depressions. False colouring is is used to distinguish bodies of liquid hydrocarbons (blue-black) from dry land (brown) and does not represent the visual appearance of Titan's surface. Image credit: NASA/JPL-Caltech/ASI/USGS.


                   ஏரிகள் ஆறுகளுடன் இணைந்திருக்கவில்லை. அவற்றில் இருக்கும் மீத்தேன் ஈத்தேன் போன்றவை மழையினாலோ அல்லது டைட்டனின் நிலப்பரப்பின் கீழிருந்து ஊறியோ ஏற்படுகின்றன. சிலசமயம் வற்றவும் செய்கின்றன. இதுதொடர்பாக அதிகத் தகவல்கள் எதுவும் விஞ்ஞானிகளிடம் இல்லை. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்கள். 30 வருடங்கள் இடைவெளியில் இந்த ஏரிகள் நிரம்பி வற்றி வருவதாகக் கணக்கிட்டுள்ளனர்.


Cassini Saturn Orbit Insertion.jpg

              சமீபத்தியக் கண்டுபிடிப்பின்படி நமது பூமியின் நிலப்பரப்பும் டைட்டனின் நிலப்பரப்பும் ஓரளவு ஒத்திருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இக்கிரகத்தின் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றை ஆராய்ந்து ஓரளவுத் தகவல்களைப் பெற்றுள்ளனர். மேலும் நிலப்பரப்பின் வேதியல் தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் மூலம் ஏரிகள் வற்றுவதற்கும் மீண்டும் நிரம்புவதற்குமான தொடர்பை ஆராய்ந்து வருகின்றனர்.

டைட்டன் ஆராய்ச்சி பற்றி சில தகவல்கள்:

 • 1160 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 • 37,000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 • 43% பரப்பு ரேடார் மூலம் வரைபடமாக்கப்பட்டுள்ளது (மேப்பிங்).
 • பூமியைப்போல 1.43 மடங்கு பரப்பு அழுத்தமுடையது.
பலகோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் டைட்டன் நிலவின் நிலப்பரப்பும் நமது பூமியின் நிலப்பரப்பும் ஒன்றுபோலிருப்பது ஆச்சரியம்தான்.


புகைப்பட உதவி: astronomynow இணையத்தளம் மற்றும் விக்கிப்பீடியா.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Sunday, June 21, 2015

வானியல் - 29 வானியல் அலகுகள்

வானியல் அலகுகள்

                        வானியலின் மீதான மனிதனின் ஆர்வம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. மனிதன் தோன்றிய நாள் முதல் நட்சத்திரங்களையும், கோள்களையும் வானியல் அபூர்வ நிகழ்வுகளயும் பார்த்து வருகிறான். அதில் அரிஸ்டாட்டில், தாலமி, கோபர்நிக்கஸ், ப்ரஹே, கெப்ளர், கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், வில்லியம் சிட்டர், ஹென்றி, தாமஸ், ஹப்பிள், எட்மண்ட் ஹேலி உள்ளிட்ட பலப்பல ஜாம்பவான்கள் படிப்படியாய் வளர்த்தெடுத்ததே இன்றைய நவீன வானியல். வானியல் என்பது பல துறைகளை உள்ளடக்கிய ஒன்று. நமது பிரபஞ்சம் என்பது நம்மால் உருவகிக்க முடியாத ஒன்று. எனவே பூமியில் நாம் தூரத்தை அளக்க உபயோகிக்கும் நம்முடைய சாதாரண அளவீடான கிலோமீட்டர் எல்லாம் கதைக்குதவாது. எனவே சில வகை அடிப்படை வானியல் அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

AU (astronomical units) வானியல் அலகு

astronomical units க்கான பட முடிவு

                       சூரியக் குடும்பத்திற்கு உள்ளே உள்ள கிரகங்களுக்கிடையேயான தொலைவைக் குறிக்க இவை உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமியின் வட்டப்பாதைக்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான (?) ப்ளூட்டோ சூரியனிலிருந்து 39.47 AU தொலைவில் உள்ளது. சுருங்கச் சொன்னால் ஒரு AU என்பது 14,95,97,871 கிலோமீட்டர்கள்.

