Knowledge is good only if it is shared.

Tuesday, March 31, 2015

வானியல் - 24 தொலைதூர வலைப்பின்னல் (DSN)

விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது ஏழாவது. 


DSN எனும் Deep Space Network

http://deepspace.jpl.nasa.gov/images/dsn/1400w_PCD2710_121.jpg
Deep Space Network ஆண்டெனாக்கள்



             விண்வெளியில் அனுப்பும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெறவும், அனுப்பவும் மேலும் அவற்றின் பாதையைக் கட்டுப்படுத்தவும் இவை உதவுகின்றன.  மிகவும் தொலைதூரத்திற்குச் செல்லும் செயற்கைக்கோள்களை வழிநடத்துவது இவையே. உதாரணம், மங்கள்யான் செவ்வாய்க்குச் செல்லும் போது அவ்வப்போது சரியான திசையில் செல்கிறதா?, அவற்றின் பாதையை மாற்ற வேண்டுமா? எனக் கண்காணித்து மங்கள்யானில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை இயக்கி அதன் பாதையை வேகத்தை மாற்றத் துணைபுரிந்தவை இந்த DSN எனும் Deep Space Network. இவை மிகப் பெரிய ஆண்டெனாக்கள், மிகத் தொலைவிற்கு வீரியமிக்க சிக்னலைச் செலுத்த வேண்டுமல்லவா? எனவே ரெம்பப் பெரிசு. அதுபோல அங்கிருந்து அவை அனுப்பும் சிக்னலையும் சிந்தாமல் சிதறாமல் வாங்கவேண்டும்.  


http://deepspace.jpl.nasa.gov/images/DSN.jpg
Deep Space Network ஆண்டெனாக்கள் இரவில்



உலகின் மூன்று இடங்களில்  இந்த ஆண்டெனாக்கள் நிறுவப்பட்டுள்ளன.
  •  அமெரிக்காவின் கோல்ட்ஸ்டோன்
  • ஸ்பெயினின் மாட்ரிட்
  • ஆஸ்திரேலியாவின் கான்பெரா
ஆகிய நகரங்களில் இவை அமைந்துள்ளன. அதற்கு மூன்று இடங்கள் எனில், 360 டிகிரி கோளமான, சுற்றும் பூமியின் எந்தப்  பக்கத்திலிருந்தும் விரும்பும் செயற்கைக் கோளைத் தொடர்பு கொள்வதற்காகத்தான் 120 டிகிரி கோண அளவில் இவை பூமியில் நிறுவப்பட்டுள்ளன. படம் கீழே

Deep Space Network ஆண்டெனாக்களின் அமைவிட வரைபடம்



சரி, இவற்றின் முக்கியப் பணி என்ன?

தகவல் பெறுதல்:
சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவிலுள்ள வியாழன், செவ்வாய், சனி அல்லது புளோட்டோ போன்ற பகுதிகளில் சென்று கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அனுப்பும் தகவல்களைப் பெறுவது. அதன் பின்னர் அவற்றை decode செய்ய வேண்டும்.

செயற்கைக்கோள் கட்டளைகள்:
சென்று கொண்டிருக்கும் செயற்கைகோள்களிலுள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தவும் என்ன மாதிரியான செயல்களைச் செய்ய வேண்டும் என்ற ஆணை பிறப்பிப்பதும்  Deep Space Network ஆண்டெனாக்களின் மூலமே நடைபெறும். தொடர்ந்து செய்ய வேண்டிய செயல்கள் தொடர்பான கட்டளைக் கோப்புகளை அனுப்புவதும் இவற்றின் வழியாகவே.

http://deepspace.jpl.nasa.gov/images/dsn/dsn_now_image3.jpg



கண்காணித்தல்:
செயற்கைக்கோள் சரியான இடத்தில் சரியான திசைவேகத்தில் இலக்கை நோக்கிச் செல்கிறதா எனக் கண்கானிப்பதும் இதன் பணி.

ஆராய்ச்சிகள்:
சனிக் கிரகத்தின் வளையங்கள், பிற கோள்களின் நிலவுகள், விண்கற்கள் மற்றும்  ஐன்ஸ்டீனின் சார்ப்புக் கொள்கை (theory of relativity) போன்றவை தொடர்பான ஆராய்ச்சிகளும் இவற்றின் மூலம் நடைபெறுகிறது.


