Knowledge is good only if it is shared.

Monday, April 20, 2015

வானியல் - 27 ஃபால்கன் (Falcon)


 

ஃபால்கன் 
எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது ஒன்பதாவது.

 


              இருப்பதிலேயே 'ஸ்டைலிஷான' ராக்கெட் இதுதான். 'ஸ்டைலிஷ்' ராக்கெட் மட்டுமல்ல கொஞ்சம் வித்தியாசமானதும் கூட. 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பு இந்த 'ஃபால்கன்'. தற்போதைக்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' 'டிராகன்' எனும் 'கேப்ஸ்யூல்' முலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


'டிராகன்' எனும் 'கேப்ஸ்யூல்''டிராகன்' எனும் 'கேப்ஸ்யூல்' பூமிக்குத் திரும்பிய பின்னர்.பிறகாலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆட்களைக் கொண்டு செல்லும்  திட்டமும் இருக்கிறது என தெளிவாக அறிவித்துவிட்டார்கள். ஆதாவது ரஷ்யாவின் 'சோயூஸ்' ராக்கெட்டிற்கு மாற்றாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 'ஷட்டில்' அடிக்கப்போகும் ராக்கெட் இது.

ஃபால்கன் 9          இதன் 'ஸ்பெஷாலிட்டி' அது மட்டுமல்ல. பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுவதற்கு அதிக செலவு ஆகும். ஆனால் 'ஸ்பேஸ் எக்ஸ்'- ன் திட்டத்தின்படி அச்செலவு கணிசமாகக் குறையும். கணிசமாக என்றால் பத்தில் ஒரு பங்கு. தற்போதைக்கு ராக்கெட் விண்ணில் ஒரு கிலோமீட்டர் உயரம் செல்ல 5,000 அமெரிக்க டாலர்கள் ஆகிறது. இவர்கள் பயன்படுத்தும் ராக்கெட்டுகள் வெற்றி பெற்றால் வெறும் 500 டாலர் செலவுதான் ஆகும்.
மெர்லின் 1D எஞ்சின்


மெர்லின் 1D எஞ்சின்          இவர்களின் திட்டம் வித்தியாசமானது. ராக்கெட்டுகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளைக் (ஸ்டேஜ்) கொண்டிருக்கும். குறிப்பிட்ட உயரம் சென்றதும் ஒவ்வொரு நிலையாகப் பிரிந்து விழுந்துவிடும். அவ்வாறு பிரிந்து கீழே விழுபவற்றை பத்திரமாக விழச்செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்பதே இவர்களின் திட்டம்.

மடக்கி வைக்கப்பட்ட கால்களுடன் ஃபால்கன் ஹெவி
            வெறும் கையில் முழம் போடுவது போன்ற திட்டம் இது. டன்கள் கணக்கான கிலோ எடையுள்ள 'கோர்' போன்றவற்றைப் பத்திரமாக கீழே வரவைத்து மீண்டும் பயன்படுத்த முடியுமா என்ன? முடியும் என அடித்துச் சொன்னதுடன் அதில் முக்கால்வாசிக் கிணற்றையும் தாண்டிவிட்டது 'ஸ்பேஸ் எக்ஸ்'. கடந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 'கார்கோ'வை அனுப்பிவிட்டு கீழே விழுந்த ராக்கெட்டின் ஸ்டேஜ் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பில் வந்தது. அதிக lateral velocity- யின் காரணமாக முழு வெற்றியடையவில்லை. இக்கட்டுரையை எழுதும் வரை இதுதொடர்பான தொழில்நுட்ப விவரம் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் வெளியிடவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று முறை ஏவும் போது வெற்றியை எட்டிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.