ஒளிவருடம்

light year க்கான பட முடிவு

                  ரெம்பத் தொலைவில் உள்ளதை அளக்க கிலோமீட்டரோ அல்லது AU -வோ கதைக்கு உதவாது. அதை ஒளியின் வேகத்தோடு அளக்கின்றனர். ஒளியானது  2,99,792.458 கிலோமீட்டர் தொலைவை ஒரு வினாடியில் கடந்து செல்லும். இந்த ஒளி ஒரு வருடத்தில்
கடக்கும் தொலைவை ஓர் ஒளி வருடம் எனக் குறிப்பிடுகின்றனர். வினாடிக்கு சராசரியாக மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள்.  சூரிய ஒளி நம்மை வந்து 
அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு 8.3 நிமிடங்கள். காலையில் மலையிடுக்கில் நீங்கள் பார்க்கும் சூரியன் நீங்கள் பார்க்கும் அதே நேரத்தில் அந்த இடத்தில் இல்லை. நீங்கள் பார்ப்பது 8.3 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியனை. நமக்கு மிக அருகில் (!) இருக்கும் நட்சத்திரமான ''ப்ராக்ஸிமா செஞ்சுரி'' -க்கும் நமக்குமான தொலைவு 4.2 ஒளி வருடங்கள். இவ்வளவு ஏன் ஒரு ஒளி வருடம் என்பது 94,60,52,84,00,000 கிலோமீட்டர்கள். 
 உபதகவல்:

மைக்கேல்சன் - மார்லி சோதனையில்தான் ஒளியின் வேகம் 2,99,792.458 கிலோமீட்டர்கள் என துல்லியமாக அளவிடப்பட்டது.
 ஐன்ஸ்டீன் ஒளியின் வேகம் மாறுபடும் என்று சொன்னார். அவ்வாறு மாறும் போது பொருளின் அளவிலும் மாறுதல் 
ஏற்படும். காலமும் மாறும் என்றார். நேரமும் பொறுமையும் இருந்தால் 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி' படித்துப் பாருங்கள். 

பார்செக்

parsec க்கான பட முடிவு

                              3.26 ஒளி வருடங்கள் ஒரு பார்செக். இரண்டு அண்டங்களுக்கு இடையேயான தொலைவை கிலோ பார்செக் 
அலகால் விஞ்ஞானிகள் குறிபிடுகின்றனர்.1000 பார்செக் = 1 கிலோ பார்செக். இதன் தொலைவு 3262 ஒளி வருடங்கள்.
வினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 3262 வருடங்களில் ஒரு பார்செக் தொலைவைக் கடந்துவிடலாம்.
நாம் இருக்கும் பூமியிலிருந்து மில்க்கி வே எனும் இப்பால்வீதியின் மையம் 8 கிலோ பார்செக் தொலைவில் இருக்கிறது.
மேலும் மெகா பார்செக், ஜிகா பார்செக் உள்ளிட்ட அளவுகளும் புழக்கத்தில் உள்ளன.

புகைப்பட உதவி: Swinburne Astronomy இணையத்தளம், Regentsearth இணையத்தளம், 123rf இணையத்தளம் மற்றும் brilliant.org இணையத்தளம்.


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

வானியல் - 30 Magnetospheric MultiScale Mission எனும் MMS

Magnetospheric MultiScale Mission                          சூரியனின் காந்தவிசைக் கோடுகள் பூமியின் காந்தவிசைக் கோடுகளுடன் இணையும் போது ஏற்படும் விளைவுகளை (Magnetic reconnection) ஆராய செயல்படுத்தப்படுவதே  Magnetospheric MultiScale Mission சுருக்கமாக MMS. வழக்கம் போல நாசா -வின் திட்டம் இது.


