Knowledge is good only if it is shared.

Wednesday, December 24, 2014

வானியல் -18 RD 180 + அரசியல்

அடிக்கடி எழுதிய RD 180 எஞ்சினின் கதைதான் இந்தக் கட்டுரை.

RD 180 + அரசியல்


http://www.lpre.de/energomash/RD-180/img/RD-180_1.jpg
RD 180 எஞ்சின்

                   ல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே வல்லவனுக்கு புல்லிற்குப்பதில் வில் கிடைத்தால்? ஆம், RD 180 எனும் அந்த வில் ரஷ்யாவின் சொந்தச் சரக்கு. சொந்தச் சரக்கு மட்டுமல்ல, உலகின் "மோஸ்ட் வாண்டட்" சரக்கும் கூட. அமரிக்காவின் அட்லஸ் V ராக்கெட்டுகளில் முதல் நிலையில் பயன்படுத்தப்படுவது இதே RD 180 தான். இழுத்துக் கொண்டு போவானேன் இந்த RD 180 எஞ்சின் இல்லையெனில் அமெரிக்காவால் விண்வெளியில் இவ்வளவு வேகமாய் சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. குறித்துக் கொள்ளவும் "வேகமாக" என்றுதான் சொன்னேன் முடியாது என்று சொல்லவில்லை. அமெரிக்காவின் எதிர்கால பல்வேறு விண்வெளித்திட்டங்கள் அட்லஸ் V ராக்கெட்டை நம்பி திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்த எஞ்சினைஇனிமேல் அமெரிக்கா இராணுவப் பயன்பாட்டிற்கு ஏவும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தக்கூடாது என ரஷ்யா அறிவித்துள்ளது. குறிப்பு: அமெரிக்காவிற்கு நாசா எனில் ரஷ்யாவிற்கு ROSCOSMOS விரிவாக்கிப் பார்த்தால் Russian Federal Space Agency. FKA அல்லது RKA என்றும் அழைப்பர். விரிவாக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை போலும்.


RD-180 test firing.jpg
RD 180 சோதனை                 அமெரிக்காவிற்கு இதைவிட்டால் மாற்றே இல்லையா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனாயசமாக 9,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக் கோளை GTO எனப்படும் Geostationary Transfer Orbit- ற்கு தூக்கிச் செல்ல டெல்டா- IV மற்றும் அட்லஸ் V ராக்கெட்டுகளில் இந்த RD 180 எஞ்சின்தான் முதல் நிலையில் (First Stage) உள்ளது. அமெரிக்காவில் கொள்கை வகுப்பாளர்கள் கரடியாய் கத்திக் கொண்டிருந்தனர். பத்தாண்டுகளாய் ரஷ்யாவின் RD 180- யை நம்பிக் கொண்டிருக்கிறோம். சொந்தச் சரக்கு இருந்தால் தேவலாம் என்றார்கள். கத்தினால் எஞ்சின் வந்துவிடுமா என்ன? 2011 ஆம் ஆண்டு Blue Origin நிறுவனம் Blue Engine 4 என்ற நாமமுடைய எந்திரத்தைத் தயாரிக்கத் தொடங்கினர். இது ஓரளவுக்கு RD 180- க்கு மாற்றாக இருக்கும். ஆனால் இது இன்னும் தயாரிப்பிலேயே இருக்கிறது. சோதனை ஓட்டம் கூட நடத்தப்படவில்லை. எப்படிப்பார்த்தாலும் இது பயன்பாட்டிற்கு வர 2019 வரை காத்திருக்க வேண்டும்.


Atlas V(401) launches with LRO and LCROSS cropped.jpg
அட்லஸ் V ராக்கெட்                     இந்த அக்கப்போரெல்லாம் நடப்பது ஒருபுறமென்றாலும் இதில் கிளைக்கதையாய் இன்னுமொரு நிகழ்வும் நடைபெறுகிறது. பொதுவாக நாசாவுக்கு United Launch Alliance எனும் நிறுவனம் தான் இம்மாதிரியான அதிக எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவிக் கொடுக்கிறது. இந்த United Launch Alliance நிறுவனத்திற்குப் போட்டியாக Space X என்றொரு நிறுவனமும் இருக்கிறது. இவர்களும் கொஞ்ச காலமாய் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். அதாவது நாசாவின் அதிக எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவிக் கொடுக்கும் திறமை எங்களிடமும் இருக்கிறது ஏன் எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் United Launch Alliance நிறுவனத்திற்கு மட்டும் வாய்ப்பளிக்கிறீர்கள் என. அதுமட்டுமல்ல RD 180 எஞ்சினை வாங்குவதற்கு அமெரிக்கா தேவையைவிட அதிகப் பணம் கொடுப்பதாகவும் புகார். சும்மாவா என்ன? நாசாவிற்கும்  United Launch Alliance நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள். திர்மித்ரி ரோகோசின் (Dmitry Rogozin) எனும் பெயருடைய ரஷ்ய துணைப் பிரதமரும் ரஷ்யாவின் ராணுவ அமைச்சருமான இவர் United Launch Alliance உடன் ஏதோ ரகசியத்தொடர்பில் இருக்கிறார் எனவும் ஒரே புகைச்சல். கடைசியில் விவகாரம் நீதிமன்றத்தில்.


RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V                  இவ்வளவு திறனுடைய RD 180-ன் கதையைப் பார்க்கலாம். இது வரை 44 முறை அட்லஸ் V ராக்கெட்டை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. நம்பகத்தன்மையுடைய எஞ்சின்.  இரண்டு நாசில் (Dual-Nozzle) கொண்ட எஞ்சின் இது. இதன் சக்தி 3.83 மெகா நியூட்டன். RD 180 எஞ்சின் மட்டும் இரண்டு ஆள் உயரமுடையது.

இதைப்பற்றி கேள்வி பதில் வடிவில் கொஞ்சம் பார்க்கலாம்...

 ரஷ்யாவிலிருந்து இந்த  RD 180 எஞ்சின் மட்டும்தான் இறக்குமதி செய்யப்படுகிறதா?
  • இல்லை RD 180 தவிர NK-33/AJ26 என்ற வகை எஞ்சினும் ரஷ்யாவிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான எதிர்காலத் திட்டங்கள் RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V- யை நம்பி திட்டமிடப்பட்டுள்ளன.
 RD 180 எஞ்சினின் கதை என்ன?
  • அமெரிக்கா ரஷ்யாவின் பனிப்போர் காலத்தில் விண்வெளியில் யார் ஜாம்பவான் என்ற போட்டி நடந்தது. அதிலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் போட்டி. தடலாடியாக அப்போலோ 11 மூலம் அமெரிக்கா முந்திக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட RD 170 எஞ்சின் மிக முக்கியமான ஒன்று. அதன் நீட்சிதான் இந்த RD 180 எஞ்சின். நிலவுப் பயணத்திட்டத்தில் ரஷ்யா தோற்றாலும் அது கண்டுபிடித்த இந்த RD 180 எஞ்சின் இன்னமும் பயன்படுகிறது.
 RD 180 எஞ்சின் தொழில்நுட்ப ரகசியம் என்ன?
  • பெரிய ரகசியமெல்லாம் ஒன்றும் இல்லை. ரஷ்யா தனது திரவ ராக்கெட் எந்திரத்தில் தனித் தன்மையுடன் விளங்குகிறது. LOX எனும் kerosene/liquid oxygen எரிபொருளால் இயங்கும் வண்ணம் இந்த   RD 180 எஞ்சின் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாகச் சொல்வதென்றால் oxygen- னை அடிப்படையாகக் கொண்ட எந்திரம் இது. ஆனால் நாசாவோ ஹைட்டிரஜனை அடிப்படையாகக் கொண்ட எந்திரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு காட்டியது. எனவே தற்போதைக்கு oxygen- னை அடிப்படையாகக் கொண்ட எந்திரத்தின் சக்தி மிக அதிகமாக உள்ளது.
எதற்காக  RD 180 எஞ்சின் தேர்ந்தெடுக்கப்பட்டது?
  • தொழில் நுட்ப ரீதியான காரணத்தினைவிட ஆரசியல் ரீதியான காரணமே அதிகம். சோவியத் யூனியன் உடைந்ததும் அங்கே இயங்கி வந்த சில நிறுவனங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதில் ஒன்றுதான் RD 180. இந்த RD 180- யை அடிப்படையாகக் கொண்டு அட்லஸ் V கட்டிமுடிக்கப்பட்டது. அதாவது தற்போதைய சூழலில் RD 180 இல்லையேல் அட்லஸ் V இல்லை. அதனால்தான் சமயம் பார்த்து அஸ்திவாரக் கல்லை உருவுகிறது ரஷ்யா.
இதுவரை RD 180 எஞ்சின் எத்தனை முறை அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ளது?
  • மொத்தம் 50 முறை.  அட்லஸ் V- ல் 44 முறையும். அட்லஸ் 3- ல் ஆறு முறையும் வெற்றிகரமாக இயங்கியுள்ளது. 100% வெற்றி இந்த  RD 180 எஞ்சின்.
இன்னும் எத்தனை எஞ்சின்கள் அமெரிக்காவிடம் கையிருப்பில் உள்ளன?
  • அடுத்த இரண்டு அல்லது இரண்டரை வருடத்திற்கான கையிருப்பு உள்ளது. பொதுவாக அமெரிக்கா இதுவரை வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு எஞ்சின்களை உபயோகப்படுத்தியுள்ளது.
இதற்கு மாற்றாக வேறு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியுமா?
  • காற்று ரஷ்யாவின் பக்கமே அடிக்கிறது. இதற்கு மாற்றாக எந்த எஞ்சினும் தற்போது உலகத்தில் இல்லை.