ஃபால்கன் 9 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் ஃபால்கன் 9, ஃபால்கன் ஹெவி மற்றும் டிராகன் ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்திவருகிறது.
 • இவ்வருடத்தின் பிற்பகுதியில் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது இதுதான் உலகின் அதிக திறனுடைய ராக்கெட்டாக இருக்கும்.
 • இதற்கு அடுத்த நிலையிலுள்ள டெல்டா ராக்கெட்டைவிட இருமடங்கு எடையை மூன்றில் ஒரு பங்கு செலவில் எடுத்துச் செல்லும்.
 • 53 மெட்ரிக் டன் எடையைத் தூக்கிச் செல்லும் வல்லமை உடையது.
 •  இந்த ராக்கெட்டில் மூன்று ஃபால்கன் 9 எஞ்சின் மற்றும் 27 மெர்லின்எஞ்சின்கள் இருக்கும்.
 •  இந்த எஞ்சின்கள் அனைத்தும் சேர்ந்து 40 இலட்சம் பவுண்டு 'தொரஸ்டை'க் கொடுக்கும்.
 • இந்த ராக்கெட்டுகள் மூலம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குப் போக முடியும்.
இவைதான் இந்த ராக்கெட்டின் சிறப்பு.

இன்னும் சில விவரங்கள்:
 • இவற்றின் மூலம் செயற்கைக்கோளை (பே லோடு) LEO அல்லது GTO வரை எடுத்துச் செல்லலாம்.
 • இரண்டாவது நிலையிலுள்ள எஞ்சின் 375 வினாடிகள் எரிந்து 801 கிலோ நீயூட்டன் 'த்ரஸ்டை'க் கொடுக்கும்.
 • முதல் நிலையில் மூன்று 'கோர்'கள் (இரண்டு பூஸ்டர் என்றும் சொல்லலாம்) இருக்கும்.
 • மூன்று கோர்களிலும் மூன்று எஞ்சின்கள்.
 • தரையிலிருந்து கிளம்பும்போது மூன்று கோர்களின் எஞ்சினும் முழுத் திறனில் இயங்கும்.
 • குறிப்பிட்ட தொலைவு மேலே சென்றதும் நடுக் கோரில் உள்ள எஞ்சின் இயக்கத்தைக் குறைத்து பக்கவாட்டில் முழுத்திறனில் இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு கோர்கள் (பூஸ்டர்கள்) எரிந்து முடித்து மையக் கோரிலிருந்து பிரிந்ததும், மையக் கோரின் எஞ்சின் மீண்டும் முழுத்திறனில் இயங்க ஆரம்பிக்கும்.
 • மையக்கோரிலிருந்து பிரிந்த பூஸ்டர்களில் சிறிது எரிபொருள் மீதமிருக்கும். அது இப்பூஸ்டர்கள் 'ஸ்பேஸ் எக்ஸ்' தரைத் தளத்திற்கு பத்திரமாக வந்து இறங்க உதவும்.
 • 27 மெர்லின் எஞ்சின்கள், ஏதாவது ஒரு எஞ்சின் இயங்காமல் இருந்தாலும் திட்டமிட்டபடி ராக்கெட்டிற்கு சக்தியைக் கொடுத்து செலுத்த வல்லவை.
 • மூன்று கோர்களிலும் கீழே கால்கள் போன்ற அமைப்பு இருக்கும். இவை இக்கோர்கள் மீண்டும் 'ஸ்பேஸ் எக்ஸ்' தளத்திற்கு வரும்போது பத்திரமாக கீழே இறங்கி செங்குத்தாக நிற்ற உதவும்.
இவ்வாறு நிற்கும் நிலையில் ஏற்பட்ட திசைவேக பிரச்சனையில்தான் கடந்த வாரம் (14 ஏப்ரல்) செங்குத்தாக நிற்க இயலாமலாகிவிட்டது.
thumbnail
ஃபால்கன் ஹெவி
தொழில்நுட்ப விபரம்:
உயரம்: 68.4 மீட்டர்.
மொத்த அகலம் (மூன்று கோர்களும் இணைந்திருக்கும் போது): 11.6 மீட்டர். 

நிலை: 2

பூஸ்டர்கள்(பக்கக் கோர்கள்): 2

புவியின் தாழ்வட்டப் பாதைக்குத் தூக்கிச் செல்லும் எடை: 53,000 கி.கி. உலகிலேயே இதுதான் அதிகமானது.

geostationary transfer orbit (GTO) தூக்கிச் செல்லும் எடை: 21,200 கி.கி.

செவ்வாய் கிரகத்திற்குக் தூக்கிச் செல்லும் எடை: 13,200 கி.கி.