The remains of the solar filament arrow on June 17, first sighted on May 28.
                    2015 மார்ச் 13 அன்று அட்லஸ் V ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா -வின் திட்டங்களெல்லாம் மலைக்க வைப்பவை. நாசாவின் விண்வெளித் திட்டங்களைத் தாண்டி உலகின் பிற விண்வெளி அமைப்புகளால் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

 

                   சூரியனில் ஏற்படும் புயல்களால் அதன் காந்தப்புலக் கதிர்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன. அவ்வாறு சிதறடிக்கப்படும் காந்தப்புலக் கதிர்கள் விண்வெளியிலுள்ள அனைத்தையும் தாக்குகின்றன. பூமியில் நமக்கு ஏற்கனவே உள்ள பூமியின் காந்தக்கதிர்களுடன் அவை சேரும் போது பூமியிலும் பூமியின் வான்பரப்பிலுள்ள செயற்க்கைக்கோள்களிலும் ஏற்படும் மாற்றங்களை அறிய ஒரே மாதிரியான நான்கு செயற்கைக் கோள்களை நாசா விண்ணில் அனுப்பியுள்ளது. காந்தக் கதிர்களின் வீச்சு, அவற்றின் நிலை மற்றும் காந்தக் கதிர் முப்பரிமாண வரைபடம் தயாரிப்பதும் இதில் அடக்கம்.

Tetrahedron.jpg

                  கனமுக்கோணத்தின் நான்கு முனைகளையும் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். அந்த முனைகளின் இடத்தில் செயற்கைக் கோள்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நான்கும் ஒத்திசைந்து இயங்கும். நான்கு செயற்கைக் கோள்களும் தாயாரான போது எடுத்த புகைப்படம் கீழே...


MMS Spacecraft 001


இச்செயற்கை கோள்களிலுள்ள கருவிகளுள் சில


 • Plasma analyzers
 • Energetic particle detectors
 • Magnetometers
 • Electric field instruments


http://www.nasa.gov/sites/default/files/thumbnails/image/mms_study_areas.jpg 

                         ட்லஸ் V ராக்கெட் மூலம் ஏவப்பட்டு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் நான்கு செயற்கைக் கோள்களும் 5 நிமிட இடைவெளியில் பிரிந்து சென்று ஏற்கனவே குறிப்பிட்ட கனமுக்கோண வடிவில் நிலைகொண்டன. இந்த செயற்கைக் கோள்களில் இருக்கும் மோட்டார்களை இயக்குவதன் மூலம் இவற்றிற்கிடையேயான தொலைவை பல ஆயிரம் கிலோமீட்டர்கள் முதல்10 கிலோமீட்டர் வரை மாற்ற இயலும். இந்த வகை மோட்டர்களை Onboard propulsion என்பர்.


 

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்

 • எம்மாதிரியான நிகழ்வுகளின் மூலம் இவ்விளைவுகள் (Magnetic reconnection) நிகழ்கின்றன.
 • இந்த விளைவை (Magnetic reconnection) எது தீர்மானிக்கிறது. 
 • இவ்விளைவு (Magnetic reconnection) நடக்கும் பகுதியின் அமைப்பு. 
 • இவ்விளைவு (Magnetic reconnection) நிகழும் போது எலெக்ட்ரான்களின் பங்களிப்பு. 
உள்ளிட்ட பல விஷயங்களை ஆராயவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 

நாசாவின் ஐந்து வருட சூரியனின் 'டைம் லேப்ஸ்' வீடியோ கீழே..
                ம் ஐ.எஸ்.ஆர்.ஓ -வும் 'ஆதித்யா' திட்டம்னு ஒன்றை 2008 -ல் அறிவித்தது. 2017 - 2018 திட்டக்காலம் என கூறப்பட்டது. அதன் தற்போதைய நிலமை தெரியவில்லை.

புகைப்பட உதவி: நாசா இணையத்தளம் மற்றும் thunderbolts இணையத்தளம்.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Saturday, June 13, 2015

வானியல் - 28 ரொஸெட்டா (Rosetta)