View of the Canberra Complex
பறவைப் பார்வையில் Deep Space Network ஆண்டெனாக்கள்


              1958 ஜனவரியில் "எக்ஸ்புளோரர்-1" செயற்கைக் கோளை ஏவும் போது அதைக் கண்காணிக்க கலிபோர்னியா, நைஜீரியா மற்றும் சிங்கப்பூரில் கண்காணிப்பு நிலையங்களை அமெரிக்கா தனது விமானப்படை உதவியுடன் நிறுவியதே முதல் தொலைதூர கண்காணிப்பு ஆண்டெனாக்கள் ஆகும். பின்னர் அதே வருடம் அக்டோபரில் இத்திட்டத்தை வளர்த்தெடுத்தது பின்னர் அமெரிக்கா தனது நிலவுத் திட்டமான அப்போலோ திட்டத்திற்கும் இதைப் பயன்படுத்தியது. 26 மீட்டர், 34 மீட்டர் மற்றும் 70 மீட்டர் விட்டமுள்ள மிகப்பெரிய ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டன.


http://eyes.nasa.gov/dsn/images/intro/bg.jpg
கோடிக்கணக்கான கிமீ தொலைவில் சென்று கொண்டிருக்கும் செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ளும் ஆண்டெனா


           எதிர்காலத்தில் சில சிக்கல்களும் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் இப்போது இருப்பதைப் போல இரண்டு அளவுக்கு செயற்கைக்கோள்களைக் கண்காணித்து கட்டளை வழங்க வேண்டும். எனவே புதிய ஆண்டெனாக்களை நிறுவது. இப்போது செயலில் இருக்கும் ஆண்டனாவின் பாகங்களை மாற்ற ஆகும் நேரம் அதிகமாக இருக்கிறது. அந்நேரத்தில் செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது என பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே 34 மீட்டர் புதிய ஆண்டெனாக்கள் நிறுவும் திட்டமும் இருக்கிறது.



DSS-61 Canberra, Australia
விரும்பிய திசையில் விரும்பிய நேரத்தில் விரும்பிய கோணத்தில் திரும்பிக் கொள்ளும்.

                      ங்கள்யான் திட்டத்தின் போது இந்த அமைப்புதான் நமது செயற்கைக்கோளை கண்காணிக்கப் பயன்பட்டது. பெங்களூரு அருகில் "ப்யாலால''  எனும் இடத்தில் 11மீ, 18மீ மற்றும் 32 மீ அளவு ஆண்டெனாக்களுடன்  நமக்கான சிறிய அமைப்பு ஒன்றும் இருக்கிறது. இவற்றின் மொத்தச் செலவு 650 கோடி ரூபாய்். வருங்காலத் திடங்களுக்காக அவற்றை விரிவு படுத்தினால் சுயசார்புடன் இருக்கலாம். அமெரிக்கா,ரஷ்யா, ஐரோப்பா, சைனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே Deep Space Network ஆண்டெனாகளைக் கொண்டுள்ளன.


Sunset shot of the 70m antenna at Goldstone, California.
Deep Space Network ஆண்டெனா

BYU- ங்கிற குரூப் உலகிலேயே மிகப் பெரிய ஆண்டெனாவை அமைத்திருக்கிறார்கள். ரேடியோ டெலஸ்கோப்பிற்காகவும்  Deep Space Network- ற்காகவும். அதன் புகைப்படம் கீழே,

BYU- வின் ஆண்டெனா

           அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் அமைந்துள்ள Deep Space Network ஆண்டெனாக்கள் எந்தச் செயற்க்கைகோளுடன் தகவல் பறிமாற்றத்தில் இருக்கின்றன என்கிற விவரங்களையெல்லாம் அதற்கான இணையத்தளத்தில் அடிப்படைத் தகவல்களுடன் தெரிந்து கொள்ளலாம். அந்தப் புகைப்படத்தில் ஒன்று கீழே,

 
Deep Space Network ஆண்டெனாக்களின் செயல்பாடு



Overview of the entire Madrid Complex
Deep Space Network ஆண்டெனாக்கள்

புகைப்பட உதவி:  
BRIGHAM YOUNG UNIVERSITY இணையத்தளம்
நாசாவின் Jet Propulsion Laboratory இணையத்தளம் மற்றும்  
விக்கிப்பீடியா (Image : By SimonOrJ (Own work) [CC BY-SA 3.0] via Wikimedia Commons)

