Knowledge is good only if it is shared.

Wednesday, December 24, 2014

வானியல் -18 RD 180 + அரசியல்

அடிக்கடி எழுதிய RD 180 எஞ்சினின் கதைதான் இந்தக் கட்டுரை.

RD 180 + அரசியல்


http://www.lpre.de/energomash/RD-180/img/RD-180_1.jpg
RD 180 எஞ்சின்

                   ல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே வல்லவனுக்கு புல்லிற்குப்பதில் வில் கிடைத்தால்? ஆம், RD 180 எனும் அந்த வில் ரஷ்யாவின் சொந்தச் சரக்கு. சொந்தச் சரக்கு மட்டுமல்ல, உலகின் "மோஸ்ட் வாண்டட்" சரக்கும் கூட. அமரிக்காவின் அட்லஸ் V ராக்கெட்டுகளில் முதல் நிலையில் பயன்படுத்தப்படுவது இதே RD 180 தான். இழுத்துக் கொண்டு போவானேன் இந்த RD 180 எஞ்சின் இல்லையெனில் அமெரிக்காவால் விண்வெளியில் இவ்வளவு வேகமாய் சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. குறித்துக் கொள்ளவும் "வேகமாக" என்றுதான் சொன்னேன் முடியாது என்று சொல்லவில்லை. அமெரிக்காவின் எதிர்கால பல்வேறு விண்வெளித்திட்டங்கள் அட்லஸ் V ராக்கெட்டை நம்பி திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்த எஞ்சினைஇனிமேல் அமெரிக்கா இராணுவப் பயன்பாட்டிற்கு ஏவும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தக்கூடாது என ரஷ்யா அறிவித்துள்ளது. குறிப்பு: அமெரிக்காவிற்கு நாசா எனில் ரஷ்யாவிற்கு ROSCOSMOS விரிவாக்கிப் பார்த்தால் Russian Federal Space Agency. FKA அல்லது RKA என்றும் அழைப்பர். விரிவாக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை போலும்.


RD-180 test firing.jpg
RD 180 சோதனை                 அமெரிக்காவிற்கு இதைவிட்டால் மாற்றே இல்லையா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனாயசமாக 9,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக் கோளை GTO எனப்படும் Geostationary Transfer Orbit- ற்கு தூக்கிச் செல்ல டெல்டா- IV மற்றும் அட்லஸ் V ராக்கெட்டுகளில் இந்த RD 180 எஞ்சின்தான் முதல் நிலையில் (First Stage) உள்ளது. அமெரிக்காவில் கொள்கை வகுப்பாளர்கள் கரடியாய் கத்திக் கொண்டிருந்தனர். பத்தாண்டுகளாய் ரஷ்யாவின் RD 180- யை நம்பிக் கொண்டிருக்கிறோம். சொந்தச் சரக்கு இருந்தால் தேவலாம் என்றார்கள். கத்தினால் எஞ்சின் வந்துவிடுமா என்ன? 2011 ஆம் ஆண்டு Blue Origin நிறுவனம் Blue Engine 4 என்ற நாமமுடைய எந்திரத்தைத் தயாரிக்கத் தொடங்கினர். இது ஓரளவுக்கு RD 180- க்கு மாற்றாக இருக்கும். ஆனால் இது இன்னும் தயாரிப்பிலேயே இருக்கிறது. சோதனை ஓட்டம் கூட நடத்தப்படவில்லை. எப்படிப்பார்த்தாலும் இது பயன்பாட்டிற்கு வர 2019 வரை காத்திருக்க வேண்டும்.


Atlas V(401) launches with LRO and LCROSS cropped.jpg
அட்லஸ் V ராக்கெட்                     இந்த அக்கப்போரெல்லாம் நடப்பது ஒருபுறமென்றாலும் இதில் கிளைக்கதையாய் இன்னுமொரு நிகழ்வும் நடைபெறுகிறது. பொதுவாக நாசாவுக்கு United Launch Alliance எனும் நிறுவனம் தான் இம்மாதிரியான அதிக எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவிக் கொடுக்கிறது. இந்த United Launch Alliance நிறுவனத்திற்குப் போட்டியாக Space X என்றொரு நிறுவனமும் இருக்கிறது. இவர்களும் கொஞ்ச காலமாய் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். அதாவது நாசாவின் அதிக எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவிக் கொடுக்கும் திறமை எங்களிடமும் இருக்கிறது ஏன் எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் United Launch Alliance நிறுவனத்திற்கு மட்டும் வாய்ப்பளிக்கிறீர்கள் என. அதுமட்டுமல்ல RD 180 எஞ்சினை வாங்குவதற்கு அமெரிக்கா தேவையைவிட அதிகப் பணம் கொடுப்பதாகவும் புகார். சும்மாவா என்ன? நாசாவிற்கும்  United Launch Alliance நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள். திர்மித்ரி ரோகோசின் (Dmitry Rogozin) எனும் பெயருடைய ரஷ்ய துணைப் பிரதமரும் ரஷ்யாவின் ராணுவ அமைச்சருமான இவர் United Launch Alliance உடன் ஏதோ ரகசியத்தொடர்பில் இருக்கிறார் எனவும் ஒரே புகைச்சல். கடைசியில் விவகாரம் நீதிமன்றத்தில்.


RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V                  இவ்வளவு திறனுடைய RD 180-ன் கதையைப் பார்க்கலாம். இது வரை 44 முறை அட்லஸ் V ராக்கெட்டை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. நம்பகத்தன்மையுடைய எஞ்சின்.  இரண்டு நாசில் (Dual-Nozzle) கொண்ட எஞ்சின் இது. இதன் சக்தி 3.83 மெகா நியூட்டன். RD 180 எஞ்சின் மட்டும் இரண்டு ஆள் உயரமுடையது.