ரொஸெட்டா (Rosetta)
எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது பத்தாவது.
                     காஸினி, டான், பயோனியர் என பல விண்வெளித் திட்டங்கள் என்னைக் கவர்ந்தவை. பத்து என சுருக்கிக் கொண்டதால் அதில் கடைசி இந்த 'ரொஸெட்டா'. இப்பத்துத் திட்டங்களில் முதலாவதான 'ஹயபுஸா' -வைப்போன்றது இத்திட்டம். 'ஹயபுஸா' விண்கற்களை (Asteroid) ஆராய ஜப்பானால் அனுப்பி பாதி வெற்றி பாதி தோல்வி என விடைதெரியாக் கேள்வியுடன் முடிந்த திட்டம். 'ரொஸெட்டா'வும் அத்திட்டத்தை ஒத்தது. அதில் விண்கல் எனில் இதில் எரிகல். ஏற்கனவே பார்த்த கைப்பர் பட்டைப் பகுதியிலிருந்து அத்துவாரிக் கொண்டு சூரியக்குடும்பத்தினுள் வரும் எரிகல்லினை ஆராய ஐரோப்பிய விண்வெளி அமைப்பினால் மார்ச் 2, 2004 அன்று அனுப்பப்பட்டது ரொஸெட்டா. எரிகல்லின் பெயர் ''எரிகல் 67பி'' (Comet 67P) பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் எற்ப்புவிசையைப் பயன்படுத்தி ரொஸெட்டா சென்றது. ஐரோப்பிய நாடுகள் 14 மற்றும் அமெரிக்காவும் இத்திட்டத்தில் பங்குபெறுகிறது.

Rosetta


உருவ அமைப்பு: 

     ரொஸெட்டாவின் வடிவம் 2.8 x 2.1 x 2.0 அளவுடையது. அலுமினியத்தாலானது இது. இதில் 2.2 மீட்டர் விட்டமுடைய தகவல்தொடர்பு ஆண்டெனா இருக்கும். மேலே உள்ள படத்திலிருக்கும் சூரியத் தகடுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை 32 மீட்டர்கள் நீளம். அதிக அளவு சூரிய சக்தியை உள்வாங்கும் பொருட்டு 180 டிகிரி அளவில் திரும்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 850 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும். ரொஸெட்டாவின் மொத்த எடை 3000 கிலோகிராம். இதில் 24 bipropellant 10N thrusters இருக்கிறது. இது பாதை மாற்றம் மற்றும் பிற செயல்களுக்காக.

உபகரணங்கள்:

             இந்த ரொஸெட்டாவில் 11 அறிவியல் உபகரணங்கள் மற்றும் விண்கல்லின் அருகில் செல்லும் போது அதில் தரையிறங்கி ஆராய ஓரு ''லேண்டர்'' உள்ளது. இந்த உபகரணங்களெல்லாம் ரொஸெட்டாவின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டு எப்போதும் ''எரிகல் 67பி''-யைப் பார்த்தபடியே இருக்கும்படி ரொஸெட்டா சென்றுகொண்டிருக்கிறது.

ரொஸெட்டா லேண்டர்:
          மொத்தம் ஒன்பது சோதனைகள் செய்ய திட்டமிட்டு இந்த லேண்டர் வடிவமைப்பட்டுள்ளது. இதன் எடை 21 கிலோகிராம். சிறிய ''ட்ரில்லிங்'' மிஷினும் உண்டு இதில். ஒரு வாரம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எரிகல் 67பி சிறியது என்பதான் அதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. எனவே இந்த லேண்டர் அந்தன் ஈர்ப்பு விசையை எளிதாக மீறி விண்வெளியில் நழுவிச் செல்லும் வாய்ப்பும் அதிகம். எனவே லேண்டர் இறங்கியதும் நங்கூரம் போன்ற ஒன்றின் மூலம் எரிகல்லுடன் நிலையாக இருக்கும்படி செய்யப்படும். எரிகல்லின் அருகில் சென்றதும் ரொஸெட்டாவிலிருந்து தானாகவே பிரிந்து எரிகல்லில் இறங்கும்படி திட்டமிடப்பட்டது. எரிகல் 67பியை நோக்கிச் செல்லும் ரொஸெட்டா போகிற வழியில் எதிர்படும் வேறு இரண்டு விண்கற்களையும் ஆராய்ந்தது. 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரொஸெட்டாவின் கருவிகள் பெரும்பான்மையானவை அணைக்கப்பட்டு தூங்கும் நிலையில் எரிகல் 67பி-யை நோக்கி செலுத்தப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்:


