Knowledge is good only if it is shared.

Wednesday, March 25, 2015

சரஸ்வதி

            ஒல்லி உடல்வாகு, நீள் வட்ட முகம், மஞ்சள் நிறம் இதுதான் சரஸ்வதி. வேண்டுமானால் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம், கையில் நீளக் குச்சி. அவளுக்கு பத்து பதினொரு வயது இருக்கும் போது 15 பைசா ஐஸ் வாங்கித் தருவதாக ஏமாற்றி பாவாடையைத் தூக்கிக் காட்டச் சொன்னதற்கு என்னோடு படித்த  தேவராஜிடம் காட்டினாள்.

                 ந்திய அரசு ஆவணங்கள் எதிலும் அவளின் பெயர் இருக்காது. அவள் மட்டுமல்ல அவளின் குடும்பத்தினரின் பெயரே இருக்காது. மக்கள்தொகையின் 120 கோடிக்குள் இவர்களின் கனக்கும் வராது. சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் என எதுவும் கிடையாது, கிடைக்கவும் செய்யாது. ஓட்டுரிமை மட்டும் ஆதி காலந்தொட்டே உள்ளது. யார்யார்க்கு எது முக்கியமோ அதுதானே கொடுப்பார்கள்.
               ப்போதும் கற்சாலையின் ஓரங்களில்தான் நடப்பாள். கையில் உள்ள நீண்ட கழியின் முனையில் பாதி அறுக்கப்பட்ட சிரட்டை ஆப்பை இருக்கும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பன்றிவிட்டையை லாவகமாய்  எடுத்து இடக்கை இடுக்கில் இருக்கும் பெட்டியில் போடுவாள். வயலின் உரத்திற்காக அவர்களிடம் பன்றிவிட்டையை விலைக்கு வாங்குவார்கள். பன்றிவிட்டை என இவ்வளவு தெளிவாகவெல்லாம் அந்தக் காலத்தில் நாங்கள் சொல்லுவதில்லை. "பண்ணிவிட்டை" என்றுதான் சொல்லுவோம். அந்தக்காலம் எனில் 80- களின் தொடக்கத்தில், எங்களின் தொடக்கப்பள்ளிக் காலத்தில். "ஐயோ பாவம், பண்ணிவிட்டை லாபம்" என அவர்களைப் பற்றி பாட்டுகூடப் படிப்போம். பள்ளகுளத்தின் கரையில் மைலாடி பி.டபிள்யூ.டி க்குச் சொந்தமான வாகைமரங்கள் உண்டு.  அதன் காயின் கிலுகுகிலுக்குச் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். அவற்றினடியில் பெட்டியை வைத்துவிட்டு உலகை மறந்து குளத்தில் மலாக்க லயித்து நீந்துவாள் சரஸ்வதி.
          பால்ராஜுக்குப் பிறந்த பல குழந்தைகளில் இவளும் ஒருத்தி. பேச்சிப்பாறையிலிருந்து வெள்ளமடம் வழியாக குமரிவரை ஓடும் என்.பி சேனல் எனும் பெயருடைய நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய்க் கரையோரம் தென்னையோலை வேய்ந்த இரண்டு குடிசை வீடுகள்தான் அவர்களுக்குச் சொந்தம். பரம்பரை பரம்பரையாய் பாவித்து பாத்தியப்பட்ட இடம் அது. அரசு நினைத்தாலும் மாற்றமுடியுமோ என்னவோ? ஒன்றில் பன்றிகளும் அதன் குட்டிகளும் இருக்கும் . மற்றொன்றில் சரஸ்வதியின் குடும்பம் இருக்கும். பாம்பு பிடிப்பதிலும், பிளாஸ்டிக் குடங்கள் ஒட்டுவதிலும் நிபுணன் பால்ராஜ். அவன் குடம் ஒட்ட வைத்திருக்கும் கம்பியையும், தீச்சட்டி வாளியையும் அதிசயமாய்ப் பார்ப்போம் அப்போது. எம்ஜியார் ரசிகன் பால்ராஜ். மதுரைவீரன் என மகனுக்கு பெயரும் வைத்தான். மாலை வேலைகளில் வீடுதோறும் கஞ்சி வாங்க வருவாள் சரஸ்வதி. "யம்மா வயிறு பசிக்கிம்மா..கஞ்சி கொடுங்கம்மா" என கெஞ்சும் குரல் கண்ணீரை வரவழைக்கும். திண்ணையில் படிக்கும் நான், " யம்மா.. குளுவச்சி வந்திருக்கா..கஞ்சி வேணுமாம்" எனக் கத்துவேன். அம்மாவுக்கு சரஸ்வதி மேல் எப்பவும் பரிதாபம் உண்டு. கஞ்சியோடு மண்சட்டியில் நுரைத்துக் கொதித்த பழங்கறியும் கிடைக்கும். சில நாட்கள் வாசலிலேயே உக்கார்ந்து கஞ்சியைக் குடித்துவிட்டுச் செல்வாள்.