'ஃபால்கன்' 'ஹெவி ராக்கெட்' இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான பயன்பாட்டிற்கு வந்துவிடும் என 'ஸ்பேஸ் எக்ஸ்' அறிவித்துள்ளது. அப்படியானபட்சத்தில் சர்வதேச அளவில் மாபெரும் மாற்றமாக இது அமையும். ராக்கெட் ஏவுவதற்கான செலவு கணிசமாகக் குறையும் என்பதால் 'ஸ்பேஸ் எக்ஸ்' அதிக அளவில் ராக்கெட்டுகளை ஏவிக் கொடுக்கும். இதனால் நேரடிப் பாதிப்பிற்கு உள்ளாவது ரஷ்யாவாக இருக்கலாம் என்பது எனது யூகம். தற்போதைக்கு 'ப்ரோட்டான்' ராக்கெட் 'ஃபால்கன்' ராக்கெட்டுக்கு போட்டியாக இருக்கும் என ரஷ்ய விண்வெளித்துறை அதிகாரியின் கட்டுரை ஒன்றை முன்பு படித்திருந்தேன். மேலும் 2025- ல் நாம் ஏற்கனவே பார்த்த 'அங்காரா'வும் 'ஃபால்கன்' ராக்கெட்டுக்கு போட்டியாக இருக்கும் என்கின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். என்னைப் பொறுத்தவரை அதற்கான வாய்ப்பு குறைவு. இது போன்ற திரும்பிப் பயன்படுத்தும் ராக்கெட்டுகள்தான் செலவைக் குறைப்பவை. எனவே அவையே எதிர்காலத்தில் பரவலாகுவபவை. ஐ.எஸ்.ஆர்.ஓ விடம் கூட இம்மாதிரியான திட்டம் ஒன்று இருக்கிறது (அமெரிக்காவின் 'ஷட்டில்' திட்டத்தை ஒத்தது). விரைவில் ரஷ்யாவும் இம்மாதிரியான திட்டத்தில் முழு மூச்சாக இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

புகைப்பட உதவி: 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன இணையத்தளம்.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 

Wednesday, April 15, 2015

வானியல் - 25 அங்காரா (Angara)

அங்காரா (Angara)


Picture
அங்காரா


     ஷ்யா பல விண்வெளி சாதனைகளுக்கு சொந்தம். முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளிவீரர் மற்றும் வீராங்கனை என அடுக்கிக்கொண்டே போகலாம். ரஷ்யர்களின் ராக்கெட் இஞ்சின்களே என்னைப் பெரிதும் கவர்பவை. அது ஆர். டி 180 ஆகட்டும் இல்லை ப்ரோட்டானாகட்டும். ரஷ்யாவின் அங்காரா ராக்கெட்டைப் பற்றி இந்தக் கட்டுரையில் கொஞ்சம் பார்ப்போம்.

       ரு ராக்கெட் என்பது அதிக எடையை அதிக உயரத்திற்கு நம்பகமாக தூக்கிச் செல்ல வேண்டும் அவ்வளவே. இதில் தற்போதைய ஜாம்பவான்கள் சிலர். அங்காரா, ஃபால்கன், டெல்டா, ஏரியான் மற்றும் அட்லஸ் உள்ளிட்ட சில ராக்கெட்டுகள். இவர்களில் முன்னணியிலுள்ள வீரன் அங்காரா. ஏன்?

செயற்கைக்கோளை Geostationary Transfer Orbit (GTO)-ல் கொண்டு சேர்க்கும் ராக்கெட்டுகளை ஒர் ஒப்பீடு:
 • பி.எஸ்.எல்.வி 1400 கிலோகிராம்.
 • அட்லஸ் 8,700 கிலோகிராம்.
 • ஏரியான் 10,500  கிலோகிராம்.
 • அங்காரா 12,500  கிலோகிராம்.
 • டெல்டா 13,800 கிலோகிராம்.
 • ஃபால்கன் 21,200 கிலோகிராம்.
ஒப்பீடுகளின்படி ஃபால்கன் அதிகத் திறனுடையது இருந்தாலும் அக்காராவை மெச்சக்காரணம்,
GEO விற்கு அதிக எடையைத் தூக்கிச் செல்லும் திறனின் அடிப்படையில்.
 அதையும் பார்த்துவிடுவோம்.
 • அட்லஸ்: 3,960 கிலோகிராம்.
 • டெல்டா: 6,750 கிலோகிராம்.
 • அங்காரா: 7,600 கிலோகிராம்.
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வியின் GTO திறன்: 5,000 கிலோகிராம். இன்னும் தயாரிப்பில் இருக்கிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ போக வேண்டிய தொலைவு இன்னும் நிறைய இருக்கிறது.