 • 2014 ஜனவரி - மே: தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட ரொஸெட்டாவில் உள்ள 24 bipropellant 10N thrusters பலமணிநேரம் இயக்கப்பட்டு ''எரிகல் 67பி'' யை நோக்கி ரெஸாட்டாவின் பாதை வினாடிக்கு 2 மீட்டர்கள் எனும் வேகத்தில் மாற்றப்பட்டது. இவ்வாறு செய்வதற்கு கிட்டத்தட்ட 90 நாட்கள் ஆனது.
 • 2014 ஆகஸ்டு: ரொஸெட்டா எரிகல்லிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் போது அதன் காமிராக்கள் இயக்கப்பட்டு எரிகல்லின் மேற்பரப்பின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தை முடிவு செய்ய இயலும். மேலும் எரிகல்லில் திசைவேகம், சுழலும் அச்சு, நியூக்ளியசுக்கும் ரொஸெட்டாவிற்குமான தொலைவு உள்ளிட்ட பல விஷயங்கள் பெறப்பட்டன.
 • 2014 நவம்பர்: லேண்டர் எரிகல்லிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் (உயரத்தில்?) இருக்கும் போது தரையிறங்கியது.  தரையிறங்கிய வேகம் வினாடிக்கு ஒரு மீட்டருக்கும் குறைவு. இறங்கியது எரிகல்லினை லேண்டர் புகைப்படமெடுத்து அனுப்பியது.
 • 2014 நவம்பர் - 2015 டிசம்பர்: ரொஸெட்டா எரிகல்லைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதன் மூலம் இன்னும் அதிகத் தகவல்களைப் பெற இயலும். பின்னர் எரிகல்லின் பாதை சூரியனைக் கடந்து விண்வெளியின் தொலைதூரத்தில் சென்றுவிடும். ரொஸாட்டாவிற்கும் பூமிக்குமான தொடர்பும் அறுந்துவிடும்.

ஆராய்ச்சி முடிவுகள்:


 • எரிகல்லின் வெப்பநிலை -70 டிகிரி செல்ஸியஸ்.

Comet 67P on 14 March 2015 – NavCam


 • எரிகல்லில் மேற்பரப்பு தூசுகளால் ஆனது.
 • இதில் பெரும்பாலும் 'போரஸ்' உள்ளது.
 • கார்பன் மோனாக்ஸைடு, மெத்தனால், மீத்தேன், அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகிய வாயுக்கள் உள்ளன.
 • எரிகல்லில் இருக்கும் தண்ணீருக்கும் பூமியில் இருக்கும் தண்ணீருக்கும் அதன் அணு அமைப்பில் வேறுபாடு இருப்பதாக கண்டுணரப்பட்டுள்ளது. (இரண்டு வித ஹைட்டிரஜன்கள்)
 • நைட்டிரஜன் அணுவும் இருப்பதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த் எரிகல் மிகமிகப் பழமையானது என தெரியவருகிறது.
              ரொஸெட்டாவிலிருந்து லேண்டர் இறங்கிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. தேவையான சோதனைகள் செய்து முடிந்ததும் லேண்டர் செயலிழந்தது. ரொஸெட்டா இந்த வருட இறுவரை பூமியுடன் தொடர்பில் இருக்கும். அதன் மூலம் எரிகல் தொடர்பான அதிகத் தகவல்களைப் பெறலாம்.

தற்போதையச் செய்தி: இக்கட்டுரை 13-6-2015 அன்றே எழுதி முடிக்கப்பட்டது. பதிவேற்றிய இன்று (14-06-2015) ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் செய்திக் குறிப்பொன்று எரிகல் 67பி- யில் இறங்கிய லேண்டர் சூரிய ஒளி பட்டதும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  முதலில்  லேண்டர் இறங்கிய இடம்சூரிய ஒளி அதிகம் விழாத இருட்டான இடம் என்பதால் மின்சக்தி குறைவாகவே கிடத்தது. அதன் மூலம் மின்சக்திக் குறைவால் செயலிழந்தது. எரிகல் சூரியனை நோக்கிச் செல்வதால் லேண்டரின் சூரியத் தகடுகளில் ஒளி பட்டு 24 வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பான தகவல் கீழே...
 2014 நவம்பர் 13 அன்று செயலிழந்த லேண்டர் 13 ஜூன் 2015 அன்று 300 -க்கும் அதிகமானத் தகவல் பெட்டகங்களை ரொஸெட்டா மூலம் ஜெர்மானிய விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லேண்டர் சூரிய ஒளி விழும் பகுதியில் இருப்பதாக உணரப்பட்டு மேலதிக தகவல்கள் பெறப்பட்டன. -35 டிகிரி வெப்ப நிலையும் 24 வாட் மின்சாரமும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மேலாளர் 'லேண்டர் தொடர்ந்து செயல்படும்' என இன்று (14-06-2015) அறிவித்துள்ளார். இன்றைய நிகழ்வில்  லேண்டர் தொடர்ச்சியாக 85 வினாடிகள் தொடர்பில் இருந்துள்ளது. லேண்டரில் உள்ள  8000 தகவல் பெட்டகங்கள் விரைவில் நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

