Knowledge is good only if it is shared.

Friday, October 31, 2014

வானியல்- 9 (ஹப்பிள் தொலைநோக்கி - HUBBLE TELESCOPE)

 ஹப்பிள் தொலைநோக்கி - HUBBLE TELESCOPE
  விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது இரண்டாவது. 

                     1990 ஏப்ரல் மாதம் 25 ஆம் தியதி அமெரிக்காவின் ''கேப் கேனவரல்'' ஏவுதளத்திலிருந்து "ஷட்டில் டிஸ்கவரி" மூலம் ஏவப்பட்ட "ஹப்பிள் தொலைநோக்கி" (HUBBLE TELESCOPE) தனது 25 ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடும்.                    நான் இக்கட்டுரையை எழுதும் போது தென்னமெரிக்காவின் பொலிவியா நாட்டிற்கு நேர் மேலே 549 கிலோமீட்டர் உயரத்தில் வினாடிக்கு 7.15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது "ஹப்பிள்". பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்களுக்கு விடையளித்த அற்புதமான கருவி இது. அமெரிக்காவும் ஐரோப்பியக் கூட்டமைப்பும் இணைந்து திட்டமிட்டு செயல்படுத்திய ஒன்று இது.


                    நாம் நம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய மின்காந்த அலைகளின் அலைநீளம் 400 நானோமீட்டரிலிருந்து 700 நானோமீட்டர்கள், உங்களின் தகவலுக்காக ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறுகோடியில் ஒன்று. இந்த ஒரு நானோமீட்டரில் வரிசையாக 10 அணுக்களை அடக்கலாம். அவ்வளவே. நாம் பார்க்கும் இந்த 400 முதல் 700 வரையிலான அலை நீளத்தில்தான் "விப்ஜியார்" (Violet Indigo Blue Green Yellow Orange Red) வண்ணங்களைப் பார்க்கிறோம். இதை வைத்துக் கொண்டுதான், "பொண்ணு கலரு சரி இல்லை என்பதிலிருந்து மில்கி ஒயிட் கலரு காரு வாங்கணும்" என்பது வரை அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொன்றும் அலைகள். ஒவ்வொன்றிற்கும் அலைநீளமும் உண்டு அதிர்வெண்ணும் உண்டு. இயற்பியலில் விதிப்படி அலை அல்லது துகள்தான் உலகத்தில். அது காலையில் சாப்பிட்ட இட்டிலியாக இருந்தாலும் சரி திரையில் பார்க்கிற சினிமாவாக இருந்தாலும் சரி இதற்குள் அடக்கிவிடலாம். இதைப் பற்றி விரிவாகத் தெரிய "க்வாண்டம் மெக்கானிசம்" தெரிய வேண்டும். இப்போதைக்கு "ஹப்பிள்" கதையைப் பார்ப்போம்.
ஹப்பிள் தொலைநோக்கி                   நாம் மேலே பார்த்தபடி நம் கண்ணுக்குப் புலனாகாத அலைவரிசைகளும் இருக்கின்றன. மிகத் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் அல்லது அவற்றின் பிறப்பிடமான நெபுலாக்கள் (நெபுலா பற்றி தனிக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்) இவை உமிழும் அலைகள் (ஒளி) நமது வெறுங்கண்ணுக்குப் புலனாகாது. இவற்றை தொலைநோக்கியின் மூலம் பிரித்தெடுத்து வகைப்படுத்தி பார்க்கலாம். அதற்காக அனுப்பப்பட்டதான் "ஹப்பிள்". இது பிரிந்தரிந்து பார்க்கும் திறன், மிகக்குறைந்த அலைநீளமுடைய "காமா" கதிர்களிலிருந்து மிக அதிக அலைநீளமுடைய "ரேடியோ" கதிர்கள் வரை. நமது பார்க்கும் திறனான 400 நானோமீட்டரிலிருந்து 700 நானோமீட்டருக்கும் மேலே அகச்சிவப்புக் கதிர்கள் மற்றும் ரேடியோ கதிர்கள் உள்ளன. அதற்கும் கீழே குறைந்த அலைநீளமுடைய புற ஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உள்ளன. 0.01 நானோமீட்டரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் வரையிலான அனைத்து அண்டசராசர பொருட்கள் உமிழும் அலைகளையும் உள்வாங்கி பிரித்தரியும் திறன் கொண்டது இந்த "ஹப்பிள்". இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் நட்சத்திரங்கள் உமிழும் புறஊதாக் கதிர்களை நம்மால் பார்க்க இயலாது. "ஹப்பிள்" அதை உள்வாங்கி சிறப்புக் கருவிகள் மூலம் பிரித்தாராய்ந்து நமக்கு அனுப்பும்.

ஹப்பிள் படம் பிடித்த வியாழன்                         "லிலியோ கலிலி" முதலானோர் பயன்படுத்திய தொலைநோக்கியிலிருந்து "ஹப்பிள்" வரை முன்னேறி பல விண்வெளி ரகசியங்களைக் கண்டுபிடித்துள்ளோம். ஆயிரக்கணக்கான உபயோகமான புகைப்படங்களை "ஹப்பிள்" தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. பிரபஞ்சத்தின் வயது முதல் கருந்துழை வரை பல்வேறு ரகசியங்கள் பொதிந்தவை அவை. "ஹப்பிள்" அனுப்பிய தகவல்களைக் கொண்டு 10,000 அதிகமான ஆராய்சிகள் நடந்துள்ளன. சரி இந்த் "ஹப்பிள்" தொலைநோக்கியை ஏன் அந்தரத்தில் நிறுவ வேண்டும். பூமியில் வைத்தால் என்ன? காரணம் இருக்கிறது, பூமியின் வளிமண்டலத்தால் காமா கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என அனைத்தும் பாதிப்படையும். வளிமண்டலத்தின் பாதிப்பிற்குப் பின்னரே நம்மை எட்டும். (உதாரணம்: சில நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்) இம்மாதிரியான விளைவுகளைத் தவிர்க்கத்தான் நமது வளி மண்லடத்திற்கு மேலே "ஹப்பிள்" நிறுவப்பட்டது. இந்த "ஹப்பிள்" அனுப்பும் தகவல்கள் விண்வெளியில் ஏற்கனவே இதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள செயற்கைக் கோளுக்குச் சென்று பின்னர் அதன் மூலம் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகிறது. அந்தச் செயற்கைக்கோள் கோயில் பூசாரி மாதிரி ஓர் "இண்டர்மீடியேட்டர்".
                   ந்த "ஹப்பிள்" தொலைநோக்கியினுள்ளே பல அறிவியல் உபகரணங்கள் இருக்கின்றன. கொஞ்சம் சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம். வழக்காமான தொலைநோக்கியில் இருப்பது போலவே இதிலும் முதன்மை ஆடியும் இரண்டாம் ஆடியும் இருக்கும். இவற்றில் பிரதிபலிக்கும் ஒளி பின்வரும் கருவிகளால் ஆராயப்படுகிறது.

Wild Field Camera 3: சுருக்கமாக WFC3. ஹப்பிளில் இருக்கும் உபகரணங்களில் துல்லியமானது இது. புதிய கருவியும் கூட. புறஊதாக் கதிர்கள் அகச் சிவப்புக் கதிகளை ஆராய்ந்து பிரபஞ்சத்தில் அதிகமாக உள்ள கருப்பு ஆற்றல் மற்றும் கருப்பு பொருள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை தருகிறது.

 

 Cosmic Origins Spectrograph:  சுருக்கமாக COS. இதுவும் புதிய கருவிதான். புறஊதாக் கதிர்களை மிகத் துல்லியமாகப் பிரித்துத்துக் கொடுக்கிறது. ஒளி எங்கிருந்து வருகிறது அப்பொருளின் வெப்பநிலை, வேதியல் சேர்க்கை, அடர்த்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றை துல்லியமாக கண்டுபிடிக்கிறது.