RD 180 எஞ்சின் பொருத்தப்பட்ட அட்லஸ் V               டைசியாக, சரி ரஷ்யா ஏன் இந்த RD 180 எஞ்சினை இராணுவப் பயன்பாட்டிற்கு அமெரிக்கா பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறதென்றால், பக்கா அரசியல் என்பதே விடை. ரஷ்யா - உக்ரேனியப் பிரச்சனை தீவிரமடைந்த நேரம் ரஷ்யாவின் உக்ரேனிய அத்துமீறல் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பங்காளி பழையபடி படை திரட்டுகிறாரோ என்ற ஐயம் அமெரிகாவிற்கு. அதற்காக சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் மீது விதித்தன. பதிலுக்கு ரஷ்யாவின் நடவடிக்கையில் ஒன்றுதான் RD 180 எனும் "செக் மேட்". இப்போது நாசா செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ரூபிளின் மதிப்பைக் கெடுக்கத்தான் அமெரிக்கா கச்சா எண்ணை விலையை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது என்ற யூகமும் உண்டு.


RD 180- க்கு முன்னோடியான RD 171


 டெயில் பீஸ்: இந்த RD 180 எஞ்சின் என்ன விலை இருக்கும்? அதிகமில்லை, இந்திய மதிப்பின் படி சுமார் 65 கோடி ரூபாய். ஒட்டுமொத்த ஐ.எஸ்.ஆர்.ஓ வின் பட்ஜெட் நூறு RD 180 எஞ்சினுக்குத்தான் சமம். அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து 101 RD 180 எஞ்சினுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கேள்வி.


தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா இணையத்தளம் மற்றும் Liquid Propellant Rocket Engines இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.
United Launch Alliance

United Launch Alliance           
United Launch Alliance


Tuesday, December 16, 2014

வானியல்- 17 (GSLV Mk-III X / CARE)

GSLV Mk-III X / CARE

ஐ.எஸ்.ஆர்.ஓ வின் அடுத்தக்கட்ட தயாரிப்பான GSLV Mk-III (LVM-3) ராக்கெட் பற்றிய கட்டுரை இது. இந்த ராக்கெட் பரிசோதனை முயற்சியாக இந்த வாரம் வியாழனன்று (2014, டிசம்பர் 18) ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

