Knowledge is good only if it is shared.

Wednesday, October 15, 2014

வானியல்- 2 (விண்கற்கள்)

                                                     விண்கற்கள் - அஸ்டிராய்டுகள் - Asteroids                  
          

              விண்கற்கள் எனப்படும் அஸ்டிராய்டுகள்ங்கிறது (Asteroids) பாறைகள். இதை பெரும் பாறைகள்னு சொல்லலாம். பல இலட்சக்கணக்கான பாறைகள் நம் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

விண்கல்


                       விண்வெளியில் என்றால், நமது சூரியக் குடும்பத்தில். அதுவும் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையே அதி வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சரி, இதெல்லாம் எப்படி வந்துச்சு? சூரிய குடும்பம் உருவாகும் போதே இவை இருக்கின்றன என்கிறார்கள். மேலும் சூரியக் குடும்பம் உருவாகியது போக மீதியுள்ளவை இப்பாறைகள். இதோட உருவம் கோள்களை விடச் சிறியது. 100 கிலோமீட்டர் முதல் 1000 கிலோ மீட்டர் வரை இருக்கிறது. சில சமயம் இது பூமியின் வட்டப்பாதைக்குள் நுழைந்து நம் பூமியை நோக்கி வந்து பயமுறுத்துகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் கூட பூமியை நோக்கி வந்த விண்கல் ஒன்று கடைசியில் மோதாமல் விலகியதால் நாமெல்லாம் தப்பித்தோம். மோதியிருந்தால்? அதன் விளைவுகள் மோதிய அஸ்டிராய்டின் உருவத்தைப் பொருத்து. வந்து மோதுகிற வேகத்தில் கிளம்பும் புழுதியில் எத்தனை உயிரினங்கள் மடியுமோ? இந்த மாதிரி செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே சுற்றி வரும் இந்த விண்கற்களை "அஸ்டிராய்டு பெல்ட்"னு (Asteroid Belt) சொல்றாங்க.

"அஸ்டிராய்டு பெல்ட்"னு (Asteroid Belt)


                           இதுல சிலதுக்கு பெயரெல்லாம் வச்சிருக்காங்க. இன்னும் பல விண்கற்கள் அடையாளப்படுத்தப்படாமல் இருக்கிறது. காரணம்  நூறு கிலோமீட்டரைவிடச் சின்னதுதான் இதன் சைஸ். இந்த மாதிரி சின்ன விண்கற்களை விண்வெளியில் கண்டுபிடிப்பதே சிரமம். பத்து இலட்சத்திற்கும் அதிகமான விண்கற்கள் நமது விண்வெளியில் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் வானில் நட்சத்திரங்கள் உருகி விழுவதாய் நாம் காண்பதெல்லாம் இந்த விண்கற்கள் தான். நாமெல்லாம் இன்னும் உயிரோடிருப்பதே அதிசயம் தான். இப்படியானதொரு விண்கல் தாக்குதலில் தான் "டைனோசரர்கள்" அழிந்தன. அவை மட்டுமல்ல, உலகின் அப்போதைய உயிரினங்களில் 70% அழிந்தன என்கின்றனர் அறிவியலாளர்கள்.



          இவ்வளவும் தெரிஞ்சாச்சு, அப்படியே இந்த மாதம் 19 ஆம் தியதி விண்வெளியில் நடக்கும் முக்கியமான விண்கல் நிகழ்வையும் பார்த்து விடுவோம்.



விண்கல்லின் செவ்வாய்ப் பயண வரைபடம்

                
                     C/2013 A1 (Siding spring)ங்கிற விண்கல் (comet) 2014 அக்டோபர் 19 அன்று செவ்வாய் கிரகத்தின் அருகில் போகிறது. இது Near Miss ஒரு நிகழ்வு. இந்த விண்கல்லை Robert McNaught கண்டுபிடித்தார். இது நெப்டியூனைத் தாண்டி இருக்கிற Oort cloud ஏரியாவிலிருந்து வருகிறது. (இந்த Oort cloud மற்றும் Kuiper belt பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) அதிவேகத்தில் வந்து நமது சூரியக் குடும்பத்தின் கிரகங்களின் வட்டப்பாதையை கடந்து செல்கிறது. அப்படிச் செல்லும் போது இது செவ்வாயின் அருகே செல்கிறது.