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 

Wednesday, March 25, 2015

பிஎஸ்எல்வி- சி27 PSLV- C27 (IRNSS-1D)

                 ந்தியாவின் மானத்தைக் பறக்கவிட அரசியல்வாதிகள் இருப்பது போல் நமது பெருமையைப் பறக்கவிட இருக்கும் சிலவற்றுள் ஐஎஸ்ஆர்ஓ வும் ஒன்று. இருக்கும் பொருளாதாரத் தகுதியை வைத்து நாலுகால் பாய்ச்சலில் வேகமெடுக்கும் துறை இது. எப்படிப் பார்த்தாலும் அடிக்கடி வியக்கும் வண்ணம் செய்திகளில் அடிபடுகிறது. இதோ மார்ச் 28, 2015 அன்று IRNSS-1D என அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது ஐ.எஸ்.ஆர்.ஓ. RNSS என்பதை Indian Regional Navigation Satellite என்பர். இதை அழகுத் தமிழில் இந்தியப் பகுதிகான இடஞ்சுட்டும் செயற்கைக் கோள் அமைப்பு எனச் சொல்லலாம். பொதுவாக நேவிகேஷன் செயற்கைக் கோள் இது. இந்த வரிசையின் நான்காவது செயற்கைக் கோள் இது. இந்த வரிசையில் இன்னும் மூன்று செயற்கைக் கோள்கள் பாக்கி இருக்கிறது. ஆம், IRNSS- 1A முதல் IRNSS- 1G வரை மொத்தம் ஏழு செயற்கைக் கோள்களை ஏவும் திட்டம் இருக்கிறது.


IRNSS-1D



             PSLV மிகவும் நம்பகமான vehicle நமக்கு. அதுவும் GSLV மற்றும் GSLV Mark III யைவிட மிகவும் நம்பகமானது. (GSLV Mark III இன்னும் ரெடியாகவில்லை). இந்த வரிசையில் ஏற்கனவே IRNSS- 1A,IRNSS- 1B மற்றும் IRNSS- 1C எல்லாம் ஏவியாகிவிட்டது. அவை நிலை கொண்டுள்ள இடங்கள் கீழே.

IRNSS- 1A

IRNSS- 1B



IRNSS- 1C

                     பிஎஸ்எல்வி- சி27 மூலம் IRNSS-1D எனும் செயற்கைக் கோளை 111.75 டிகிரி கிழக்கே 30.5 டிகிரி சாய்வாக நிறுத்தப்போகிறார்கள். வழக்கம் போல பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் பூமி சுழலும் வேகத்திலே இதுவும் சுழன்று எப்போதும் இந்தியாவைப் பார்க்கும்படி இருக்கும்.

IRNSS-1D


இதன் விவரங்களைப் பார்ப்போம்,

எடை: 603 கிலோகிராம்
உருவம்: 1.58 மீ X 1.5 மீ X 1.5 மீ
மின்சக்தி: 1660 வாட் மின்சாரம் சேமிக்கும் இரு லித்தியம் ஐயான் மின்கலன் 90AH திறனுடையது. இரண்டு சூரியத் தகடுகள்.
இயந்திரம்: 440 நியூட்டன் திரவ Apogee, பன்னிரெண்டு 22 நியூட்டன் த்ரெஸ்டர்.
ஆயுட்காலம்: 10 வருடம்.

IRNSS-1D


சரி, எதற்காக இந்த IRNSS-1C செயற்கைக்கோள்?

  • Navigation
  • Vehicle tracking
  • Precise timing
  • Navigation aid for hikers and travellers
  • Disaster management
  • Integration with mobile phones
  • Mapping and geodetic data capture
  • Visual and voice navigation for drivers.

 


என்னென்ன உபகரணங்களெல்லாம் IRNSS-1C செயற்கைக்கோளில் உள்ளது?


  • Star sensors
  • Global horn
  • Corner cube retro reflector
  • c-band horn
மேலும் ஏவிமுடித்ததும் செயற்கைக் கோளைக் கட்டுப்படுத்தி பாதை மாற்றம் மற்றும் பிற செயல்களுக்காக,
440 நியூட்டன் திரவ Apogee motor மற்றும் 22 நியூட்டன் thursters போன்றவை இருக்கும்.

