Knowledge is good only if it is shared.

Wednesday, October 29, 2014

வானியல்- 8 (ஹயபுஸா)

 விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அந்த வரிசையில் முதலில் "ஹயபுஸா"


                 "யபுஸா". கொஞ்சம் அடித்தொண்டையிலிருந்து காற்று அதிகமாகவும் சத்தம் கம்மியாகவும் வரும்படிச் சொல்ல வேண்டும். "ஹயபுஸா". ஜப்பானியர்கள் இப்படித்தான் உச்சரிப்பார்கள். இதற்கு "கழுகு" என்று அர்த்தம். மொழியாராய்ச்சியை ஒத்திவைத்துவிட்டு வானியலுக்கு வருவோம். விண்வெளிச் சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, சீனா என்ற வரிசையில் ஜப்பானுக்கும் முக்கிய இடம் உண்டு. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இந்தியாவையும் அந்த லிஸ்டின் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.

"ஹயபுஸா" விண்கலன்


                      "யபுஸா" திட்டம்,  விண்கற்களை (Asteroid)) ஆய்வு செய்வதற்காக "ஜப்பானிய விண்வெளி நிறுவனத்தால்" (JAXA) ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த விண்கல்லின் திருநாமம் "25143 இடோகவா"


25143 இடோகவா


                  கொஞ்சம் சிக்கலான திட்டம் இது. அதுவரையில் யாருமே செய்யாத ஒன்று. அதனால் தான் இது முக்கியமெனப்படுகிறது. அத்துவாரிக் கொண்டு அதிவேகத்தில் வரும் விண்கல்லில் ஒரு இயந்திரத்தை இறக்கி அதன் மேற்பரப்பிலிருந்து சாம்பிளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு வருவதுதான் திட்டம்.

Hayabusa hover.jpg
ஹயபுஸாவின் கணிப்பொறி வரைபடம்

                    மிகவும் சவாலான திட்டமும் இது. "இடோகவா" சிறிய விண்கல். 500 மீட்டர் விட்டமுடையது. சாம்பிளைச் சரியாக எடுக்க முடியாமல் கேப்சூல் (Capsule) திரும்பிவிட்டது என்ற விமர்சனமும் இத்திட்டத்தில் உண்டு. 2013 ஜனவரியில் ஜப்பானிய விண்வெளித்துறை "ஹயபுஸா" திட்டத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை சர்வதேச அளவில் எந்த நிறுவனமும் ஆய்வு செய்யலாம் என அறிவித்துள்ளது. எனவே எதிர்பார்த்த அளவு மாதிரியைச் சேகரிக்காவிட்டாலும் வெறுங்கையோடு வரவில்லை என்பது தெரிகிறது.இந்த "ஹயபுஸா"வில்,

High-gain antena,
Sampler horn,
Medium-gain antena,
Small recovery capsule,
Ion Engines (4 no.s)
Solar array panel
Low-gain antena
Bi-Propeller thrustors (12 units)
Minerva
Target markers (3 units)
Laser altimeter
Wide-angle camera

 போன்ற உபகரணங்கள் இருந்தன.


                  2003 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட "ஹயபுஸா" 2005 ஆம் ஆண்டு விண்கல்லில் இறங்கியது.

Hayabusa lights up the Australian sky

 சில கருவிகள் சரியாக வேலை செய்யாததால் திட்டமிட்டபடி சாம்பிள் எடுக்க இயலவில்லை. பூமிக்குத் திரும்ப வந்தது 2010. பூமியில் இறங்கிய இடம் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியா. இதுதான் கதைச் சுருக்கம்.

இதிலுள்ள சோகக் கதையைப் பார்க்கலாம்.

"ஹயபுஸா" திரும்பி பூமிக்கு வந்ததன் காணொளி கீழே,  • 2003 மே 9 அன்று ஜப்பானின் "ககோசிமா" (Kagoshima) ஏவுதளத்திலிருந்து எம்.வி ராக்கெட் ஏவப்பட்டது. ஏவும் போதே பூஸ்டர்  A சரியாக வேலை செய்யவில்லை.


எம்.வி ராக்கெட்  • பின்னர் ஏற்பட்ட சூரிய நடுக்கத்தில் (Solar Flare) சோலார் பேனல்கள் பாதிக்கப்பட்டது.