Advance Camera for Surveys: சுருக்கமாக ACS. கருப்பு ஆற்றல், கருப்புப் பொருள், மிகப்பெரிய கிரகங்கள், விண்மீன் கொத்துகள், அண்டங்கள் ஆகியவற்றை ஆராய உதவுகிறது இக்கருவி. 2007 ஆம் ஆண்டில் மின்சார கசிவினால் வேலை செய்யாமல் இருந்தது. 2009-ல் சரி செய்யப்பட்டு இப்போது இயங்குகிறது.


Space Telescope Imaging Spectrograph: சுருக்கமாக STIS. நட்சத்திரங்களையும், கருந்துழைகளையும் புறஊதாக் கதிர்கள் மற்றும் அகச் சிவப்புக் கதிர்கள் மூலம் பகுத்தாய்ந்து தகவல்களை வழங்குகிறது.


Near Infrared Camera and Multi-Object Spectromeeter: சுருக்கமாக NICMOS. இது அகச்சிகப்புக் கதிரின் மூலம் வெப்பத்தை உணருகிறது. விண்வெளியில் கிரகங்களுக்கு இடையே பரவியுள்ள தூசு போன்றவற்றை ஆராய இது பயன்படுகிறது.

Fine Guidance Sensors: சுருக்கமாக FGS. நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கவும், அவற்றின் நகர்வைக் கவனிக்கவும் இந்தக் கருவி பயன்படுகிறது. மேலும் "ஹப்பிள்" தொலைநோக்கியை நட்சத்திரங்களை அடையாளாமாகக் கொண்டு சரியான திசையில் நோக்க உதவுகிறது. 


ஹப்பிளில் பராமரிப்புப் பணி          "ப்பிள்" தொலைநோக்கியின் அனைத்து செயல்களும் சூரிய மின்சாரத்தினால் நடைபெறுகிறது. இதற்காக சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியின் நிழலிலோ அல்லது சூரியப் புயல் காலங்களிலோ மின்கலன்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
இத்தொலைநோக்கி மூலம் ஆராச்சி செய்ய வருடந்தோறும்  1000 கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் மிகச் சிறந்த 200 தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

     க்கட்டுரையை எழுதி முடித்ததும் தற்போது ஹப்பிள் எந்த இடத்தில் இருக்கிறது எனப் பார்த்தேன். சென்னைக்கு மேலே பயணப்பட்டு நான் வசிக்கும் சிங்கப்பூரின் மேலே போய்க்கொண்டிருக்கிறது விண்வெளியின் மகத்தான புதிர்களுக்கு விடையைத் தேடி.
  "ஹப்பிள்'' எடுத்த சில புகைப்படங்கள் கீழே...


புகைப்படம்: ESA/Hubble Flashback: Hubble Reveals Ultraviolet Galactic Ring. Feel free to share!

The appearance of a galaxy can depend strongly on the colour of the light with which it is viewed. This Hubble Heritage image of NGC 6782 illustrates a pronounced example of this effect. This spiral galaxy, when seen in visible light, exhibits tightly wound spiral arms that give it a pinwheel shape similar to that of many other spirals. However, when the galaxy is viewed in ultraviolet light with NASA/ESA Hubble Space Telescope, its shape is startlingly different.

View larger image at:
http://www.spacetelescope.org/images/opo0137a/

Credit: NASA - National Aeronautics and Space Administration/ ESA - European Space Agency and The Hubble Heritage Team (STScI/AURA)
புற ஊதாக் கதிர்களைக் கொண்டு பிரித்தறியப்பட்ட மற்றுமொரு சுருள் அண்டம்
சூரியக் குடும்பத்தின் "கைப்பர் பட்டை"யிலுள்ள பொருட்கள்

புகைப்படம்: ESA/Hubble Flashback: Earth-based view of Mars. Feel free to share!

Frosty white water ice clouds and swirling orange dust storms above a vivid rusty landscape reveal Mars as a dynamic planet. The Earth-orbiting Hubble telescope snapped this picture on June 26 2001, when Mars was approximately 43 million miles (68 million km) from Earth.

View larger image at:
http://www.spacetelescope.org/images/opo0124a/

Credit: NASA - National Aeronautics and Space Administration/ ESA - European Space Agency and The Hubble Heritage Team STScI/AURA
செவ்வாய்

புகைப்படம்: Turquoise-tinted plumes in the Large Magellanic Cloud — ESA - European Space Agency / Hubble Space Telescope Picture of the Week
http://www.spacetelescope.org/images/potw1441a/
நம் பால்வெளி அண்டத்தின் அருகேயுள்ள சிறிய அண்டம் (டராண்டுலா நெபுலா)
புகைப்படம்: A dusty spiral galaxy in Virgo — ESA/Hubble Picture of the Week.
A version of this image was entered into the Hubble's #HiddenTreasures image processing competition by contestant Nick Rose.
http://www.spacetelescope.org/images/potw1440a/
Credit: ESA/Hubble & NASA
Acknowledgement: Nick Rose
சுருள் வடிவ அண்டம்
தொடரும்...

புகைப்பட உதவி: நாசா

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

Wednesday, October 29, 2014

வானியல்- 8 (ஹயபுஸா)

 விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அந்த வரிசையில் முதலில் "ஹயபுஸா"


                 "யபுஸா". கொஞ்சம் அடித்தொண்டையிலிருந்து காற்று அதிகமாகவும் சத்தம் கம்மியாகவும் வரும்படிச் சொல்ல வேண்டும். "ஹயபுஸா". ஜப்பானியர்கள் இப்படித்தான் உச்சரிப்பார்கள். இதற்கு "கழுகு" என்று அர்த்தம். மொழியாராய்ச்சியை ஒத்திவைத்துவிட்டு வானியலுக்கு வருவோம். விண்வெளிச் சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, சீனா என்ற வரிசையில் ஜப்பானுக்கும் முக்கிய இடம் உண்டு. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இந்தியாவையும் அந்த லிஸ்டின் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.

"ஹயபுஸா" விண்கலன்


                      "யபுஸா" திட்டம்,  விண்கற்களை (Asteroid)) ஆய்வு செய்வதற்காக "ஜப்பானிய விண்வெளி நிறுவனத்தால்" (JAXA) ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த விண்கல்லின் திருநாமம் "25143 இடோகவா"


25143 இடோகவா


                  கொஞ்சம் சிக்கலான திட்டம் இது. அதுவரையில் யாருமே செய்யாத ஒன்று. அதனால் தான் இது முக்கியமெனப்படுகிறது. அத்துவாரிக் கொண்டு அதிவேகத்தில் வரும் விண்கல்லில் ஒரு இயந்திரத்தை இறக்கி அதன் மேற்பரப்பிலிருந்து சாம்பிளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு வருவதுதான் திட்டம்.

Hayabusa hover.jpg
ஹயபுஸாவின் கணிப்பொறி வரைபடம்

                    மிகவும் சவாலான திட்டமும் இது. "இடோகவா" சிறிய விண்கல். 500 மீட்டர் விட்டமுடையது. சாம்பிளைச் சரியாக எடுக்க முடியாமல் கேப்சூல் (Capsule) திரும்பிவிட்டது என்ற விமர்சனமும் இத்திட்டத்தில் உண்டு. 2013 ஜனவரியில் ஜப்பானிய விண்வெளித்துறை "ஹயபுஸா" திட்டத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை சர்வதேச அளவில் எந்த நிறுவனமும் ஆய்வு செய்யலாம் என அறிவித்துள்ளது. எனவே எதிர்பார்த்த அளவு மாதிரியைச் சேகரிக்காவிட்டாலும் வெறுங்கையோடு வரவில்லை என்பது தெரிகிறது.இந்த "ஹயபுஸா"வில்,

High-gain antena,
Sampler horn,
Medium-gain antena,
Small recovery capsule,
Ion Engines (4 no.s)
Solar array panel
Low-gain antena
Bi-Propeller thrustors (12 units)
Minerva
Target markers (3 units)
Laser altimeter
Wide-angle camera

 போன்ற உபகரணங்கள் இருந்தன.