PSLV- C27



ஏவுதல்:

        மொத்தம் நான்கு நிலை கொண்டது இந்த PSLV-C27  இதில் ஆறு Strap-on உந்துகிகள் (பூஸ்டர்) இருக்கும். பூமியிலிருந்து கிளம்பி 19 நிமிடங்கள் 25 வினாடியில் எல்லாம் முடிந்துவிடும். பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றுமாறு செயற்கைக் கோள் ஏவபட்டுவிடும். நீள்வட்டப்பாதையெனில் பூமிக்கு அருகில் 284 கிமீ தொலைவும் பூமிக்கு தொலைவில் 20,650 கிமீ தொலைவும் இருக்கும். அதன் பின் இயந்திரத்தை இயக்கி 3,600கிமீ வட்டப்பாதைக்கு மாற்றுவார்கள். இதை ஐ எஸ் ஆர் ஓ-வின் ஹசன்(Hassan) கட்டுப்பாட்டு அமைப்பு பார்த்துக் கொள்ளும். இந்தச் செயற்கைக்கோளை 506.83 கிமீ உயரத்தில் 9.59839 கிமீ/வினாடி வேகத்தில் மேலே கொண்டுபோய் தள்ளுவதுதான் PSLV-C27.

PSLV- C27


புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ.


சரஸ்வதி

            ஒல்லி உடல்வாகு, நீள் வட்ட முகம், மஞ்சள் நிறம் இதுதான் சரஸ்வதி. வேண்டுமானால் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம், கையில் நீளக் குச்சி. அவளுக்கு பத்து பதினொரு வயது இருக்கும் போது 15 பைசா ஐஸ் வாங்கித் தருவதாக ஏமாற்றி பாவாடையைத் தூக்கிக் காட்டச் சொன்னதற்கு என்னோடு படித்த  தேவராஜிடம் காட்டினாள்.