GSLV Mk-III 
                பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிறது என்பார்கள். அமெரிக்காவின் நாசாவிற்கு ஓரையான் (ORION) எனில் நமது ஐ.எஸ்.ஆர்.ஓ விற்கு  "கேர்" (CARE). 125 கிலோமீட்டர் உயரத்திலிருந்து CARE "கேப்ஸ்யூல்" வங்காள‌விரிகுடாவின் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அருகே விழும்படிச் செய்யப் போகிறார்கள். எதற்காக இந்த அக்கப்போர்? எதிர்காலத்தில் பூமியைவிட்டு மனிதன் பிற கிரகங்களுக்குச் சென்று விட்டு பூமிக்கு திருப்பி வரவேண்டும் அல்லவா? அதற்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் இது. ராக்கெட்டுகள் மூலம் பூமியிலிருந்து கிளம்பிச் சென்று மீண்டும் பூமிக்கு வரும்போது பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக மிக மிக வேகமாக பூமிக்கு வர வேண்டியிருக்கும். எப்படி வருவது? பூமியில் சரியாக எங்கே இறங்குவது? எப்படி இறங்குவது? இப்படி பல விஷயங்களில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம் போன்றவை "எக்ஸ்பெர்ட்". விண்வெளித்துறையில் முன்னணியில் உள்ள இந்தியா இவ்விஷயத்தில் பின் தங்கிவிடக் கூடாது என்பதற்காக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஓ விடம் இருக்கிறது.
                 கஞ்சிக்கு வழி இல்லை, கக்கூஸ் கழுவ ஆள் இல்லை, இந்தியாவுக்கு ராக்கெட் லொட்டு லொசுக்கு எல்லாம் தேவையா என்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். கங்கூஸ் கழுவ ஆள் இல்லை எனில் சுகாதாரத் துறையிடம் கேளுங்கள். அவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ஏன் அதைச் செய்யவில்லை எனக் கேளுங்கள். ஐ.எஸ்.ஆர்.ஓ தனக்கு ஒதுக்கிய நிதியில் சதனைகள் படைக்கிறது. பிற துறைகள் சாதிக்கவில்லை என்பதற்காக இவர்களும் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டுமா என்ன? கிரிக்கெட்டில் ஜெயிச்சாலும் குற்றம் சொல்வதைப் போல ஜெயிக்கிறவர்களைக் குற்றம் சொல்வதற்கும் சிலர் இருப்பர். பூமியில் இல்லாத வளங்கள் பிற கிரகங்களில் இருக்கலாம். மனிதக் குடியேற்றம் பிற கிரகங்களில் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் 100 வருடத்திற்கும் வசப்படும். அது மட்டும் அல்ல ஐ.எஸ்.ஆர்.ஓ பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் சர்வதேச அளவில் வியாபரம் செய்து சம்பாதிக்கிறது. நமது இராணுவ கண்காணிப்பிற்கான கண்காணிப்புச் செயற்கைக் கோள்களை ஏவுகிறது. முக்கியமான விஷயம்..இவ்வாறு குறை சொல்பவர்களின் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் இணைய மற்றும் செல்போனும் ஐ.எஸ்.ஆர்.ஓ வின் செயற்கைக் கோள்களாலேயே சாத்தியம். சரி புலம்புபவர்களை விட்டுவிடுவோம்...விஷயத்திற்கு வருவோம்.

L110 எனும் திரவ "கோர்" பகுதி


           இந்தியாவிற்கு நீண்டகாலச் சவாலாக இருப்பது அதிக எடையுடைய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவது? மங்கள்யான் உள்ளிட்ட எல்லாச் செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி மூலமே செலுத்தி வருகிறோம். இந்த  பி.எஸ்.எல்.வி அதிகபட்சம் 1,400 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளைத்தான் Geostationary Transfer Orbit-ற்கு எடுத்துச்செல்ல முடியும்.
            ஆனால் நமது இராணுவக் கண்காணிப்பிற்காக ஏவப்படும் செயற்கைக் கோள்கள் இந்த Geostationary Transfer Orbit- ல்தான் நிலைநிறுத்தப்பட வேண்டும். எனவே எடை குறைவான செயற்கைக் கோள்களையே பி.எஸ்.எல்.வி முலம் ஏவி வருகிறோம். அதிக அளவு "டிரான்ஸ்பாண்டர்கள்"  அதற்குத் தேவையான  சோலார் பேனல்கள் போன்றவை கொண்ட செயற்கைக் கோள்கள் சுமார் 5 டன்கள் வரை இருக்கும். இவற்றை ஏவ பெரும்பாலும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ஏரியான் வகை ராக்கெட்டுகள் மூலம் இதுவரை ஏவி வருகிறோம். அவர்களுக்கு அதிக அளவு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதானால் அதிக திறனுடைய ராக்கெட்டுகளைச் தயாரிக்க ஐ.எஸ்.ஆர்.ஓ போராடிவருகிறது. பல்வேறு தோல்விகள் சர்வதேசத் தடைகள் காரணமாய் "க்ரையோஜெனிக்" எஞ்சின் தாமதம். "க்ரையோஜெனிக்" இஞ்சினால் மட்டுமே Upper stage- ல் அதிக எடையுடைய செயற்கைக் கோளை தூக்கிச் செல்ல முடியும் (க்ரையோஜெனிக்கின் கதை இங்கே). Lower stage-ல்  "ஸ்ட்ரெப் ஆன்" "பூஸ்டர்ஸ்" வைத்து பட்டையைக் கிளப்பிவிடுகிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ. ஆக, இந்தப் பரிசோதனை ஏவுதல் GSLV Mk-III (LVM-3) -க்கான சோதனை. உப இணைப்பாய் CARE "கேப்ஸ்யூல்".