புகைப்பட உதவி: ஐரோப்பிய விண்வெளி அமைப்பு.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 
Sunday, June 7, 2015

வானியல் - 26 க்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)

க்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)
எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது எட்டாவது.

            செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசாவால் அனுப்பப்பட்டதுதான் இந்த 'க்யூரியாஸிட்டி' உலாவி. இது கார் வடிவில் இருக்கும் 'ரோபாட்'. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்றி அமெரிக்காவின் கேப் கேர்னிவரல் ஏவுதளத்திலிருந்து 'அட்லஸ் V' ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? மேலும் அங்கு வேறு ஏதேனும் உயிரினங்கள் இருக்குமா என்பதை ஆராய்வது.

               செவ்வாய் கிரகத்தில் Aeolis Palus எனுமிடத்தில் 2012 ஆகஸ்டு 6 அன்று இந்த ரோபாட் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

ரோபாட் பற்றிய விவரங்கள்:
 • இது கார் வடிவ அமைப்பு.
 • இதன் எடை 899 கிகி. இதில் 80 கிகி உபகரணங்களின் எடை.
 • இதன் வடிவம் நீளம்: 2.9 மீ, அகலம்: 2.7 மீ, உயரம்: 2.2 மீ.
 •  இதன் மின்சாரத் தேவைக்காக Radioisotope thermoelectric generator (RTG, RITEG) பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே வைக்கிங் திட்டத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது இது.

Rover Environmental Monitoring Station (REMS) on NASA's Curiosity Mars rover              இந்த ரோபோ கட்டளைக்கு ஏற்ப நகரும். மேலும் தரையில் துளையிட்டு மண்ணின் தன்மையை ஆராயும். இதில் பல கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை எடுக்கும் புகைப்படங்கள் செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் செயற்க்கைக்கோளுக்கு அனுப்பப்பட்டு நாம் ஏற்கனவே பார்த்த DSN ஆண்டெனாக்கள் மூலம் பூமியை வந்தடைகின்றன. 'ரிலே ரேஸ்' மாதிரி எனச் சொல்லலாம். இந்த ரோவரை அனுப்பும் முன்னர் இது செவ்வாயில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

ரோவர் துளையிட்டு ஆராய்ந்த செவ்வாயின் நிலப்பரப்பு


                  இந்த ரோவரில் நீண்ட கைகள் போன்ற அமைப்பும் அதில் பல கேமிராக்களும் உள்ளன. இவை எடுக்கும் படங்களை ஒன்றாக இணைத்து 'பனோராமிக்' புகைப்படங்களாக 'நாசா' வெளியிடுகிறது. அதாவது பல புகைப்படங்கள் இணைந்த ஒரு புகைப்படம். எனவே அப்புகைப்படத்தில் ரோவரின் கை தெரியாது. அப்படியான ஒரு 'செல்பி' புகைப்படம் கீழே.

Updated Curiosity Self-Portrait at 'John Klein'
செல்பி


இதிலுள்ள உபகரணங்கள்:

பல்வேறு சோதனைகளைச் செய்யவும் புகைப்படமெடுக்கவும் பல கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ரோவரும் அதிலுள்ள கருவிகளும்