                 ந்திய அரசு ஆவணங்கள் எதிலும் அவளின் பெயர் இருக்காது. அவள் மட்டுமல்ல அவளின் குடும்பத்தினரின் பெயரே இருக்காது. மக்கள்தொகையின் 120 கோடிக்குள் இவர்களின் கனக்கும் வராது. சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் என எதுவும் கிடையாது, கிடைக்கவும் செய்யாது. ஓட்டுரிமை மட்டும் ஆதி காலந்தொட்டே உள்ளது. யார்யார்க்கு எது முக்கியமோ அதுதானே கொடுப்பார்கள்.
               ப்போதும் கற்சாலையின் ஓரங்களில்தான் நடப்பாள். கையில் உள்ள நீண்ட கழியின் முனையில் பாதி அறுக்கப்பட்ட சிரட்டை ஆப்பை இருக்கும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பன்றிவிட்டையை லாவகமாய்  எடுத்து இடக்கை இடுக்கில் இருக்கும் பெட்டியில் போடுவாள். வயலின் உரத்திற்காக அவர்களிடம் பன்றிவிட்டையை விலைக்கு வாங்குவார்கள். பன்றிவிட்டை என இவ்வளவு தெளிவாகவெல்லாம் அந்தக் காலத்தில் நாங்கள் சொல்லுவதில்லை. "பண்ணிவிட்டை" என்றுதான் சொல்லுவோம். அந்தக்காலம் எனில் 80- களின் தொடக்கத்தில், எங்களின் தொடக்கப்பள்ளிக் காலத்தில். "ஐயோ பாவம், பண்ணிவிட்டை லாபம்" என அவர்களைப் பற்றி பாட்டுகூடப் படிப்போம். பள்ளகுளத்தின் கரையில் மைலாடி பி.டபிள்யூ.டி க்குச் சொந்தமான வாகைமரங்கள் உண்டு.  அதன் காயின் கிலுகுகிலுக்குச் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். அவற்றினடியில் பெட்டியை வைத்துவிட்டு உலகை மறந்து குளத்தில் மலாக்க லயித்து நீந்துவாள் சரஸ்வதி.
          பால்ராஜுக்குப் பிறந்த பல குழந்தைகளில் இவளும் ஒருத்தி. பேச்சிப்பாறையிலிருந்து வெள்ளமடம் வழியாக குமரிவரை ஓடும் என்.பி சேனல் எனும் பெயருடைய நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய்க் கரையோரம் தென்னையோலை வேய்ந்த இரண்டு குடிசை வீடுகள்தான் அவர்களுக்குச் சொந்தம். பரம்பரை பரம்பரையாய் பாவித்து பாத்தியப்பட்ட இடம் அது. அரசு நினைத்தாலும் மாற்றமுடியுமோ என்னவோ? ஒன்றில் பன்றிகளும் அதன் குட்டிகளும் இருக்கும் . மற்றொன்றில் சரஸ்வதியின் குடும்பம் இருக்கும். பாம்பு பிடிப்பதிலும், பிளாஸ்டிக் குடங்கள் ஒட்டுவதிலும் நிபுணன் பால்ராஜ். அவன் குடம் ஒட்ட வைத்திருக்கும் கம்பியையும், தீச்சட்டி வாளியையும் அதிசயமாய்ப் பார்ப்போம் அப்போது. எம்ஜியார் ரசிகன் பால்ராஜ். மதுரைவீரன் என மகனுக்கு பெயரும் வைத்தான். மாலை வேலைகளில் வீடுதோறும் கஞ்சி வாங்க வருவாள் சரஸ்வதி. "யம்மா வயிறு பசிக்கிம்மா..கஞ்சி கொடுங்கம்மா" என கெஞ்சும் குரல் கண்ணீரை வரவழைக்கும். திண்ணையில் படிக்கும் நான், " யம்மா.. குளுவச்சி வந்திருக்கா..கஞ்சி வேணுமாம்" எனக் கத்துவேன். அம்மாவுக்கு சரஸ்வதி மேல் எப்பவும் பரிதாபம் உண்டு. கஞ்சியோடு மண்சட்டியில் நுரைத்துக் கொதித்த பழங்கறியும் கிடைக்கும். சில நாட்கள் வாசலிலேயே உக்கார்ந்து கஞ்சியைக் குடித்துவிட்டுச் செல்வாள்.
                  பால்ராஜ் பாம்பு கடித்து இறந்தவுடன் சரஸ்வதிக்கும் கல்யாணம் நடந்தது. மாப்பிளை அதே ஆற்றின் கரையில் 4 கிலோமீட்டர் கிழக்கே மருங்கூரில் எனக் கேள்வி. இவளைவிட மாப்பிள்ளை வசதி அதிகம். நான்கு அல்லது ஐந்து குடிசை அதிக பன்றிகள். அதன் பின் எங்கள் ஊரில் இருந்த அவர்களின் ஆற்றங்கரையோரக் குடிசைகள் அழியத் தொடங்கின. எங்கு சென்றது அந்தக் குடும்பம் எனத் தெரியவில்லை. செம்ப்ராம்பூர் (செண்பகராமன்புதூர்) சேம்பரில் செங்கல் சுமப்பதாகக் கேள்விப்பட்டேன். அரசின் தொகுப்பு வீடு ஒன்றில் குடியிருப்பதாகவும் செய்தி. அவளைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை எனக்கு. அப்படிச் சொல்வதைவிட என் நினைவிலிருந்து சரஸ்வதி மறைந்து போனாள் என்பதே உண்மை.
            காதல், படிப்பு, வேலை, கல்யாணம் என வாழ்க்கை ஓடியதில் சரஸ்வதி நியாபகம் மனதிலிருந்து சுத்தமாய் இல்லை. நட்பென எதுவும் இல்லை. நேரடியாய் அவளிடம் பேசியதும் இல்லை. கிட்டத்தட்ட ஒரே வயதிருக்கும் எனக்கும் அவளுக்கும். மாலையில் கையிடுக்கில் கஞ்சிப்பானையும் வலது கையில் நீண்ட குச்சியுமாய் அவள் தெருவில் வந்தது கூட மங்கலாய்தான் நினைவிருக்கிறது. அவளைக் கண்டதும் அவள் உடலிலிருந்து வரும் நாற்றத்திற்காக, நாய்களெல்லாம் வட்டமாய் நின்று குலைக்கும். அசுர பலத்துடன் விடாமல் குலைக்கும். அதை விரட்டவே அவள் கையில் குச்சி. பெரும்பாலான வீட்டில் கஞ்சிக்குப் பதில் ஏச்சுதான் கிடைக்கும் சாரஸ்வதிக்கு.
                திடீரென சரஸ்வதி நியாபகம் வரக் காரணம், எனது கிறுஸ்துவ நண்பர்கள் பேஸ்புக்கில் இந்துமதம், சாதி, மனுஸ்மிருதி என அவ்வப்போது சில்லறைப் பதிவுகளைப் போடுவதைப் பார்த்ததுதான். அடுத்த முறை சரஸ்வதியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படியும் திருமண வயதில் அவளுக்கு பெண் இருக்கலாம். இருந்தால் எனது கிறுஸ்துவ நண்பர்களிடம் அப்பெண்ணை அவர்களது குடும்பத்தில் சம்பந்தம் முடிக்கச் சொல்ல வேண்டும். இந்துக்கள் மட்டும்தானே சாதி பார்க்கிறார்கள், கிறுஸ்துவர்கள் பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குளுவச்சி என்பதற்காக விலகி ஓடவா போகிறார்கள்? நீங்களும் சரஸ்வதியைப் பார்த்தால் சொல்லுங்கள். அதான் சொன்னேனே...ஒல்லி உடல்வாகு, நீள் வட்ட முகம், மஞ்சள் நிறம் இதுதான் சரஸ்வதி. வேண்டுமானால் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம், கையில் நீளக் குச்சி.