  • ரியாக்சன் வீல்கள் பழுதானது. படமெடுப்பதற்காக அனுப்பப்பட்ட MINERAVA ரோவர் தவறாக இறக்கப்பட்டது. 

  • கெமிக்கல் த்ரஷ்டர்கள் உடைந்தது.

  • 2005 இறுதியில் இதனுடனான பூமித் தொடர்பும் அறுந்தது. மீண்டும் தொடர்பு கிடைத்தது.

  •  ஆனால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்தது. கடின முயற்சிக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சாம்பிள் கேப்சூல் மூடப்பட்டது. 

  •  மற்றுமொரு த்ரஷ்டரான B உடைந்தது. D த்ரஷ்டர் உடைந்தது. த்ரஷ்டர்கள் A மற்றும் B சரி செய்யப்பட்டது. 

ஒருவழியாய் ஜூன் 2010-ல் ஆஸ்திரேலிய மண்ணை முத்தமிட்டது. விண்வெளித் திட்டங்களின் சவாலுக்கு முக்கிய உதாரணமாய் இத்திட்டத்தைச் சொல்லலாம்.


Photo inside the Hayabusa sample capsule
தூசுகளை சேகரித்த கேப்சூல்

                   த்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட "ஐயான்" (Ion) இயந்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். "செனான்" வாயு (xenon gas) மூலம் இயங்கும் "ஐயான்" இன்ஜின் 18000 மணி நேரம் Geobility test செய்யப்பட்டது. இதில் "ஐயான்" இயந்திரங்கள் நான்கு பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரமே விண்கலனின் இயக்கத்திற்குத் தேவையான உந்தத்தைக் கொடுத்தது. சூரியத் தகடுகளின் மின்சாரம் மூலம் செனான் வாயு "மைக்ரோவேவ்" அலைகளால் ionization  செய்யப்பட்டு சக்தியாக மாற்றப்பட்டது. இது உலகின் முதல் "ஐயான்" இயந்திரமாகும். வருங்கால தொலைதூர விண்வெளிப் பயணங்களுக்கு சூரிய ஒளி மற்றும் செனான் வாயு மூலம் இயங்கும் இந்த இயந்திரம் பெரும் உதவியாய் இருக்கக் கூடும்.

                     பூமியிலிருந்து எம்.வி 5 ராக்கெட் மூலம் கிளம்பி பூமியைச் சுற்றியபின்னர் விண்கலன் விண்கல்லின் வட்டப்பாதையை நோக்கிச் சென்றது. தரைக் கட்டுப்பாட்டு மையம் தொடர்ச்சியாக விண்கலத்தின் "ஐயான்" இன்ஜினை இயக்கி சரியான பாதையில் பயணப்பட வைத்தனர். இரண்டு வருடம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு விண்கலன் "இடோகவா" விண்கல்லைச் சென்று அடைந்தது. "இடோகவா" விண்கல்லின் அருகே விண்கலன் சென்றதும், அது விண்கல்லின் உருவம் அதன் மேற்பரப்பின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தது. "ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு" (Hybrid Navigation System) மூலம் இவ்வாறு ஆராய்ந்ததில் விண்கல்லின் சமதளமானப் பரப்பு கண்டுணரப்பட்டு, உலகின் முதல் விண்கல் மாதிரியைச் சேகரிக்கத் தயாரானது "ஹயபுஸா".


"ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு" (Hybrid Navigation System)


எனவே "ஹயபுஸா" விண்கல்லின் அருகில் 30 மீட்டர் தொலைவில் மெதுவாக நெருங்கிச் சென்றது. அவ்வாறு சென்றதும் "ஹயபுஸா" ஏற்கனவே எடுத்துச் சென்றிருந்த பந்து வடிவ "இடம் சுட்டி" (Target Marker) விண்கல்லில் விழ வைக்கப்பட்டது.

இடம் சுட்டி (Target Marker)                 சுவாரசியமான செய்தி ஒன்று. அந்த விண்கல்லில் விழவைக்கப்பட்ட அந்த இடம் சுட்டியின் (Target Marker) உள்ளே உலகெங்கும் உள்ள மக்களில் 8,80,000 பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வரும் டிசம்பரில் பறக்கவிருக்கும் ஓரியானில் எனது பெயரைப் பொறிக்கப் பதிவு செய்துள்ளேன். ஏதோ நம்மால முடிஞ்சது. கம் பேக் டு த பாயிண்ட். 