S 200 என்ற பெயருடைய இரண்டு "ஸ்ட்ரெப் ஆன் பூஸ்டர்ஸ்"C25 எனும் Upper Stage "க்ரையோஜெனிக்"                   2014-ல் GSAT- 14 ஏவப்பட்டபோது "க்ரையோஜெனிக்" சரியாக வேலை செய்தது. இந்த முறை L110 எனும் முக்கிய "கோர்" பகுதி (SECOND STAGE), அதன் இருபுறமும் S 200 என்ற பெயருடைய இரண்டு "ஸ்ட்ரெப் ஆன் பூஸ்டர்ஸ்" இருக்கும் (இதுதான் FIRST STAGE). இதன் மேலே C25 எனும் Upper Stage "க்ரையோஜெனிக்"(THIRD STAGE) இருக்கும். CARE என அழைக்கப்படும் Crew-module Atmospheric Re-entry Experiment எல்லாவற்றிற்கும் மேலே FAIRING-ன் உள்ளே இருக்கும். FAIRING என்பது, வேற ஒன்றும் இல்லை, செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் ஒரு "ஷீல்டு" மாதிரி. இந்த CARE- வின் உள்ளே அமர்ந்துதான் எதிர்கால விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பி வருவர். இந்த GSLV Mk-III (LVM-3) பரிசோதனை ஏவுதல் முயற்சிதான். இந்த ஏவுதலில் கிடைக்கும் சில தரவுகள் இந்த GSLV Mk-III- யை மேம்படுத்த உதவும். இந்த ஏவுதலில் இந்த ராக்கெட்டை கட்டுப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் மற்றும் aerodynamic போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். இத்தகைய தகவல்களை தரையில் வைத்து சோதனை செய்து பெற இயலாது.


CARE "கேப்ஸ்யூல்" (இதுதான் கடலில் விழும்)


                    சரி ஏவத்தான் போகிறோம் அதை சும்மா ஏவி என்ன பயன். அது வரை (125 கிலோமீட்டர்) போகிறதுதான் போகிறோம், போகிறபோக்கில் "டு இன் ஒன்" ஆக கேப்ஸ்யூலையைம் சோதனை செய்து விடுவோம் என்ற ஐ.எஸ்.ஆர்.ஓ வின் திட்டமே இது. நிற்க... இந்த இடத்தில் இந்தக் "கேப்ஸ்யூலை"ப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். விண்வெளிக்கு மனிதன் சென்று திரும்பும் போது பூமியின் வாயு மண்டலத்திற்குள் நுழையும் போது காற்றுடன் ஏற்படும் உராய்வின் காரணமாக அதிக அளவு வெப்பம் ஏற்படும். அதிக அளவு எனில் 20,000 டிகிரி வரை இருக்கும். இத்தகைய வெப்பத்தைத் தாங்கும் "கேப்ஸ்யூல்" தயாரிக்க வேண்டும். அது மட்டும் அல்ல அந்தக் "கேப்ஸ்யூல்" பூமியை நோக்கி வரும் போது அதன் வேகத்தைக் குறைக்க "பாரசூட்" உண்டு. அது சரியாக வேலை செய்ய வேன்டும் (PARACHUTE DEPLOYMENT). வேகம் குறைந்து வரும் "கேப்ஸ்யூல்" சரியாகத் திட்டமிட்டபடி கடலில் குறித்த இடத்தில் இறங்க வேண்டும். அந்தக் "கேப்ஸ்யூலை" நமது கடற்படை மீட்டெடுக்க வேன்டும் (இச்சோதனை ஏற்கனவே ஒரு முறை நடத்தியாகிவிட்டது) இவ்வாறான பயிற்சிக்காக இந்த‌ முறை ஏவப்படும் இந்த - GSLV Mk-III (LVM-3) -ல் "கேப்ஸ்யூல்" இணைக்கப்பட்டு 125 கிலோமீட்டர் உயரத்திலிருந்து கடலில் விழுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
          125 கிலோமீட்டர் என்பது மிகவும் குறைவு தான். இருந்தாலும் இதில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட சோதனைக்கு நகரலாம். ஸ்ரீஹரிக்கோடாவிலிருந்து கிளம்பி கடலில் விழுவதுவரை எல்லாம் 20 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். எனவே டிசம்பர் 18, 2014 அன்றான GSLV Mk-III (LVM-3) சோதனை வெற்றிபெற வாழ்த்துகள்.

ஏவுதளத்தில் தயாராய்.


குறிப்பு: Launch window opening காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.

தொடரும்...