Sunday, March 15, 2015

வானியல் - 23 கலிலியோ

விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது ஆறாவது.

      இது வானியல் அறிஞர் கலிலியோ கலிலியைப் பற்றிய கட்டுரை அல்ல. அவரது பெயரைத் தாங்கிய விண்கலன் வியாழனை ஆராய அனுப்பட்டது தொடர்பான கட்டுரை.

         மெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த  கிட்டத்தட்ட 800 விஞானிகள் பங்காற்றிய மிகப்பெரும் திட்டங்களுள் ஒன்று கலிலியோ திட்டம். மொத்தச் செலவு அன்றைய காலகட்டத்தில் 140 கோடி அமெரிக்க டாலர்கள். வெளிநாட்டு உதவியாய் 11 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தது.




Galileo mission graphic
கலிலியோ விண்கலன்

வழக்கம்போல விண்கலத்தின் ஜாதகத்தினைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.



உருவ அளவு: 127 செ.மீ விட்டம், 91 செ.மீ உயரம்.
அறிவியல் உபகரணங்களின் எடை339 கிலோகிராம்.
ஏவப்பட்ட நாள்: அக்டோபர் 18, 1989. 
எடை: 339 கிலோகிராம்
நோக்கம்: வியாழனை ஆராய்வது.
The Galileo Spacecraft
முக்கிய நோக்கம் வியாழனை ஆராய்வதாக இருந்தாலும் போகிற போக்கில் பூமி, வீனஸ், விண்கல், எரி நட்சத்திரம்  ஆகியவற்றை ஆராய்ந்து பின்னர்  வியாழன் கிரகத்தை ஆராயும். ஆம்னி பஸ் போகிற போக்கில் சரக்கு ஏற்றிக் கொண்டு போகிற மாதிரிதான் இதுவும். 


கலிலியோவில்,
  • Solid-state imaging camera 
  • Near-infrared mapping spectrometer
  •  Ultraviolet spectrometer
  •  Photopolarimeter radiometer
  •  Magnetometer
  •  Energetic particles detector
  •  Plasma investigation
  •  Plasma wave subsystem
  •  Dust detector
  •  Heavy ion counter 
ஆகிய உபகரணங்கள் இருந்தன. 2003 செப்டம்பர் வரை இந்த விண்கலன் பயன்பாட்டில் இருந்தது. இது பயணம் செய்த மொத்த தொலைவு  463,17,78,000 கிலோமீட்டர்கள். 