                  2003 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட "ஹயபுஸா" 2005 ஆம் ஆண்டு விண்கல்லில் இறங்கியது.

Hayabusa lights up the Australian sky

 சில கருவிகள் சரியாக வேலை செய்யாததால் திட்டமிட்டபடி சாம்பிள் எடுக்க இயலவில்லை. பூமிக்குத் திரும்ப வந்தது 2010. பூமியில் இறங்கிய இடம் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியா. இதுதான் கதைச் சுருக்கம்.

இதிலுள்ள சோகக் கதையைப் பார்க்கலாம்.

"ஹயபுஸா" திரும்பி பூமிக்கு வந்ததன் காணொளி கீழே, • 2003 மே 9 அன்று ஜப்பானின் "ககோசிமா" (Kagoshima) ஏவுதளத்திலிருந்து எம்.வி ராக்கெட் ஏவப்பட்டது. ஏவும் போதே பூஸ்டர்  A சரியாக வேலை செய்யவில்லை.


எம்.வி ராக்கெட் • பின்னர் ஏற்பட்ட சூரிய நடுக்கத்தில் (Solar Flare) சோலார் பேனல்கள் பாதிக்கப்பட்டது.

 • ரியாக்சன் வீல்கள் பழுதானது. படமெடுப்பதற்காக அனுப்பப்பட்ட MINERAVA ரோவர் தவறாக இறக்கப்பட்டது. 

 • கெமிக்கல் த்ரஷ்டர்கள் உடைந்தது.

 • 2005 இறுதியில் இதனுடனான பூமித் தொடர்பும் அறுந்தது. மீண்டும் தொடர்பு கிடைத்தது.

 •  ஆனால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்தது. கடின முயற்சிக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சாம்பிள் கேப்சூல் மூடப்பட்டது. 

 •  மற்றுமொரு த்ரஷ்டரான B உடைந்தது. D த்ரஷ்டர் உடைந்தது. த்ரஷ்டர்கள் A மற்றும் B சரி செய்யப்பட்டது. 

ஒருவழியாய் ஜூன் 2010-ல் ஆஸ்திரேலிய மண்ணை முத்தமிட்டது. விண்வெளித் திட்டங்களின் சவாலுக்கு முக்கிய உதாரணமாய் இத்திட்டத்தைச் சொல்லலாம்.


Photo inside the Hayabusa sample capsule
தூசுகளை சேகரித்த கேப்சூல்

                   த்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட "ஐயான்" (Ion) இயந்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். "செனான்" வாயு (xenon gas) மூலம் இயங்கும் "ஐயான்" இன்ஜின் 18000 மணி நேரம் Geobility test செய்யப்பட்டது. இதில் "ஐயான்" இயந்திரங்கள் நான்கு பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரமே விண்கலனின் இயக்கத்திற்குத் தேவையான உந்தத்தைக் கொடுத்தது. சூரியத் தகடுகளின் மின்சாரம் மூலம் செனான் வாயு "மைக்ரோவேவ்" அலைகளால் ionization  செய்யப்பட்டு சக்தியாக மாற்றப்பட்டது. இது உலகின் முதல் "ஐயான்" இயந்திரமாகும். வருங்கால தொலைதூர விண்வெளிப் பயணங்களுக்கு சூரிய ஒளி மற்றும் செனான் வாயு மூலம் இயங்கும் இந்த இயந்திரம் பெரும் உதவியாய் இருக்கக் கூடும்.

                     பூமியிலிருந்து எம்.வி 5 ராக்கெட் மூலம் கிளம்பி பூமியைச் சுற்றியபின்னர் விண்கலன் விண்கல்லின் வட்டப்பாதையை நோக்கிச் சென்றது. தரைக் கட்டுப்பாட்டு மையம் தொடர்ச்சியாக விண்கலத்தின் "ஐயான்" இன்ஜினை இயக்கி சரியான பாதையில் பயணப்பட வைத்தனர். இரண்டு வருடம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு விண்கலன் "இடோகவா" விண்கல்லைச் சென்று அடைந்தது. "இடோகவா" விண்கல்லின் அருகே விண்கலன் சென்றதும், அது விண்கல்லின் உருவம் அதன் மேற்பரப்பின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தது. "ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு" (Hybrid Navigation System) மூலம் இவ்வாறு ஆராய்ந்ததில் விண்கல்லின் சமதளமானப் பரப்பு கண்டுணரப்பட்டு, உலகின் முதல் விண்கல் மாதிரியைச் சேகரிக்கத் தயாரானது "ஹயபுஸா".


"ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு" (Hybrid Navigation System)


எனவே "ஹயபுஸா" விண்கல்லின் அருகில் 30 மீட்டர் தொலைவில் மெதுவாக நெருங்கிச் சென்றது. அவ்வாறு சென்றதும் "ஹயபுஸா" ஏற்கனவே எடுத்துச் சென்றிருந்த பந்து வடிவ "இடம் சுட்டி" (Target Marker) விண்கல்லில் விழ வைக்கப்பட்டது.

இடம் சுட்டி (Target Marker)                 சுவாரசியமான செய்தி ஒன்று. அந்த விண்கல்லில் விழவைக்கப்பட்ட அந்த இடம் சுட்டியின் (Target Marker) உள்ளே உலகெங்கும் உள்ள மக்களில் 8,80,000 பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வரும் டிசம்பரில் பறக்கவிருக்கும் ஓரியானில் எனது பெயரைப் பொறிக்கப் பதிவு செய்துள்ளேன். ஏதோ நம்மால முடிஞ்சது. கம் பேக் டு த பாயிண்ட். 

            விண்கல்லில் விழ வைக்கப்பட்ட இடம் சுட்டியின் தகவலின் படி "ஹயபுஸா" விண்கல்லில் இறங்கியது. பின்னர் விண்கல்லின் மேற்பரப்பில் மாதிரியைச் சேகரிக்கும் கருவியின் குழல் போன்ற பாகம் விண்கல்லின் மேற்பரப்பைத் தொட்டதும், அக்குழலின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிறிய உலோகக் குண்டு வினாடிக்கு 300 மீட்டர் வேகத்தில் விண்கல்லில் விழுந்தது. இதனால் கிளம்பிய தூசில் ஒரு கிராம் மாதிரிச் சேகரிப்பானில் சேகரம் பண்ணப்பட்டது.

மாதிரி சேகரிப்பான்

            தை ஆராய்ந்ததில் 10 மைக்ரானுக்கும் குறைவான 1500 தூசுகள் இதன் காப்சூலில் இருந்தது. 30 முதல் 180 மைக்ரான் அளவுள்ள 40 தூசுகளும் இருந்தன. இதில் olivine, pyroxene, feldspar போன்ற  தாதுகள் இருந்தன. மேலும் "ஹயபுஸா" விண்கல்லை புகைப்படமும் எடுத்தது.