புகைப்பட உதவி:  ஐ.எஸ்.ஆர்.ஓ இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.
Friday, December 12, 2014

வானியல்- 16 (நியூ ஹெராசன்ஸ் - New Horizons )

 நியூ ஹெராசன்ஸ் - New Horizons
விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது நான்காவது. 
                தற்போதைய நிலவரப்படி பூமியிலிருந்து உத்தேசமாய் 300 கோடி மைல்கள் தொலைவில் சென்று கொண்டிருக்கிறது "நியூ ஹெராசன்ஸ்" விண்கலன். வழக்கம் போல இதுவும் "நாசா"வின் திட்டமே. புளூட்டோவுக்கான திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஜனவரி 11 மற்றும் 17 என தியதி மாற்றி வைக்கப்பட்டது. ஏவி ஒன்பது மணிகளுக்குள் சந்திரனின் வட்டப்பாதையைக் கடந்து சென்றது. செல்ல வேண்டிய தொலைவு மிக மிக அதிகம். சூரியக் குடும்பத்தின் சிறியக் கோளான "புளூட்டோ"வை ஆராய இது அனுப்பப்பட்டது.

Encounter 01 lg.jpg

             அட்லஸ் 5 ராக்கெட் இதை செலுத்தியது. மிகமிக புகழ் வாய்ந்ததும் ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு சமீபத்தில் செக் வைக்கப்பட்டதுமான ஆர்.டி 180 எஞ்சின்பயன்படுத்தப்பட்டது. இதுவரை ஏவப்பட்டவற்றிலேயே மிக அதிக வேகதுடன் ஏவப்பட்ட விண்கலன் "நியூ ஹெராசன்ஸ்" ஆகும். வேகம் மணிக்கு 59,000 கிலோமீட்டர்கள் ப்ளஸ் அதனுடைய இழப்புகள். இது ஏவப்பட்ட வீடியோவைக் கீழே பாருங்கள்.             ஜனவரி 28 மற்றும் 30 ஆகிய தியதிகளில் இது சரியான பாதையில்தான் செல்கிறதா என உறுதிப்படுத்தி கொஞ்சம் பாதை மாற்றப்பட்டது. இது பொதுவாக எல்லா விண்கலன்களுக்கும் நடப்பதுதான். 2007 பிப்ரவரி அன்று வியாழன் கிரகத்தின் மிகச் சமீபத்தில் சென்றது. மிகச் சமீபம் எனில் 29,00,000 கிலோமீட்டர்கள் தொலைவு. விண்வெளியில் இதெல்லாம் மிகச் சிறிய தூரங்களே...வியாழன் கிரகத்தை அகச்சிகப்புக் கதிர் புகைப்படம் எடுத்து அனுப்பியது.

"நியூ ஹெராசன்ஸ்" படமெடுத்த வியாழன்.


                       வியாழன் கிரகத்தின் சந்திரன்களையும் (ஆம் வியாழன் கிரகத்திற்கு 67 நிலவு உண்டு) புகைப்படமெடுத்தது.

வியாழனின் நிலவுகள் "நியூ ஹெராசன்ஸின்" பார்வையில்.             "ஹைபர்னேசன்" என்ற சொல் அடிக்கடி விண்கலன்களில் பயன்படுத்துவர். அதாவது விண்கலனை தூங்க வைத்துவிடுவது. பெரும்பான்மையான உபகரணங்கள் அனைதையும் அணைத்து வைப்பது. பின்னர் தேவையான போது அவற்றை உசுப்பி பயன்படுத்துவது. இது பொதுவாக மின்கலன்களின் மின்சாரத்தை சிகனமாக்க இவ்வாறு செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு விண்கலனை ஏவி நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செலுத்துவதென்பது எளிதல்ல. பூமியின் ஈர்ப்பு விசையைவிட்டு மேலேழும்பியதும் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசை விண்கலனின் மீது ஆதிக்கம் செலுத்தும் அவற்றைக் கணக்கில் கொண்டு இவ்விண்கலன்கள் சரியான பாதையில் தேவையான போது பாதை மாற்றம் செய்து அனுப்பப்படுகின்றன.

நெடுந்தொலைவுப் பாதை...


                   2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தியதி சனிக்கிரகத்தின் வட்டப்பாதையைக் கடந்தது. மார்ச் 18, 2011-ல் நெப்டியூனைக் கடந்து புளூட்டோவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போகிற வழியில் எதிர்படுகிற கிரகங்களயும் அவற்றின் துணைக் கோள்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. 2006 ஜனவரியில் ஏவப்பட்டு 2015 பிப்ரவரியில் "புளூட்டோ"வைச் சங்கமித்து ஆராயும். இடையே நாம் ஏற்கனவே பார்த்த "கைப்பர் பெல்ட்"டையும் ஆராயும்.