Galileo encounter with Io.png

இன்னும் சில தகவல்கள்,
  • 1610-ல் கலிலியோ வியாழன் கிரகத்தின் நிலவுகளைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரில் இந்த விண்கலன் செலுத்தப்பட்டது.
  • 1973- ல் அனுப்பப்பட்ட "பயோனிர் 10" வியாழனுக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலன்.
  • அக்டோபர் 18, 1989 -ல் கலிலியோ ஏவப்பட்டது.
  • 1991, அக்டோபர் 29- ல் "கேஸ்ப்ரா"ங்கிற விண்கல்லின் அருகே சென்று படமெடுத்து அனுப்பியது.
  • 1993, ஆகஸ்ட் 28- ல் "இடா" எனும் விண்கல்லின் நிலவாகிய  "டாக்டி"யை படமெடுத்து அனுப்பியது.
  • 1995, ஜூலையில் வியாழனை அடைந்தது.
  • வியாழனின் நிலவாகிய "யூரோப்பா"வில் கடல் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியுடன் புகைப்படமெடுத்து அனுப்பியது.
  • வியாழனின் நிலவாகிய "லோ"வின் வெகு அருகில் சென்று படமெடுத்து அனுப்பியது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே அளவுக்கு அதிகமான எரிமலைகளை உடைய நிலவு அது. 
  • 1997-ல் மீண்டும் "யூரோப்பா"வின் அருகில் சென்று படமெடுத்து அனுப்பியது.
  • 2003-ல் வியாழனின் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு அதன் பரப்பில் மோதி தனது மகத்தான பணியை நிறைவு செய்தது.



இதன் முக்கியக் கண்டுபிடிப்புகளாக கீழேயுள்ளவற்றைச் சொல்லலாம்.
  • வியாழனின் வளிமண்டலத்தில் பூமியை விட சக்திவாய்ந்த மின்னல் 
  • வோயஜர் 1 ஏற்கனவே எரிமலைகளைக் கண்டுபிடித்தாலும் கலிலியோ அதைப்பற்றிய அதிகத் தகவல்களைத் தந்தது.
  • வியாழனின் நிலவாகிய "யூரோப்பா"வில் கடல்கள் இருப்பதற்காக ஆதாரம்.
  • வியாழனின் மிகப்பெரிய நிலவாகிய "கனிமீட்"-ன் (சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரியது) காந்தப்புலன்கள்
  •  வியாழனின் நிலவாகிய "கேலிஸ்டோ"-வின் தரைக்கும் கீழே கடல் இருக்கலாம்.
கலிலியோ எடுத்த புகைப்படங்களுள் சில கீழே,

Europa and the Thrace Region
The Asteroid 243 Ida and Its Moon Dactyl
  A Detailed View of Callisto's Surface
 
தொடரும்...


புகைப்பட உதவி:  நாசா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.  







Tuesday, March 3, 2015

வானியல்- 22 ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ



Yearlong Mission
ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ


           வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பு ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ-க்குக் கிடைத்திருக்கிறது. இருவரும் 2015, மார்ச் 27 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லப் போகிறார். இது என்ன பிரமாதமான சாதனையா எனக் கேட்பவர்களுக்கு...

ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி மையத்தில் 2010 ஆம் ஆண்டில்.


            பொதுவாக சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே விண்வெளி வீரர்கள் தங்குவர் (அமெரிக்காவின் அதிக பட்ச சாதனை 215 நாட்கள்). விதிவிலக்காய் ரஷ்யாவின் வீரர்கள் மூவர் ஓராண்டிற்கும் அதிகமாக தங்கியிருந்தனர். அதுவும் 90 களில்  ''மிர்'' விண்வெளி மையத்தில், அதுவும் இந்த அளவுக்கு விஞ்ஞானப் பரிசோதனைகள் நடைபெறாத காலத்தில்.

orion mars
சர்வதேச விண்வெளி மையம்


                 ''ஸ்காட் கெல்லி'' மற்றும் ''மைக்கேல் கோர்னியன்கோ'' ஆகியோரின் உடல் நிலையில் நடைபெறும் மாற்றங்களை ஆராயும் பொருட்டு இந்த முறை இருவரும் ஓராண்டிற்கும் அதிகமாக விண்வெளி மையத்தில் தங்கப்போகிறார்கள். பரிசோதனைகளில் செல்களின் மெட்டோபாலிசம் (cellular metabolism) பற்றி நுணுக்கமாக சோதிக்கப்போகிறார்கள், MRI imaging எனும் நாம் வழக்கமாகச் சொல்லும் MRI ஸ்கேன் பரிசோதனை, உணவு செரிமானத்திற்கான பாக்டீரியாக்கள் குறிப்பாக உடல் பருமன், ஒவ்வாமை (அலர்ஜி), நீரிழிவு மற்றும் மன நலன் தொடர்பான பாக்டீரியா சோதனை போன்றவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். மிக முக்கியமானதாக ஸ்காட் கெல்லியின் சகோதரரும் முன்னார் விண்வெளி வீரருமான ''மார்க் கெல்லி''யின் உடல் நிலையையும் ''ஸ்காட் கெல்லி''யின் உடல் நிலையையும் ஒப்பிடப் போகிறார்கள். இருவரும் இரட்டையர்கள். ''மார்க் கெல்லி'' நாசாவின் பரிசோதனைக் கூடத்திலிருப்பார் அவரது சகோதரர் ''ஸ்காட் கெல்லி'' விண்வெளி மையத்தில் இருப்பார்.