இதைப்பற்றி கேள்வி பதில் வடிவில் கொஞ்சம் பார்க்கலாம்...

 ரஷ்யாவிலிருந்து இந்த  RD 180 எஞ்சின் மட்டும்தான் இறக்குமதி செய்யப்படுகிறதா?
  • இல்லை RD 180 தவிர NK-33/AJ26 என்ற வகை எஞ்சினும் ரஷ்யாவிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான எதிர்காலத் திட்டங்கள் RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V- யை நம்பி திட்டமிடப்பட்டுள்ளன.
 RD 180 எஞ்சினின் கதை என்ன?
  • அமெரிக்கா ரஷ்யாவின் பனிப்போர் காலத்தில் விண்வெளியில் யார் ஜாம்பவான் என்ற போட்டி நடந்தது. அதிலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் போட்டி. தடலாடியாக அப்போலோ 11 மூலம் அமெரிக்கா முந்திக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட RD 170 எஞ்சின் மிக முக்கியமான ஒன்று. அதன் நீட்சிதான் இந்த RD 180 எஞ்சின். நிலவுப் பயணத்திட்டத்தில் ரஷ்யா தோற்றாலும் அது கண்டுபிடித்த இந்த RD 180 எஞ்சின் இன்னமும் பயன்படுகிறது.
 RD 180 எஞ்சின் தொழில்நுட்ப ரகசியம் என்ன?
  • பெரிய ரகசியமெல்லாம் ஒன்றும் இல்லை. ரஷ்யா தனது திரவ ராக்கெட் எந்திரத்தில் தனித் தன்மையுடன் விளங்குகிறது. LOX எனும் kerosene/liquid oxygen எரிபொருளால் இயங்கும் வண்ணம் இந்த   RD 180 எஞ்சின் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாகச் சொல்வதென்றால் oxygen- னை அடிப்படையாகக் கொண்ட எந்திரம் இது. ஆனால் நாசாவோ ஹைட்டிரஜனை அடிப்படையாகக் கொண்ட எந்திரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு காட்டியது. எனவே தற்போதைக்கு oxygen- னை அடிப்படையாகக் கொண்ட எந்திரத்தின் சக்தி மிக அதிகமாக உள்ளது.
எதற்காக  RD 180 எஞ்சின் தேர்ந்தெடுக்கப்பட்டது?
  • தொழில் நுட்ப ரீதியான காரணத்தினைவிட ஆரசியல் ரீதியான காரணமே அதிகம். சோவியத் யூனியன் உடைந்ததும் அங்கே இயங்கி வந்த சில நிறுவனங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதில் ஒன்றுதான் RD 180. இந்த RD 180- யை அடிப்படையாகக் கொண்டு அட்லஸ் V கட்டிமுடிக்கப்பட்டது. அதாவது தற்போதைய சூழலில் RD 180 இல்லையேல் அட்லஸ் V இல்லை. அதனால்தான் சமயம் பார்த்து அஸ்திவாரக் கல்லை உருவுகிறது ரஷ்யா.
இதுவரை RD 180 எஞ்சின் எத்தனை முறை அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ளது?
  • மொத்தம் 50 முறை.  அட்லஸ் V- ல் 44 முறையும். அட்லஸ் 3- ல் ஆறு முறையும் வெற்றிகரமாக இயங்கியுள்ளது. 100% வெற்றி இந்த  RD 180 எஞ்சின்.
இன்னும் எத்தனை எஞ்சின்கள் அமெரிக்காவிடம் கையிருப்பில் உள்ளன?
  • அடுத்த இரண்டு அல்லது இரண்டரை வருடத்திற்கான கையிருப்பு உள்ளது. பொதுவாக அமெரிக்கா இதுவரை வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு எஞ்சின்களை உபயோகப்படுத்தியுள்ளது.
இதற்கு மாற்றாக வேறு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியுமா?
  • காற்று ரஷ்யாவின் பக்கமே அடிக்கிறது. இதற்கு மாற்றாக எந்த எஞ்சினும் தற்போது உலகத்தில் இல்லை.


RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V               டைசியாக, சரி ரஷ்யா ஏன் இந்த RD 180 எஞ்சினை இராணுவப் பயன்பாட்டிற்கு அமெரிக்கா பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறதென்றால், பக்கா அரசியல் என்பதே விடை. ரஷ்யா - உக்ரேனியப் பிரச்சனை தீவிரமடைந்த நேரம் ரஷ்யாவின் உக்ரேனிய அத்துமீறல் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பங்காளி பழையபடி படை திரட்டுகிறாரோ என்ற ஐயம் அமெரிகாவிற்கு. அதற்காக சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் மீது விதித்தன. பதிலுக்கு ரஷ்யாவின் நடவடிக்கையில் ஒன்றுதான் RD 180 எனும் "செக் மேட்". இப்போது நாசா செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ரூபிளின் மதிப்பைக் கெடுக்கத்தான் அமெரிக்கா கச்சா எண்ணை விலையை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது என்ற யூகமும் உண்டு.


RD 180- க்கு முன்னோடியான RD 171


 டெயில் பீஸ்: இந்த RD 180 எஞ்சின் என்ன விலை இருக்கும்? அதிகமில்லை, இந்திய மதிப்பின் படி சுமார் 65 கோடி ரூபாய். ஒட்டுமொத்த ஐ.எஸ்.ஆர்.ஓ வின் பட்ஜெட் நூறு RD 180 எஞ்சினுக்குத்தான் சமம். அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து 101 RD 180 எஞ்சினுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கேள்வி.


தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா இணையத்தளம் மற்றும் Liquid Propellant Rocket Engines இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.
United Launch Alliance

United Launch Alliance           
United Launch Alliance


No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...