கைப்பர் பட்டை


           2015-ல் தான் "ப்ளூட்டோ"வை அடையுமென்றாலும் ஏவப்பட்ட அதே ஆண்டு செப்டம்பர் 21 முதல் 24 வரையான நாட்களில் "புளூட்டோ"விற்கு 420 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் போதே அதைப் புகைப்படமெடுத்தது "நியூ ஹெராசன்ஸ்". நீண்ட தூக்கத்திலிருந்ததை கடந்த வாரம் டிசம்பர் 6 அன்று தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கின்றனர். "கைப்பர் பெல்ட்" மற்றும் "புளோட்டோ" பற்றிய அதிக ரகசியங்களை "நியூ ஹெராசன்" வெளிப்படுத்தும்.

"புளூட்டோ" 420 கோடி கிலோமீட்டர் தொலைவில்.
தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Thursday, December 4, 2014

ஜிசாட்- 16 (GSAT-16)

         
 ஜிசாட்-16

             ஐஎஸ்ஆர்ஓ தனது ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்களில் ஜிசாட்-16 செயற்கைக் கோளை 2016 டிசம்பர் 5 அதிகாலை 2:08 ற்கு ஏவுவதாகத் திட்டமிட்டுள்ளது. உண்மையில் இதை ஏவுவது ஐ எஸ் ஆர் ஓ அல்ல. ஐரோப்பிய விண்வெளி அமைப்புதான் ஏவுகிறது. காரணம்? இந்த ஜிசாட்-16 செயற்கைக் கோளை ஏவும் அளவு வல்லமை நம்மிடம் இல்லை. அதாவது செயற்கைக் கோள் நமது சொந்தச் சரக்கு அதை ஏவுவது ஐரோப்பிய விண்வெளி அமைப்பு. ஆனால் ஜிசாட்-14 செயற்கைக் கோளை  நாம் தான் ஏவினோம். குழப்பமாக இருக்கிறதா? தெளிவுறுவோம்...

ஜிசாட்-16                   ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்கள் எல்லாம் பூமிக்கு மேலே 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டியவை. இத்தகைய செயற்கைக் கோள்கள் பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாகச் சுற்ற வேண்டும் அப்போதுதான் எப்போதும் பூமியின் ஒரே இடத்தின் மேலே இருப்பது போல இருக்கும். எனவே இந்தியாவிலிருந்து இந்தியாவின் இராணுவ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக அனுப்பப்படும் இத்தகைய செயற்கைக் கோள்கள் எப்போதும் இந்தியாவின் மேலேயே சுற்றிக் கொண்டிருப்பது அவசியமல்லவா. எனவே பூமியிலிருந்து தோராயமாய் 36,000 கிலோமீட்டர் தொலைவில் விடப்படும் செயற்கைக் கோள்கள் பூமியின் வேகத்திலேயே தன்னைத்தானே சுற்றி வரும் என்பது இயற்பியலின் centripetal force விதி.


ஜிசாட்-16ராக்கெட்டின் உள்ளே இப்படித்தான் மடக்கி வைக்கப்பட்டிருக்கும்.                     ரி, செவ்வாய் வரை மங்கள்யானை அனுப்பிய நம்மால் 36,000 கிலோமீட்டருக்கு ஏன் அனுப்பமுடியாது? முடியும். மங்கள்யான் மாதிரி சிறிய செயற்கைக் கோளாய் இருந்தால் நம்மால் முடியும். ஜிசாட்-14 செயற்கைக் கோள் ஆனது 1982 கிலோகிராம் எடையுடையது. நமது ஜிஎஸெல்வி மார்க் 2 செலுத்து வாகனம் மூலம் அனுப்பிவிட்டோம். இதனால் அதிகபட்சம் 2500 கிலோகிராம் வரை ஏவ முடியும். தற்போது ஏவப்படும் ஜிசாட்-16 ஆனாது 3,100 கிலோகிராம் எடையுடையது. சுருங்கச் சொன்னால், 2500 கிலோகிராமுக்கு உட்பட்ட எடையுடைய செயற்கைக் கோள்களை மட்டுமே நம்மால் புவி இணை வட்டப்பாதையில் செலுத்த முடியும். அதனால் தான் ஜிசாட்-16 செயற்கைக் கோளை ஏவ ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் ஏரியான் 5 ராக்கெட்டைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகை ராக்கெட்டுகள் கிட்டத்தட்ட 7,000 கிலோகிராம் எடையுடைய செயற்கைக் கோள்களை புவி இணை வட்டப்பாதையில் செலுத்தும் திறனுடையவை. ஏன் நம்முடைய ஐ எஸ் ஆர் ஓ வால் அப்படியான ராக்கெட்டைச் செய்ய முடியாதா எனக் கேட்பீர்களானால். இதுவரை முடியவில்லை என்பதுதான் பதில். ஜிஎஸ்எல்வி மார்க் 3 தயாரானால் 4,000 முதல் 5,000 கிலோகிராம் எடையுடைய  செயற்கைக் கோள்களை புவி இணை வட்டப்பாதையில் செலுத்தலாம். ஜிஎஸ்எல்வி மார்க் 3 யில் "க்ரையோஜெனிக்" எஞ்சின் எனும் வஸ்து இருக்கிறது. கொஞ்ச நாளாய் இந்தியாவிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான தனிக் கட்டுரை கடைசியில் கீழே.