          "யபுஸா" விண்கல்லின் மேலே 150 அடி உயரத்தில் இருந்தபோது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட கட்டளை கிடைக்கும் முன்னரே MINERAVA (விண்கல்லை புகைப்படமெடுக்கும் அமைப்பு) ரோவர் இறங்கியது. விண்கல்லின் அருகே சென்றதுமே "ஹயபுஸா" தானாகவே இயக்குமாறு வடிவகைக்கப்பட்டிருந்தது. (பூமிக்கும் அதற்குமான சிக்னல் செல்ல ஆகும் நேரம் 30 நிமிடங்கள், எனவே இந்த ஏற்பாடு) விண்கல்லில் இறங்கிய போது இயந்திரத்தில் ஏற்பட்ட சேதத்தால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. இயந்திரம் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இப்போதும் "ஐயான்" இயந்திரத்தை இயக்கி ஹயபுஸாவைச் சமநிலைப்படுத்திய பின்னர் 2007 ஆம் ஆண்டு விண்கல்லிலிருந்து பூமியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது "ஹயபுஸா".

                 2010 ஆம் ஆண்டு மாதிரியைச் சேகரித்த "கேப்சூலை" (capsule) பூமியை நோக்கி விழவைத்தது ஹயபுஸா. பூமியின் வளிமண்டலத்தினால் ஏற்பட்ட உராய்வு வெப்பத்தைத் தடுக்கும் வகையில் "கேப்சூல்" (capsule) வடிவமைக்கப்பட்டிருந்தது. கடைசியில் ஆஸ்திரேலியால் "கேப்சூல்" (capsule) விழுமாறு திட்டமிட்டிருந்தபடியே விழுந்தது. ஜப்பானிய விண்வெளி அமைப்பு புதிய சரித்திரம் படைத்தது.

Hayabusa's first landing
25143 இடோகவாவின் மேற்பரப்பில் மாதிரி சேகரிப்பான்
                    கிட்டத்தட்ட நாலேமுக்கால் கோடி தொலைவில் சென்று அதன் பரப்பிலிருந்து மாதிரியைச் சேகரித்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் பூமியை அடைந்ததே "ஹயபுஸா"வின் மிகப் பெரிய வெற்றிதான். மனித குலத்தின் மகத்தான பொறியியலின் சாதனை இது.


       பல இன்னல்கள் வந்த போதும் அதிலிருந்து "பீனிக்ஸ்" பறவையாய் "ஹயபுஸா" மீண்டெழுந்தது நமக்கெல்லாம் பெரும் பாடம். ஆம் NEVER GIVE UP.


                 திடீரென இத்திட்டம் எனக்கு நியாபகம் வரக் காரணம். வரும் நவம்பரில் (2014) "ஹயபுஸா 2" திட்டத்திற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த முறை அதன் இலக்கு 1999 JU3 விண்கல். வாழ்த்துகள் ஜப்பான்.

தொடரும்...

புகைப்பட உதவி: JAXA

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம். 


 

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

Monday, October 27, 2014

வானியல்- 7 (சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்)

சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட் - Dwarf Planets, Kuiper Belt and Oort Cloud


                சூரியக்குடும்பத்தின் கடைக்குட்டியான நெப்டியூனுக்குப் (புளூட்டோ கோளாக கருதப்படவில்லை) பிறகு என்ன இருக்கிறது? சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்க் கிளவுட் இருக்கிறது. அதைப்பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.                 த்தொடரில் அடிக்கடி "புளூட்டோ" கோளாகக் கருதப்படவில்லை என சொல்லி வந்தேன்.  புளூட்டோ சூரியனைச் சுற்றும் தனது பாதையை ஒழுங்காக வைக்கவில்லை. புதன் முதலான நெப்டியூன் வரையிலான பிற எட்டு கிரகங்களைவிட இந்தச் சிறு கிரகங்கள் மிகச் சிறியவை. நமது நிலவை விட மிகச் சிறியவை. இத்தகைய சிறு கிரகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு "புளூட்டோ" ஆகும். இவை எல்லாம் நெப்டியூனுக்குப் பின்னர் உள்ள "கைப்பர் பட்டையில்" அமைந்துள்ளன. இவை அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை.
                          "புளூட்டோ" சூரியனிலிருந்து  5,90,00,00,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே "அஸ்டிராய்டுகள்" இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். அந்த விண்கற்கள் கூட்டத்தில் அமைந்துள்ள சிறு கிரகமதான் "சிரஸ்" (Ceres) இது பூமியின் நாள் கணக்கில் 4.6 வருடங்களில் சூரியனை சுற்றி வலம் வரும். தன்னைத்தானே ஒரு முறை சுற்றி முடிக்க ஒன்பது மணி நேரம் ஆகும். இத்தகைய சிறு கிரகங்கள் பாறைகள் அல்லது பனிக்கட்டியால் ஆனவை. அது பாறையா அல்லது பனிக்கட்டியா என்பது அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தது. நெப்டியூனுக்கு பிறகு அமைந்துள்ள சிறுகிரகங்கள் அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை. அஸ்டிராய்டு பட்டையில் அமைந்துள்ள சிறுகிரகங்கள் பாறையால் ஆனவை. பெரும்பாலான சிறுகிரகங்களுக்கு நிலவு உண்டு. இவைகளுக்கு வளையம் (புளூட்டோ விதிவிலக்கு, இதுக்கு மெல்லிய வளையமும் 5 நிலவும் உண்டு) இருப்பதாய் தகவல் இல்லை.                 "ரிஸ்" எனும் சிறு கிரகத்திற்கு மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நமது சூரியக் குடும்பத்தின் முன்னாள் கடைக்குட்டியான "புளூட்டோ" 2006 ஆண்டு கோள் என்ற வாய்ப்பை இழந்தார். அவரைப் போல இன்னும் பலர் "கைப்பர் பட்டை"யினுள் இருப்பதால் ஏற்பட்ட விவாதத்தின் அதன் கிரகம் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டது. "நாசா"வால் ஏவப்பட்ட "நியூ ஹாரிஸன்" விண்கலம் இந்த "கைப்பர் பட்டை"யினுள் சென்று ஆராயும்போது இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கும்.

கைப்பர் பட்டை - Kuiper Belt


              சூரியனிலிருந்து பல ஆயிரம் கோடிக்கணக்கான தொலைவிற்கு அப்பால் நெப்டியூனுக்கும் பிறகான பகுதியில் ஒரு தட்டைப் போல (disc-shaped region) பகுதியில் பல பனிக்கட்டியினாலான சிறுகோள்கள்  காணப்படுகின்றன. "புளூட்டோ" மற்றும் "இரிஸ்" போன்றவை இப்பகுதியில்தான் உள்ளன. இது ஒரு ஐஸ் உலகம். இங்குள்ளவை எல்லாம் நமது பூமியின் நிலவைவிட சிறியவையே. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போல 30 முதல் 55 மடங்கு தொலைவில் நெப்டியூனுக்கு அப்பால் இந்த கைபர் பட்டை உள்ளது.

Artist's concept of Eris and its moon. The sun is in the distance.
கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்             200 வருடங்களுக்குள் ஒருமுறை பூமியை எட்டிப் பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் இங்கிருந்துத்தான் வருகின்றன. வரும் வேகத்தில் பனிக்கட்டி உருகி சூரிய ஒளின் எதிர் திசையில் தெரிவதையே நாம் வால் என நினைக்கிறோம். சரி இந்த வாலின் நீளம் எவ்வளவு தொலைவு இருக்கும். அதிகமில்லை ஜெண்டில்மேன், சில இலட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டிருக்கும். 100 கிலோமீட்டருக்கும் அதிக விட்டமுடைய பல ஆயிரம் கோடி ஐஸாலான பொருட்கள் இந்த கைப்பர் பகுதியில் உள்ளன. இங்குள்ள சிறு கோள்களுக்கு சிறிய அளவிலான நிலவும் உண்டு. அடுத்த வருடம் 2015 "நியூ ஹாரிஸன்" விண்கலம் புளூட்டோவை எட்டும். அதன் பிறகே இது தொடர்பான இன்னும் பல தகவல்கள் கிடைக்கும். இந்த கைப்பர் பட்டையைக் 1950 களில் கண்டு பிடித்தவர்கள் Gerard Kuiper மற்றும் Jan Oort. இந்தக் கைப்பர் பட்டையும் சூரியக் குடும்பத்தின் அங்கமே.
 