The orbit of Mars (red) and the orbit of comet Siding Spring (blue)


இது தொடர்பாய் சில கேள்வி பதில்.

இது செவ்வாயில் மோதுமா?
இல்லை, செவ்வாயின் மிக அருகில் வேகமாகச் செல்லும்.

செவ்வாயின் மிக அருகில் என்றால் எவ்வளவு தொலைவில்?
கிட்டத்தட்ட 1,40,000 கிலோமீட்டர் தொலைவில்.

அப்படின்னா செவ்வாய்க்கும் இதற்கும் ரெம்பத் தூரம் அச்சே, அப்புறம் எப்படி இது Near Miss நிகழ்வு ஆகும்?
1,40,000 கிலோமீட்டர் என்பது நமக்கு வேண்டுமானால் மிகத் தொலைவாக இருக்கலாம். விண்வெளியில் இரண்டு பொருட்கள் 1,40,000 கிலோமீட்டர் தொலைவில் செல்வது என்பது அபாயகரமான நெருக்கமான தூரம் ஆகும். இன்னும் சொல்வதானால் பூமிக்கு அருகில் வந்த விண்கற்களின் தொலைவுடன் ஒப்பிடும் போது இது பத்து மடங்கு செவ்வாய்க்கு அருகில் செல்கிறது. எனவே இது Near Miss ஒரு நிகழ்வு. கீழேயுள்ள காணொளியைப் (Video) பாருங்கள்.



எவ்வளவு வேகத்தில் செவ்வாயின் அருகே இது கடக்கிறது?
உண்மையிலேயே ரெம்ப வேகம். வினாடிக்கு 57.4 கிலோமீட்டர்கள். அதாவது மணிக்கு 2,06,640 கிலோமீட்டர் வேகம்.

இந்த விண்கல்லின் அளவு (சைஸ்) என்ன?
இதன் விட்டம் 700 மீட்டர்.

சரி இது செவ்வாயில் மோதவில்லை, ஆனால் செவ்வாயை ஆராய நாம் செலுத்தியுள்ள மங்கள்யானுக்கு ஏதாவது பாதிப்பு உண்டா?
நேரடிப் பாதிப்பு இல்லை. ஆனால் இது செல்லும் வேகத்தில் உண்டாகும் புழுதியினால் (வால் அல்லது மேகம்) சில பாதிப்புகள் ஒருவேளை வரலாம். மற்றபடி எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பு: இந்த விண்கல் செவ்வாயைக் கடக்கும் போது மங்கள்யான் செவ்வாயின் மறுபுறத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இருக்குமாறு அதன் வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. இதுக்கு 1.9 கிலோகிராம் எரிபொருள் செலவானது.

விண்கல்லின் செவ்வாய்ப் பயண வரைபடம்

இவ்விண்கல்லை மங்கள்யான் ஆராயுமா?
வாய்ப்பு மிகவும் குறைவு. ஒன்றிரண்டு படங்கள் எடுக்கலாம். ஏனெனில் இந்தகைய விண்கற்களை ஆராயும் நோக்கில் மங்கள்யானோ (MOM) அல்லது நாசாவின் (NASA) "மேவனோ" (Mevan) வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவ்விண்கல் செவ்வாயின் அருகில் செல்வதால் செவ்வாயின் வளிமண்டலத்தில் உருவாகும் தூசி மற்றும் வாயுக்களை ஆராயும் வாய்ப்பு உள்ளது.

விண்கல்லின் செவ்வாய்ப் பயண வரைபடம்

நமது பூமியிலிருந்து இதைப் பார்க்க முடியுமா?
ம்ம்ம்...... நம்மால் வெறும் கண்களால் செவ்வாய் கிரகத்தைப் பார்க்க முடியும். இவ்விண்கல்லைப் பார்க்க முடியாது. ஆனால் நல்ல சக்தி வாய்ந்த தொலைநோக்கி இருந்தால் பார்க்கலாம். மாலையில் தென்மேற்குத் திசையில் தொடுவானத்தில் செவ்வாயைப் பார்க்கலாம்.

செவ்வாய் கிரகத்தைப் பார்ப்பதற்கான வரைபடம்.

புகைப்பட உதவி: NASA மற்றும் JET PROPULSION LABORATORY

தொடரும்...

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி



No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...