சூரியத் தகடுகள் எனும் சோலார்ப் போனல்கள் சரியாக விரிவடையுமா எனும் சோதனை. இனி ஜிசாட்-16,

               தை ஏவுவது Ariane-5 VA-221 செலுத்து வாகனம் (ராக்கெட்). இன்சாட் எனும் சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம் அதற்கு மாற்றாகத் தான் இப்போதைய ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்கள் ஏவப்படுகிறது. நோக்கியோவிலிருந்து ஐபோனுக்கு மாறியதைப் போல என வைத்துக் கொள்ளுங்கள். ஏவுவது மட்டுமே ஐரோப்பிய விண்வெளி மையம். ஏவி முடித்ததும் செயற்கைக் கோள்களின் உயரம் உயர்த்துவது போன்ற (manoeuvres) வேலைகளைச் செய்வது ஐ எஸ் ஆர் ஓ தான். இதற்கென செயற்கைக் கோளில் LAM மோட்டார் இருக்கும். அவற்றை இயக்கி இதைச் செய்வர்.


மின்காந்தச் சோதனை (EMI-EMC).
செயற்கைக் கோளை கொஞ்சம் விலாவரியாகப் பார்ப்போம்.தூய்மை அறை எனும் "க்ளீன் ரூம்" சோதனை.தூய்மை அறை எனும் "க்ளீன் ரூம்" சோதனை.                 ஜிசாட்-16 செயற்கைக் கோளானது ஏற்கனவேசெலுத்தப்பட்ட ஜிசாட்-8, ஐஆர்என்எஸ்-1ஏ  மற்றும் ஐஆர்என்எஸ்-1பி- செயற்கைக் கோள்களுக்கு இணையாக நிலை நிறுத்தப்படும்.

எடை: 3181.6 கிலோகிராம்
அளவு: 2மீ X 1.77மீ X 3.1மீ  வடிவம். 
LAM மோட்டார்: 440 நியூட்டன் திரவ மோட்டார்
மின்சக்தி: 180 AH லித்தியம் மின்கலன்களுடன் 6000 வாட் மின்சக்தி.
ஆண்டெனா: சி வரிசை ஆண்டெனா மற்றும் கேயூ வரிசை ஆண்டெனா 22மீ X 24 மீ நீள்வட்ட வடிவமுடையது. 
ஆயுட்காலம்: 12 வருடங்கள்.
பூமி மற்றும் சூரிய உணரிகள் (சென்சார்ஸ்) மூலம் இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ளும்.


Ariane 5ES with ATV 4 on its way to ELA-3.jpg
ஜிசாட்-16 ஐ செலுத்தும் ஏரியான் 5 செலுத்து வாகனம்.             கேயூ வரிசயில் 12 டிரான்ஸ்பாண்டர்களும் சி வரிசையில் 24 டிரான்ஸ்பாண்டர்களும் உள்ளன. நீட்டிக்கப்பட்ட சி வரிசையில் 12 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. ஆக மொத்தம் 48 டிரான்ஸ்பாண்டர்கள். இத்தகைய டிரான்ஸ்பாண்டர்கள்தான் தகவல் தொடர்புக்கு உதவுகின்றன. ஐ எஸ் ஆர் ஓ இதுவரை தயாரித்த செயற்கைக் கோள்களில் அதிக பட்ச டிரான்ஸ்பாண்டர்கள் கொண்டது இதுதான். 55 டிகிரி கிழக்கில் நிலை நிறுத்தப்படுகிறது.

மேலும் சில புகைப்படங்கள் கீழே,


http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-1.jpg
http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-2.jpg
http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-3.jpg


"க்ரையோஜெனிக்" தொடர்பான கட்டுரை.

ஜி எஸ் எல் வி உருவாக்கம்.

PSLV-C23 பற்றிய கட்டுரை.

பிஎஸ்எல்வி- சி26 PSLV- C26 (IRNSS-1C) பற்றிய கட்டுரை.

மங்கள்யானைப் பற்றியக் கட்டுரை.

புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ, விக்கிப்பீடியா மற்றும் Arianespace.
 

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...