ஓர்ட் க்ளவுட் - Oort Cloud


Color illustration of New Horizons at Pluto. Links to mission page.
"நியூ ஹாரிஸன்" விண்கலம்                 துவும் ஐஸ் பொருட்களால் ஆன பகுதிதான். கைப்பர் பட்டைக்குப் பிறகு வரந்து விரிந்து இருகிறது. 200 வருடங்களுக்கும் மேலான இடைவெளியில் பூமியை எட்டிப்பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் இங்கிருந்துத்தான் வருகின்றன.

                  கடந்த வாரம் (19 அக்டோபர்) இந்த "ஓர்ட் க்ளவுட்" பகுதியிலிருந்து வால் நட்சத்திரமாய் செவ்வாய் கோளுக்கு Comet Siding Spring அல்லது C/2013 A1 என்ற பெயரில் விருந்துக்கு வந்த விருந்தாளியை "ஹப்பிள்" தொலை நோக்கி பிடித்த படம் கீழே,


Compass and Scale Image for Mars and Comet Siding Spring
          பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போல 5 ஆயிரம் முதல் 1 இலட்சம் மடங்கு வரையிலான தொலைவிற்குப் பரந்து காணப்படுகிறது. இந்த "ஓர்ட் க்ளவுட்" பகுதி.

கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்


          லட்சம் கோடிக்கும் அதிகமான பனிக்கட்டியினாலான பொருட்கள் இங்கு உள்ளன. "ஓர்ட் க்ளவுட்"-டை 1950 களில் கண்டு பிடித்தவர்கள் Gerard Kuiper மற்றும் Jan Oort. இந்த "ஓர்ட் க்ளவுட்"-டும் சூரியக் குடும்பத்தின் உறுபினர் ஆவார்.


ஓர்ட் க்ளவுட்டிலிருந்து வந்த "ஹாலி-பாப்" வால் நட்சத்திரம்.

சூரியக் குடுப்பத்தினை ஓரளவு சுருக்கமாகப் பார்த்துவிட்டோம். இனிமேல் அண்டம், நட்சத்திரம், நெபுலா, சூப்பர் நோவா, "ப்ளாக் ஹோல்", பிரபஞ்சம், வானியல் அலகுகள், வளர்ந்த நாடுகளின் வானியல் திட்டங்கள் என ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

தொடரும்...

புகைப்பட உதவி: நாசா

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

Friday, October 24, 2014

வானியல்- 6 (Jovian Planets)

  மது சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைப் பற்றி ஏற்கனவே இக்கட்டுரையில் மிகக் கொஞ்சம் பார்த்தோம். சூரியன் மற்றும் Terrestrial Planets கோள்களின் ஜாதகங்களைக் கொஞ்சம் விலாவரியாகப் பார்த்தாகிவிட்டது. நமது சூரியக் குடும்பத்தில் மீதமிருப்பது Jovian Planets. இக்கட்டுரையில் அவற்றை பார்த்துவிடுவோம்.


Tilted Eris (click to enlarge)
Jovian Planets குடும்பம்


ஜூபிடர் எனும் வியாழன்

                  நமது சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோள் இது. 50 நிலவுகள் இது போக இன்னும் 17 நிலவுகள் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. ஆக மொத்தம் 67 நிலவுகளுடன் வளைய வருகிறது. ஆம், இதற்கு மங்கலான வளையமும் உண்டு. வியாழனின் காந்தப்புலம் சக்தி வாய்ந்தது. கிட்டத்தட்ட இதுவே ஒரு சூரியக் குடும்பம் எனும் அளவிற்கு படை பரிவாரங்களுடன் வலம் வருகிறது. தானாக ஒளிர்விடும் அளவிற்கு நட்சத்திரமாக வளர்ந்திருந்தால், இதுவும் தனி இராஜாங்கம் நடத்தியிருக்கும்.A true-color image of Jupiter taken by the Cassini spacecraft. The Galilean moon Europa casts a shadow on the planet's cloud tops.
வியாழன்


 சூரியனிலிருந்து ஐந்தாவது கோள். சூரியனுக்கும் வியாழனுக்குமான தொலைவு 77,80,00,000 கிமீ. பூமியின் நேரத்தில் பத்து மணி நேரம் போதும் தன்னைத் தானே ஒரு சுற்று சுற்றி முடிக்க. பூமியின் நாட்களில் 12 வருடம் ஆகும் சூரியனை ஒரு முறை வலம் வர.

Jupiter-Io Montage (click to enlarge)
வியாழனும் அதன் நிலவும் (எரிமலையுடைய நிலவு)


இது ஒரு மிகப் பெரிய வாயுக் கோளம். பூமியின் அளவிற்கு நிலப்பரப்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் வாயு மண்டலம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனது. இங்கு உயிரினங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் இதன் நிலவுகளில் தரைப்பகுதிக்குக் கீழ் நீர் (கடல்) இருக்கலாம் எனவும் அவற்றில் உயிரினங்கள் வசிக்கக் கூடும் என நம்பப்படுகிறது.


Color close up of cloud swirls on Jupiter.
வியாழனிலுள்ள மிகப் பெரிய சிகப்புப் புள்ளி


சாட்டர்ன் எனும் சனி


 Jovian Planets குடும்பத்தில் எல்லோருக்கும் வளையம் இருந்தாலும் சனியைப் போல அவ்வளவு அழகான வளையம் யாருக்கும் அமைந்ததில்லை. மிகப் பெரிய வாயுக்கோளமான சனியில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுகள் உள்ளன.

Color image show part of Saturn and its rings and Earth as a pale blue dot in the background.
"காஸினி" விண்கலம் புகைப்படமெடுத்த வளையங்களுடன் கூடிய சனி

 சூரியனிலிருந்து ஆறாவது கோள் இது. சூரியனுக்கும் இதற்குமான தொலைவு 140,00,00,000 கிமீ. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 10.7 மணி நேரம் ஆகிறது.

http://nssdc.gsfc.nasa.gov/image/planetary/saturn/saturn_family.jpg
சனி தனது குடும்பத்தினருடன்


சூரியனை ஒரு முறை சுற்றி வர பூமியின் நாட்களிவருடம் ஆகும். இதில் நிலப்பரப்பு இல்லை. பெரிய வாயுக் கோளம். 53 நிலவுகளுடனும் உள்ள சனியுடன் இன்னும் 9 நிலவுகள் சேரக் காத்துக் கொண்டிருக்கின்றன.

Link to Cassini mission
"காஸினி" விண்கலன் சனியுடன்


 இக்கோளுக்கு ஏழு வளையங்கள் பிரிவுகளுடன் காணப்படுகின்றன. இக்கிரகத்தில் உயிரினங்கள் இல்லை. ஆனால் இவற்றின் நிலவுகளின் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளது. அங்கு உயிரினங்கள் இருக்கக் கூடும்.

http://solarsystem.nasa.gov/multimedia/gallery/PIA17172_fullUNANNOTATED.jpg
சனியும் அதன் வளையங்களும்


1600 ஆம் ஆண்டு "கலிலியோ கலிலி" தனது தொலைநோக்கி மூலம் சனிக் கிரகத்தை படம் வரைந்தார்.