scott kelly 2
ஸ்காட் கெல்லி விண்வெளி நடைக்கான பயிற்சியில்



இதுதொடர்பாக ''ஸ்காட் கெல்லி'' தனது கருத்துகளைச் சொல்லியிருந்தார்.
  • வழக்கான பயணத்தில் ஆறு மாதத்தில் திரும்பி வருவோம் என்ற உணர்வு தோன்றும், ஆனால் இம்முறை ஒருவருட காலமென்பது அதிகம்தான். 
  • தூக்கம் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கப்போகிறது. ஏற்கனவே விண்வெளிமைய வீரர்களில் மூவரில் ஒருவர் தூக்க மாத்திரையின் உதவியுன்தான் தூங்குகிறோம்.
  • எனது மகளின் கல்லூரி, வீட்டின் மின்சாரக் கட்டண பில் மற்றும் தனது வருமான வரித் தாக்கல் தொடர்பாக நான் செய்ய வேண்டிய வேலைகளை என்னால் செய்ய இயலாமல் போகும்.
sleeping in space
தூக்கம்தான் :)


               மேலே உள்ளவற்றில் தூக்கம் தொடர்பானது மிக முக்கியமான ஒன்றாகப்படுகிறது. மைக்ரோ கிராவிட்டியில் தூங்குவது சிரமம்தான். அங்கே படுப்பது நிற்பது என எதுவும் இல்லை. மிதந்து கொண்டே இருப்பதால் தூங்குவது என்பது கண்களை மூடுவது மட்டுமே. பூமியைப் போல வசதியாக மெத்தையில் படுப்பது இயலாது.

                 ரு வருட காலத்திற்குப் பின்னர் இவர்கள் பூமிக்குத் திரும்பி வந்ததும் இவர்களில் உடல் நிலை பழைய நிலைக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் எனபதும் பரிசோதனையின் முக்கிய நோக்கம். தொடர்ச்சியான இரத்தச் சோதனைகள் ஸ்காட் கெல்லி மற்றும் மைக்்கேல் கோர்னியன்கோ ஆகிய இருவருக்கும் நடத்தப்பட்டு அதிக தகவல்களைப் பெறுவது இப்பயணத்தின் நோக்கம். மேலும் மனித உடலை நாம் எந்த அளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதையும் சரிபார்க்க இப்பயணச் சோதனை உதவும்.

spacewalk

                       வ்வளவு மெனக்கெடல்கள் எல்லாம் மனிதனின் செவ்வாய் பயணத்திற்கான முன்னோட்டம்தான். 2030-ல் மனிதன் செவ்வாய்க்குப் பயணப்படப் போகிறான். அதற்கான தரவுகளைப் பெறவே இச்சோதனை. இது தொடர்பாய் இன்னும் பல சோதனைகள் நடத்தப்படலாம்.
மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதற்குப் பதில் ரோபோக்களை அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. மனிதனால் ரோபாக்களைவிட அதிக சோதனைகளைச் செய்ய முடியும் என்பதாலும் ஏற்கனவே ரோவர்கள் அங்கே அனுப்பப்பட்டுவிட்டதாலுமே மனிதன் அனுப்பப்படுகிறான். அக்காரணத்தினாலேயே பாதுகாப்பு, பரிசோதனை என செலவும் எகிறிக்கொண்டிருக்கிறது.

''மனிதர்களாகிய நாம் புதியனவற்றைக் கண்டுபிடித்து நமது எல்லையை உடைத்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறோம். இதுவரை சரியாகவே செய்து வந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் இதுவும், இது நமது கடமையும் கூட'' - ஸ்காட் கெல்லி

தொடரும்...


புகைப்பட உதவி:  நாசா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தளம்.


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 


எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...