            விண்கல்லில் விழ வைக்கப்பட்ட இடம் சுட்டியின் தகவலின் படி "ஹயபுஸா" விண்கல்லில் இறங்கியது. பின்னர் விண்கல்லின் மேற்பரப்பில் மாதிரியைச் சேகரிக்கும் கருவியின் குழல் போன்ற பாகம் விண்கல்லின் மேற்பரப்பைத் தொட்டதும், அக்குழலின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிறிய உலோகக் குண்டு வினாடிக்கு 300 மீட்டர் வேகத்தில் விண்கல்லில் விழுந்தது. இதனால் கிளம்பிய தூசில் ஒரு கிராம் மாதிரிச் சேகரிப்பானில் சேகரம் பண்ணப்பட்டது.

மாதிரி சேகரிப்பான்

            தை ஆராய்ந்ததில் 10 மைக்ரானுக்கும் குறைவான 1500 தூசுகள் இதன் காப்சூலில் இருந்தது. 30 முதல் 180 மைக்ரான் அளவுள்ள 40 தூசுகளும் இருந்தன. இதில் olivine, pyroxene, feldspar போன்ற  தாதுகள் இருந்தன. மேலும் "ஹயபுஸா" விண்கல்லை புகைப்படமும் எடுத்தது.

          "யபுஸா" விண்கல்லின் மேலே 150 அடி உயரத்தில் இருந்தபோது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட கட்டளை கிடைக்கும் முன்னரே MINERAVA (விண்கல்லை புகைப்படமெடுக்கும் அமைப்பு) ரோவர் இறங்கியது. விண்கல்லின் அருகே சென்றதுமே "ஹயபுஸா" தானாகவே இயக்குமாறு வடிவகைக்கப்பட்டிருந்தது. (பூமிக்கும் அதற்குமான சிக்னல் செல்ல ஆகும் நேரம் 30 நிமிடங்கள், எனவே இந்த ஏற்பாடு) விண்கல்லில் இறங்கிய போது இயந்திரத்தில் ஏற்பட்ட சேதத்தால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. இயந்திரம் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இப்போதும் "ஐயான்" இயந்திரத்தை இயக்கி ஹயபுஸாவைச் சமநிலைப்படுத்திய பின்னர் 2007 ஆம் ஆண்டு விண்கல்லிலிருந்து பூமியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது "ஹயபுஸா".

                 2010 ஆம் ஆண்டு மாதிரியைச் சேகரித்த "கேப்சூலை" (capsule) பூமியை நோக்கி விழவைத்தது ஹயபுஸா. பூமியின் வளிமண்டலத்தினால் ஏற்பட்ட உராய்வு வெப்பத்தைத் தடுக்கும் வகையில் "கேப்சூல்" (capsule) வடிவமைக்கப்பட்டிருந்தது. கடைசியில் ஆஸ்திரேலியால் "கேப்சூல்" (capsule) விழுமாறு திட்டமிட்டிருந்தபடியே விழுந்தது. ஜப்பானிய விண்வெளி அமைப்பு புதிய சரித்திரம் படைத்தது.

Hayabusa's first landing
25143 இடோகவாவின் மேற்பரப்பில் மாதிரி சேகரிப்பான்
                    கிட்டத்தட்ட நாலேமுக்கால் கோடி தொலைவில் சென்று அதன் பரப்பிலிருந்து மாதிரியைச் சேகரித்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் பூமியை அடைந்ததே "ஹயபுஸா"வின் மிகப் பெரிய வெற்றிதான். மனித குலத்தின் மகத்தான பொறியியலின் சாதனை இது.


       பல இன்னல்கள் வந்த போதும் அதிலிருந்து "பீனிக்ஸ்" பறவையாய் "ஹயபுஸா" மீண்டெழுந்தது நமக்கெல்லாம் பெரும் பாடம். ஆம் NEVER GIVE UP.


                 திடீரென இத்திட்டம் எனக்கு நியாபகம் வரக் காரணம். வரும் நவம்பரில் (2014) "ஹயபுஸா 2" திட்டத்திற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த முறை அதன் இலக்கு 1999 JU3 விண்கல். வாழ்த்துகள் ஜப்பான்.

தொடரும்...

புகைப்பட உதவி: JAXA

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம். 


 

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

2 comments:

வடுவூர் குமார் said...

அருமையாக இருக்கு.

பாலா.R ( BALA.R ) said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...