யுரேனஸ்

 பெரிய கோள் யுரேனஸ். 27 நிலவுகள் இரண்டு வளையங்கள் என சூரியனிலிருந்து ஏழாவது கோள் இது. பெரும்பாலும் பனிக் கட்டியால் ஆனது இக்கோள். இதன் உள் வளையம் இருண்டும் வெளி வளையம் வண்ண மயமாகவும் காணப்படுகிறது. வாயோஜர் விண்கலன் இதை தாண்டிச் சென்றுள்ளது.


Color image of Uranus with small moon in front of it.
யுரேனஸ் தன் நிலவுடன் (கறுப்புப் புள்ளி நிலவின் நிழல்)


மற்ற கோள்களைப் போலல்லாமல் இது மேலும் கீழுமாய்ச் சுற்றுகிறது. சூரியனுக்கும் இதற்குமான தொலைவு 2,90,00,00,000 கிமீ. இதன் equatorஆனது orbit உடன் செங்கோணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெரியக் கோள் இது. இதன் வளிமண்டலத்தில் நீர், மீத்தேன் மற்றும் அம்மோனியா உள்ளது. தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 17 மணி நேரம் ஆகிறது. சூரியனை ஒரு முறை வலம் வர பூமியின் நாள் கணக்கில் 87 வருடங்கள் ஆகிறது.

Color image of planet with faint rings. Links to larger image.
யுரேனஸ் தன் வளையங்களுடன்

நெப்டியூன்


நெப்டியூன் கிரகத்தை 1989 ஆம் ஆண்டு "வாயோஜர் 2" விண்கலம் எடுத்தப் புகைப்படம் கீழே,

Voyager 2 captured this image of Neptune in 1989.
நெப்டியூன்
            ருட்டு மற்றும் குளிரான கிரகம். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 2011 ஆம் ஆண்டில் தனது சூரிய வலத்தை ஒரு முறை முடித்துள்ளது. சூரியனைச் சுற்றிவபூமியின் நாட்கணக்கில் 165 வருடங்கள் ஆகும். பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவைப் போல 30 மடங்கு தொலைவு இதற்கும் சூரியனுக்கும். சூரியனிலிருந்து 4,50,00,00,000கிமீ தொலைவில் உள்ளது. தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 16 மணி நேரம் ஆகிறது. யுரேனஸைப் போலவே மிகப்பெரிய பனிக்கட்டிக் கோளம். உள்ளே பூமியின் அளவிற்கு நிலப்பரப்பு இருக்கலாம். இதில் நீர், அமோனியா மற்றும் மீத்தேன் உள்ளது. இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் மீத்தேன் வாயுகள் உள்ளன. உறுதிப்பட்டுத்தப்பட்ட 13 நிலவுகளுடனும் காத்திருப்புப் பட்டியலிலுள்ள ஒரு நிலவுடனும் மொத்தம் 14 நிலவுகள். இங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. "வாயோஜர் 2" விண்கலம் மட்டுமே இதைக் கடந்து சென்றுள்ளது. இக்கிரகத்திற்கு மொத்தம் ஆறு வளையங்கள் உண்டு."சிறு கிரகங்கள்" "கைப்பர் பட்டை" மற்றும் "ஓர்ட் க்ளவுட்" என வரும் நாட்களில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தை.

தொடரும்... 

புகைப்பட உதவி: நாசா

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

புகைப்பட உதவி: நாசா


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

Tuesday, October 21, 2014

வானியல்- 5 (Terrestrial Planets)

                                   மது சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைப் பற்றி ஏற்கனவே இக்கட்டுரையில் மிகக் கொஞ்சம் பார்த்தோம். இக்கட்டுரையில் சூரியன் மற்றும் Terrestrial Planets கோள்களின் ஜாதகங்களைக் கொஞ்சம் விலாவரியாகப் பார்ப்போம்.

சூரியக் குடும்பம்
சூரியன்

 • பூமிக்கும் இதற்குமான தொலைவு 14,95,97,900 கிமீ
 • விட்டம் 695,508 கிமீ
 • நிறை 19,89,10,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 கிகி 
 • கொள்ளளவு 14,09,27,25,69,05,98,60,000 கசகிமி  

                      ரவில் வானத்தில் பார்க்கும் இலட்சக்கணக்கான நட்சத்திரங்களைப் போல சூரியனும் ஓர் நட்சத்திரமே. என்ன இது கொஞ்சம் பக்கத்தில் இருப்பதால் அதன் வெக்கையும் வெளிச்சமும் நமக்குத் தெரிகிறது. நமது சூரியக்குடும்பத்தின் காரணகர்த்தா இவர்தான். இவரை மையமாகக் கொண்டுதான் எட்டு கிரகங்களும் விண்கற்களும் சுற்றி வருகின்றன. சூரியன் 7.8% ஹீலியம் மற்றும் 92.1% ஹைட்டிரஜன் வாயுக்களால் ஆனது. சூரியன் இல்லையேல் பூமியில் எந்தவித உயிரினங்களும் தோன்றியிருக்காது. இது திடப்பொருள் அல்ல எனவே இதன் எல்லாப் பரப்பும் ஒரே வேகத்தில் சுழலுவதில்லை. இதன் மையப்பகுதி (நமது பூமத்திய ரேகையைப் போன்றது) ஒரு முறை சுழல நமது நாள் கணக்கில் 25 நாட்கள் ஆகும். துருவங்களில் ஒரு சுழற்சிக்கு 36 நாட்கள் ஆகும். இதன் மையப்பகுதியில் வெப்ப நிலை 1,50,00,000 செல்சியஸ்.

Venus Transit (click to enlarge)
சூரியன் பின்புலத்தில் கறுப்புப் புள்ளியாய் வெள்ளி (வீனஸ்)
 
 சூரியனில் புயல் உருவாகும். இவ்வாறு உருவாகும் சூரியப் புயலினால் அதன் ஸ்வாலை வால் போல பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு இருக்கும். 1973 ஆம் ஆண்டு சூரியனை ஆராய Heliophysics Missions என்ற திட்டத்தை நாசா ஆரம்பித்து இன்றும் அது செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

http://solarsystem.nasa.gov/multimedia/gallery/RHESSI-browse.jpg
சூரியனை எக்ஸ் ரே கதிர்கள் மூலம் ஆராயும் Reuven Ramaty High-Energy Solar Spectroscopic Imager (RHESSI)

  மெர்குரி எனும் புதன்

               து சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள். 2019 நவம்பர் 11 அன்று புதன் சூரியனைக் கடந்து செல்வதை பூமியிலிருந்து பார்க்கலாம். இதன் மேற்பரப்பு நிலவின் மேற்பரப்பை ஒத்திருக்கும்.


Black and white image of Mercury.
புதன்
நமது சந்திரனைவிட சற்றுப் பெரிய கோள் இது. இதில் ஒரு வருடம் என்பது 88 நாட்கள் ஆகும். ஆம், வெறும் 88 நாட்களில் சூரியனை சுற்றி முடித்துவிடும். சூரியனின் மிக அருகில் இருப்பதால் பகலில் வெப்பநிலை மிகவும் அதிகம். இரவில் உறைநிலைக்கும் கீழே கடுமையான குளிர். மிகக் குறைந்த அளவு வாயு மண்டலம் உண்டு. சூரியனுக்கும் இதற்குமான தொலைவு 5,80,00,000 கிலோமீட்டர். இது தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள பூமியின் நாட்களில் 59 நாட்கள் ஆகும். அதாவது பூமியில் 59 நாள் முடியும் போது புதனில் ஒரு நாள் முடிந்திருக்கும்.