 • MastCam system இரண்டு கேமிராக்கள் உடைய உபகரணம்.
 • ChemCam கேமிரா
 • ChemCam மண் மற்றும் பாறைகளை ஆராயும் கருவி. 
 • NAVCAMS 45 டிகிரி கோண அளவுள்ள கேமிராக்கள். முப்பரிமாணப் படமெடுக்க உதவும்.
 • REMS கருவி. ஈரப்பதம், அழுத்தம், வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் புற ஊதாக்கதிர்களின் அளவு ஆகியவற்றை ஆராயும்
 • HAZCAMS நான்கு கருப்பு வெள்ளை கேமிராக்கள் ரோவரை சரியாக செலுத்த உதவுகிறன.
 • MAHLI ரோவரின் கையில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கேமிரா 1600×1200 'பிக்ஸல்' புகைப்படமெடுத்து அனுப்பும்.
 • APXS சோதனை செய்ய வேண்டிய மாதிரிகளைச் சோதனையிடும்.
 • CheMin மண் மற்றும் பாறையிலுள்ள கனிமங்களை ஆராயும்.
 • SAM  செவ்வாயின் வளி மண்டலம் மற்றும் தரையிலுள்ளவற்றை ஆராயும்.
 • Dust Removal Tool துளையிடும் பரப்பிலுள்ள தூசுகளைச் சுத்தம் செய்யும் கருவி.
 •  RAD கதிர் வீச்சை அளப்பதற்கு.
 • DAN நீர் மற்றும் பனிக்கட்டி சோதனைக்கான கருவி.
 • MARDI புகைப்படமெடுப்பதற்கான கேமிரா.
 • Robotic arm எனும் கேமிராக்கள் பொருத்தப்பட்ட கை.
MARDI கேமிரா

             இந்தத் திட்டத்திற்கு ஆன மொத்தச் செலவு 250 கோடி அமெரிக்க டாலர்கள். 'கேப்ஸ்யூல்' உள்ளே வைக்கப்பட்டிருந்த 'ரோவர்' செவ்வாயின் வளிமண்டலத்தை அடைந்ததும் செவ்வாயின் தரைப்பகுதியை நோக்கி விழ வைக்கப்பட்டது. ஈர்ப்புவிசை மற்றும் திசைவேகத்தைக் குறைக்க 'சூப்பர் சானிக்' பாராசூட் குடைகள் பயன்படுத்தப்பட்டது. இவை 'ரோவர்' விழும் வேகத்தை 322 கிமீ/மணி- யாகக் குறைத்தன.


An image showing NASA's Curiosity rover being lowered to the Martian surface by a sky crane.
வேகத்தைக் குறைத்து ரோவரைக் கீழே இறக்கும் 'ஸ்கைகிரேன்'


     பின்னர் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த 'ஸ்கை கிரேன்' ராக்கெட் எஞ்சின் இயக்கப்பட்டு வேகம் குறைக்கப்பட்டது. 'ரோவர்' செவ்வாயின் தரையைத் தொடவும் 'ஸ்கை கிரேன்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. இப்போதும் 'ரோவர்' எதையாவது துளாவியபடி நாசா விஞ்ஞானிகளின் கட்டளைப்படி இயங்கிக் கொண்டிருக்கும்.

50 செமீ விட்டமுடைய ரோவரின் சக்கரம்

         இரண்டு வருட முடிவில் இத்திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. இதுவரை 'ரோவர்' 10 கிமீ தூரம் நகர்ந்துள்ளது. மனித அறிவின் மகத்தான சாதனை இந்த ரோவர். செவ்வாயைப் பற்றியும் அதில் குடியேற்றங்கள் அமைக்க முடியுமா என்பதைப் பற்றியுமான அதிக தகவல்கள் இதன் மூலம் பெறப்படுகின்றன.

செவ்வாயில் ரோவர் எடுத்த சில புகைப்படங்கள் கீழே:

Bluish Color in Broken Rock in 'Yellowknife Bay'
ரோவர் ஏறிச் சென்றதில் உடைந்த பாறை

First Curiosity drilling sample in the scoop
முதன் முதலில் துளையிட்டு செய்யப்பட்ட மண் சோதனை


End of Curiosity's extended arm
ரோவரின் கைMAHLI's first night imaging of Martian rock
MAHLI கேமிரா செவ்வயின் பாறையை இரவில் எடுத்த முதல் புகைப்படம்

First Use of Mars Rover Curiosity's Dust Removal Tool
துளையிடும் முன் Dust Removal Tool சுத்தம் செய்த இடம்
புகைப்பட உதவி: விக்கிப்பீடியா மற்றும் நாசா இணையத்தளம்.
கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.   

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...