                  பால்ராஜ் பாம்பு கடித்து இறந்தவுடன் சரஸ்வதிக்கும் கல்யாணம் நடந்தது. மாப்பிளை அதே ஆற்றின் கரையில் 4 கிலோமீட்டர் கிழக்கே மருங்கூரில் எனக் கேள்வி. இவளைவிட மாப்பிள்ளை வசதி அதிகம். நான்கு அல்லது ஐந்து குடிசை அதிக பன்றிகள். அதன் பின் எங்கள் ஊரில் இருந்த அவர்களின் ஆற்றங்கரையோரக் குடிசைகள் அழியத் தொடங்கின. எங்கு சென்றது அந்தக் குடும்பம் எனத் தெரியவில்லை. செம்ப்ராம்பூர் (செண்பகராமன்புதூர்) சேம்பரில் செங்கல் சுமப்பதாகக் கேள்விப்பட்டேன். அரசின் தொகுப்பு வீடு ஒன்றில் குடியிருப்பதாகவும் செய்தி. அவளைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை எனக்கு. அப்படிச் சொல்வதைவிட என் நினைவிலிருந்து சரஸ்வதி மறைந்து போனாள் என்பதே உண்மை.
            காதல், படிப்பு, வேலை, கல்யாணம் என வாழ்க்கை ஓடியதில் சரஸ்வதி நியாபகம் மனதிலிருந்து சுத்தமாய் இல்லை. நட்பென எதுவும் இல்லை. நேரடியாய் அவளிடம் பேசியதும் இல்லை. கிட்டத்தட்ட ஒரே வயதிருக்கும் எனக்கும் அவளுக்கும். மாலையில் கையிடுக்கில் கஞ்சிப்பானையும் வலது கையில் நீண்ட குச்சியுமாய் அவள் தெருவில் வந்தது கூட மங்கலாய்தான் நினைவிருக்கிறது. அவளைக் கண்டதும் அவள் உடலிலிருந்து வரும் நாற்றத்திற்காக, நாய்களெல்லாம் வட்டமாய் நின்று குலைக்கும். அசுர பலத்துடன் விடாமல் குலைக்கும். அதை விரட்டவே அவள் கையில் குச்சி. பெரும்பாலான வீட்டில் கஞ்சிக்குப் பதில் ஏச்சுதான் கிடைக்கும் சாரஸ்வதிக்கு.
                திடீரென சரஸ்வதி நியாபகம் வரக் காரணம், எனது கிறுஸ்துவ நண்பர்கள் பேஸ்புக்கில் இந்துமதம், சாதி, மனுஸ்மிருதி என அவ்வப்போது சில்லறைப் பதிவுகளைப் போடுவதைப் பார்த்ததுதான். அடுத்த முறை சரஸ்வதியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படியும் திருமண வயதில் அவளுக்கு பெண் இருக்கலாம். இருந்தால் எனது கிறுஸ்துவ நண்பர்களிடம் அப்பெண்ணை அவர்களது குடும்பத்தில் சம்பந்தம் முடிக்கச் சொல்ல வேண்டும். இந்துக்கள் மட்டும்தானே சாதி பார்க்கிறார்கள், கிறுஸ்துவர்கள் பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குளுவச்சி என்பதற்காக விலகி ஓடவா போகிறார்கள்? நீங்களும் சரஸ்வதியைப் பார்த்தால் சொல்லுங்கள். அதான் சொன்னேனே...ஒல்லி உடல்வாகு, நீள் வட்ட முகம், மஞ்சள் நிறம் இதுதான் சரஸ்வதி. வேண்டுமானால் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம், கையில் நீளக் குச்சி.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...