MESSENGER
புதனின் வட்டப்பாதையில் மெஸஞ்சர் விண்கலம்


 இதன் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன், சோடியம், ஹீலியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை கலந்துள்ளன. சனி கிரகத்தைப் போல இதற்கு வளையங்கள் கிடையாது. இதற்கு என நிலவும் கிடையாது. இதை ஆராய "மரைனர் 10" மற்றும் "மெஸஞ்சர்" என்ற செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. உயிரினங்கள் எதுவும் இதுவரை இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. பகல் நேர வெப்பநிலை 430 டிகிரி செல்ஸியஸ், இரவில் -180 டிகிரி செல்ஸியஸ். இங்கிருந்து சூரியனைப் பார்த்தால் பூமியிலிருந்து தெரிவதைப் போல மூன்று மடங்குப் பெரியதாக சூரியன் தெரியும்.

வெள்ளி எனும் வீனஸ்


                   இக்கோள் சூரியனிலிருந்து இரண்டாவது இருக்கிறது. நமது பூமியின் அண்டைக் கோள்களுள் இதுவும் ஒன்று. மற்றக் கோள்கள் தன்னைத் தானே சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் மெதுவாகச் சுற்றுகிறது. இக்கோளில் எரிமலைகள் உண்டு. இக்கோளின் வெப்பம் காரீயத்தை (lead) உருக்கும் அளவிற்கு உள்ளது.  இக்கோளின் அடர்த்தியான விஷமுடைய வளிமண்டலம் பச்சை நிறத்தைக் கொடுக்கிறது.


Color image showing Venus topography
வீனஸ்னஸ்


இக்கோள் பூமியை விடக் கொஞ்சம் சிறியது. சூரியனிலிருந்து 10,08,00,000 கிமீ தொலைவில் உள்ளது. தன்னைத் தானே ஒரு முறை சுற்ற பூமியின் நாட்கணக்கில் 243 நாட்கள் ஆகும். சூரியனை ஒரு முறை சுற்றி வர பூமியின் நாட்கணக்கில் 225 நாட்கள் ஆகும். இக்கோள் பாறைகளாள் ஆனது. எரிமலைகள் உண்டு.  வளிமண்டலத்தில் ஹார்பன் டை ஆக்ஸைடு நைட்ரஜன் மற்றும் கந்தக அமிலம் இருப்பதால் விஷமுடையது. இதற்கும் நிலவு கிடையாது. இடுப்பைச் சுற்றும் வளையமும் கிடையாது.  வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ். இதுவரை 40 செயற்கைக் கோள்கள் இதை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. உயிரினங்கள் வாழ்வதற்கான தடையம் எதுவும் இல்லை.

Color illustration of spacecraft orbiting Venus.
வீனஸின் மேற்பரப்பைப் படமெடுக்கும் மெக்கல்லன் விண்கலன்


மார்ஸ் எனும் செவ்வாய்


            ருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் மெல்லிய வளிமண்டலம் நீரை எளிதில் ஆவியாக்கிவிடும் தன்மையுடையது. எரிமலைகள் உள்ளன. இக்கிரகத்திலும் பூமியைப் போலவே பருவ கால மாறுபாடுகள் உண்டு.

Color image of a thin atmosphere over reddish Mars. Link to MAVEN toolkit.
செவ்வாயின் மேற்பரப்பு


இது செந்நிறக்கோள். இதிலுள்ள இரும்புத்தாது மற்றும் ஆக்ஸைடு தூசுக்கள் இதன் வளிமண்டலத்தை சிகப்பு வண்ணத்தில் காட்டுகின்றன. உயிரினங்கள் இருப்பதாய் இதுவரைத் தடயம் இல்லை. அடுத்த மனிதக் குடியேறம் நடப்பதற்கான கோள் என கருதப்படுகிறது. பூமிக்கு அடுத்து இருக்கும் கோள் இது. இது தன்னைத் தானே இரு முறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரத்திற்கும் கொஞ்சம் அதிகம் ஆகிறது. இதில் ஒரு வருடம் என்பது பூமியில் 687 நாட்கள். சூரியனிலிருந்து 22,80,00,000 கிமீ தொலைவில் உள்ளது. Phobos மற்றும் Deimos என்ற பெயரில் இரண்டு நிலவு இதற்கு உண்டு. செவ்வாய்க்கும் வளையம் கிடையாது. இதன் மேற்பரப்பிலும் வட்டப்பாதையிலும் சேர்த்து மொத்தம் 40அதிகமான விண்கலன்களும் ரோவர்களும் அனுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில் மங்கள்யான் மற்றும் மேவன் இதன் சுற்று வட்டப்பாதைக்கும் அனுப்பப்பட்டது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு, நைட்டிரஜன் மற்றும் ஆர்கான் வாயுகள் உள்ளன. இதன் வெப்பநிலை -153 டிகிரி செல்ஸியஸ் முதல் 20 டிகிரி செல்ஸியஸ் வரை.

Preparatory Drilling Test on Martian Target <I>Windjana</I> (click to enlarge)
செவ்வாயின் மேற்பரப்பில் சோதனைக்காக துளையிடப்படது. மணல் துகள்கள்  ஆராயப்பட்டன.

Jovian Planets பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தொடரும்...

புகைப்பட உதவி: நாசா

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம். 


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

Sunday, October 19, 2014

மங்கள்யானின் காலவரிசை

                               செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யானின் காலவரிசை.

மங்கள்யான் தொடர்பான முதன்மைக் கட்டுரை இங்கே.

செவ்வாயை நோக்கி...            ரு செயற்க்கைக் கோளை விண்ணில் ஏவி அதைக் கட்டுப்படுத்துவது என்பது உண்மையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான். அதுவும் பல மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் சென்று கொண்டிருக்கும் செயற்கைக் கோளையும் அதிலுள்ள இயந்திரத்தை இயக்குவதும் பல்வேறு சவால்கள் நிறைந்தது. சமீபத்திய மங்கள்யான் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவின் கண்ணிப்பு ஆண்டெனாக்களின் உதவி மட்டும் பெறப்பட்டு மற்ற அனைத்தும் இந்திய முயற்சியிலேயே நடந்தேறிய ஒன்று இந்நிகழ்வு. அதன் ஒவ்வொரு நாளின் "டே பை டே" நிகழ்வு கீழே,