அங்காராவின் ஜாதகம் கீழே:

அங்காரா குடும்பத்தில் மொத்தம் 8 வகை. அங்காரா 1.1 முதல் அங்காரா A7P வரை. இதில் இப்போது உற்பத்தியில் மேம்படுத்திக் கொண்டிருப்பது அங்காரா A5P.  அங்காரா A7P போன்றவை திட்ட வடிவில் இருக்கின்றன. அங்காரா 1.1 -யை ரத்து செய்துவிட்டார்கள். அங்காராவின் Liftoff Thrust 13.45 மெகா நீயூட்டன்.

திட்டம்: 

அங்காரா வகை ராக்கெட்டுகளைத் தயாரிப்பது என ரஷ்யா 1992 -ல் அறிவித்தது. இராணுவம் மற்றும் விண்வெளி இரண்டிற்கும் பயன்படும் வகையில் இவை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதிக எடையுடைய செயற்கைக்கோள்களைச் செலுத்தவும் ராக்கெட்டுகளின் உதிரிப் பாகங்களுக்கு உக்ரைனைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவுமே முக்கியமாக இத்திட்டம் தீட்டப்பட்டது. (தற்போதைய கள நிலவரம்: ரஷ்யா - அமெரிக்கா - உக்ரைன் - ஈரான் உறவுகள். ~~~~ யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் தெளிவாகிறது) மேலும் ''பைகானூர்'' மற்றும் ''கஸாக்ஸ்தான்'' ஏவுதள சிரமங்களையும் கணக்கில் கொண்டு அங்காரா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் அங்காரா 5 ஏவப்பட்டது. அதன் காணொளி கீழே: இரட்டை நிலை கொண்ட இந்த ராக்கெட்டில் (சில சமயம் மூன்று) முதல் நிலையில் RD- 191எஞ்சினும் இரண்டாம் நிலையில் RD- 0124A இஞ்சினும் உபயோகப்படுத்தப்படுகின்றன.


Picture
RD- 191 சோதனை


Picture
RD- 0124A சோதனை

        விண்வெளித்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளின் முடிவின் படி அங்காராவின் ஏவுதளம் Plesetsk பகுதியில் கட்டப்பட்டது. இதுவும் அரசியல் காரணங்களுக்காகவே. பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே  200 மில்லியன் ரூபிள் இதன் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது. இந்த ஏவுதளத்தில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு வசதிகளுக்காக 211 கட்டிடங்கள் பூமிக்குக் கீழே மற்றும் பகுதியளவு கீழே உள்ளன.Picture
அங்காரா லாஞ்ச்பேட்
                  2014 டிசம்பரில் அங்காரா 5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்னும் அங்காரா A7.2, அங்காரா A7.2 B மற்றும் அங்காரா A7P என மாபெரும் திட்டங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷ்யாவிற்கும் அதன் இராணுவ மற்றும் விண்வெளித்துறைக்கு அங்காரா மிகமுக்கியமான ஒன்று. அதனால்தான் அங்காரா 5 ராக்கெட்டை விண்ணில் ஏவ விளாடிமிர் புட்டின் வந்திருந்தார்.

புகைப்பட உதவி: விக்கிப்பீடியா, roscosmos மற்றும் spaceflight101 இணையத்தளங்கள்.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.  


சின்மயியும் வைரமுத்துவும்

           யோசித்துப்பார்க்கிறேன்... சின்மயி ஹெச். ராஜா மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால் நம் சமூகம் எப்படி எதிர்...