 • 05 நவம்பர் 2013 PSLV-C25 ஏவுகலன் மூலம் ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 14:38 மணிக்கு மங்கள்யான் ஏவப்பட்டது.
 •  
 •  07 நவம்பர் 2013 அன்று மங்கள்யான் பூமியைச் சுற்றும் நீளம் அதிகரிக்கப்பட்டது.
அதிகாலை 01:17 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 416 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்கு அருகில் 252 கிலோமீட்டர்களாகவும் பூமிக்குத் தொலைவில் 28,825 ஆகவும் மாற்றப்பட்டது.
 • 08 நவம்பர் 2013 அன்று இரண்டாவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
இதில் அதிகாலை 02:18:51 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 570.6 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 40,186 ஆக மாற்றப்பட்டது. 
 • 09 நவம்பர் 2013 மூன்றாவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
அதிகாலை 02:10:43 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 707 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 71,636 ஆக மாற்றப்பட்டது. 
 • 11 நவம்பர் 2013 அன்று நான்காவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
 14:38 மணிக்கு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 78,276 கிலோமீட்டர்களாக ஆக மாற்றப்பட்டது. ( இதில் 1,00,000 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்குமாறு நீள்வட்டப்பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது முடியவில்லை) காரணம், primary and redundant coils சக்தியூட்டி 440 நியூட்டன் திரவ இயந்திரம் இயங்கும்போது நின்றுவிட்டது. பின்னர் attitude control thrusters மூலம் இயக்கப்பட்டதால் எதிர்பார்த்த திசைவேகம் கிடைக்கவில்லை. எனவே 1,00,000 கிலோமீட்டர்களுக்குப் பதில்  78,276 கிலோமீட்டர்களாக மட்டுமே நீட்டிக்கப்பட்டது.
 • நான்காவது முறை நீளத்தை சரியாக நீட்டிக்க முடியாததால் நான்கிற்கும் ஐந்திற்கும் இடையே 12 நவம்பர் 2013 அன்று ஒரு துணை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் அதிகாலை 05:03:50 மணியளவில் 303.8 வினாடிகள் இயந்திரம் இயக்கப்பட்டு நீள்வட்டப்பாதையின் நீளம் 1,18,642 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டது.
 • 16 நவம்பர் 2013 அன்று ஐந்தாவது (உண்மையில் ஆறாவது) முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
இதில் இயந்திரம் 243.5 வினாடிகள் இயக்கப்பட்டு நீள்வட்டப்பாதையின் நீளம் 1,92,874 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டது.
 • 1 டிசம்பர் சில முக்கிய செயல்கள் நடந்தது. 
 1. மங்கள்யான் "பார்வேர்ட் ரொட்டேஷன்" செய்யப்பட்டது.செவ்வாயை நோக்கித் தள்ளுவதற்காக  இது செய்யப்பட்டது.
 2. அதிகாலை 00:49-க்கு மங்கள்யானிலுள்ள இயந்திரம் 1328.89 வினாடிகள் இயக்கப்பட்டு 647.96 மீ/வினாடி திசைவேகத்துடன் செவ்வாயை நோக்கித் திருப்பப்பட்டது. இதை Trans Mars Injection (TMI) என்பர்.  
 3. தொடர்ந்து கண்காணித்து பாதை மாற்றம் செய்வதற்காக "மீடியம் கெயின் ஆண்டனா" (Medium Gain Antenna) இயக்கப்பட்டது. 


 •  2 டிசம்பர் அன்று மங்கள்யான் சந்திரனைத் தாண்டி சென்றது. மங்கள்யான் கடந்த தொலைவு 5,36,000 கிலோமீட்டர்.
 • 4 டிசம்பர், பூமியின் எல்லையைவிட்டு Sphere of Influence (SOI)) முழுவதுமாய் வெளியேறியது. பூமிக்கும் மங்கள்யானுக்கு இடையே 9,25,000 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
 • 11 டிசம்பர், அதிகாலை 06:35 -க்கு முதல் பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM)) செய்யப்பட்டது. 22 நியூட்டன் த்ரெஸ்டர்ஸ் (22 Newton Thrusters) இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. இந்நேரத்தில் மங்கள்யான் பூமியிலிருந்து 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
 • 11 பிப்ரவரி 2014, மங்கள்யான் ஏவப்பட்டு 100 நாட்கள் நிறைவு.
 • 09 ஏப்ரல் 2014, தனது மொத்தப் பயணத்தில் பாதித் தூரத்தை மங்கள்யான் கடந்தது. • 11 ஜூன் 2014, இரண்டாவது  பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM))  மாலை 16:3 க்கு செய்யப்பட்டது. 22 நியூட்டன் த்ரெஸ்டர்ஸ் (22 Newton Thrusters) இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு பாதை மாற்றம் சரி செய்யப்பட்டது. இந்நேரத்தில் மங்கள்யானுக்கும் பூமிக்குமான தொலைவு 10,20,00,000 கிலோமீட்டர்கள். சமிக்கைகள் சென்று அடைய எடுக்கும் நேரம் 340 வினாடிகள். மங்கள்யான் தனது மொத்தப் பயணத் தொலைவான 68,00,00,000 கிலோமீட்டரில்  46,60,00,000 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது. மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து அறிவியல் உபகரணங்களும் நல்ல நிலையில் இருப்பதாக ஐ எஸ் ஆர் ஓ அறிவித்தது.


 •  15 செப்டம்பர் 2014, செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைவதற்கானஇயந்திரத்தை இயக்கும் கட்டளைகள் மங்கள்யானில் தரவேற்றம் செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
 • 17 செப்டம்பர் 2014 நான்காவது பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM)) செய்யப்பட்டது
 • 22 செப்டம்பர் 2014, பிற்பகல் 14:30 க்கு 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) சரியாக வேலை செய்யுமா என சோதனை செய்யப்பட்டது. கடைசியா இந்த மோட்டார் 1 டிசம்பர் 2013 அன்று இயக்கப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பின்னர் 3.968 வினாடிகள் இயக்கப்பட்டு இதன் செயல் நிலை உறுதி செய்யப்பட்டது. இதை இயக்கியதால் மங்கள்யானின் திசைவேகம் 2.18 மீ/வி என மாறியது.
 • 24 செப்டம்பர், மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்டளைகள் 15 செப்டம்பர் அன்று தரவேற்றப்பட்டிருந்த படி, இக்கட்டளைகள் மூலம் 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) மற்றும் இதைப்போன்ற எட்டு இயந்திரங்கள் அதிகாலை 07:17:32 மணிக்கு 1388.67 வினாடிகள் தானாகவே இயங்கின. மங்கள்யானின் திசைவேகம்  1099 மீ/வி ஆகும். மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்து நீள்வட்டப்பாதையில் சுற்ற ஆரம்பித்தது. இந்நிகழ்வின் வரிசை கீழே,
 1. மீடியம் கெயின் ஆண்டனா மாற்றப்பட்டது
 2. மங்கள்யான் முன்னோக்கித் திரும்பியது. (Forward rotation)
 3. எதிர்பார்த்த மடி மங்கள்யானுக்கும் பூமிக்குமான சமிக்கைத் தொடர்பு அறுந்தது. செவ்வாயின் மறுபுறத்தில் சென்றது.  செவ்வாய் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையே இருந்தது.
 4. மீண்டும் தொடர்பு கிடைத்த போது 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) மற்றும் இதைப்போன்ற எட்டு இயந்திரங்கள் திட்டமிட்டபடி இயங்கியது உறுதி செய்யப்பட்டது.
 5. மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பான காணொளி ஒன்று கீழே,
7300 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மங்கள்யான் எடுத்த 376m ஸ்பேசியல் ரிசலூஷன் (spatial resolution) புகைப்படம் கீழே,
  http://isro.org/pslv-c25/Imagegallery/satellitesimages/mars1.jpg
  மங்கள்யான் எடுத்த செவ்வாயின் முதல் புகைப்படம்
 1. 421.7 கிமீ - 76,993.6 கிமீ நீள்வட்டப்பாதையில் மங்கள்யான் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.
 • 19 அக்டோபர் 2014 அன்று செவ்வாயின் அருகில் வரும் siding spring (C/2013 A1) எனும் விண்கல்லால் மங்கள்யான் பாதிக்கப்படாமல் இருக்க மங்கள்யானின் நீள்வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு 1.9 கிலோகிராம் எரிபொருள் செலவானது.
மங்கள்யானால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுள் சில கீழே,புகைப்படம்: Olympus Mons, and More from ISRO's Mars Orbiter Mission
 
The largest mountain on Mars – the Olympus Mons and the famous Arsia, Pavonis and Ascraeus collinear mons adjacent to Daedalia Planum. Valles Marineris- the longest canyon in the solar system can also be seen.


புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

சின்மயியும் வைரமுத்துவும்

           யோசித்துப்பார்க்கிறேன்... சின்மயி ஹெச். ராஜா மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால் நம் சமூகம் எப்படி எதிர்...