Knowledge is good only if it is shared.

Wednesday, September 24, 2014

ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து...

ளப்பரிய சாதனைகளின் போது நெஞ்சம் விம்மி கண்ணீர் வழிவது வழக்கம். இந்தியாவின் ஐஎஸ்ஆர்ஓ-வின் சாதனைகள் ஒவ்வொன்றும் அப்படிப்பட்ட பெருமிதத்தைத் தருபவை. 2013 ஆம் ஆண்டின் நவம்பர் ஐந்து அப்படிப்பட்ட சாதனைகளுக்கான நாள். ஆம், ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மங்கள்யான் பெரும் கனவோடு கிளம்பிய நாள்.
   
மங்கள்யான்


      பிஎஸ்எல்வி உந்துகலனில் செலுத்தும் விண்கலன்கள் பத்திரமாகப் போய்ச் சேரும் என்பது பல முறை நிருபணமான ஒன்று. பல முறை எனில் 27 முறை ஏவியதில் 26 முறை வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் செயற்கைக் கோளைத் தள்ளிவிடும் சேவகன். ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வி. அதுவும் கன்னி முயற்சி. IRS-1E என்ற செயற்கைக் கோளை சுமந்த PSLV- D1 செலுத்து வாகனம் செப்டம்பர் 20 1993 ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. அதன் பின்னான முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே. மங்கள்யானை வெற்றிகரமாக ஏவியதும் இதுவே. மங்கள்யானைப் பார்ப்பதற்கு முன்னால் நன்றி மறவாமல் பிஎஸ்எல்வி-யையும் பார்த்துவிடுவோம்.

PSLV
Add caption

   
       44.4 மீட்டர்கள் உயரமுடையது. 295000 கிலோகிராம்கள் எடையை பூமியிலிருந்து கிளப்ப வல்லது. 1600 கிலோகிராம்கள் எடையுடைய செயற்கைக் கோளைக் கொண்டு செல்லும் திறன் பெற்றது. திட மற்றும் திரவ எரிபொருட்களைக் கொண்ட நான்கு அடுக்குகள் உண்டு இதில். ஆறு உந்துகிகள் (பூஸ்ட்டர்கள்) எனப்படும் "ஸ்டெர்ப் ஆன்" களைக் கொண்டது. இவை முதல் அடுக்கில் இருக்கும். இவற்றில் நான்கு பூமியிலிருந்து கிளம்பும் போதே எரியத் தொடங்கும் மீதமுள்ள இரண்டும் வானில் செல்லும் போது எரியத் தொடங்கும். பல செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் ஆற்றலுடையது. 30 இந்தியச் செயற்கைக் கோள்களையும் 40 வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களையும் ஏவிச் சாதனை படைத்த செலுத்து வாகனம் இது.

 தொழில்நுட்ப விவரம்:  

உயரம்: 44.4 மீட்டர்கள்
நிலை:நான்கு
எரிபொருட்கள்: திட மற்றும் திரவ
உந்துகிகள்: ஆறு
மொத்த எடை: 295000 கிலோகிராம்கள்
எடுத்துச் செல்லும் எடை: 1600 கிலோகிராம்கள்
  
 மங்கள்யான்

        மங்கள்யான் என்பது இந்திப் பெயராக இருந்தாலும் ஐஎஸ்ஆர்ஓ இதற்கு வைத்த பெயர் "செவ்வாய் சுற்றுகலன் திட்டம்" (Mars Orbiter Mission) என்பதாகும். பொதுவாகவே பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் பெரிய ஒற்றுமைகள் உண்டு. அடுத்த மனிதக் குடியேற்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள இடம் என நம்பப்படுகிறது. விண்வெளி ஜாம்பவான் நாடுகள் பலவும் கண்பதித்தக் கிரகம் இது. கால் பதிப்பதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது. சிக்கல் என்னவெனில் பூமிக்கும் இதற்குமான தொலைவு அதிகம். அவ்வளவு தூரம் வெற்றிகரமாகச் செல்லும் செலுத்துகலன் நம்மிடம் இல்லை. நம்மிடம் இருப்பது மேற்சொன்ன பிஎஸ்எல்வி-தான். அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்து மங்கள்யான் அனுப்பப்பட்டது. நாசாவின் Mars Curiosity செவ்வாய் கிரகத்தில் இறங்கி சோதனை செய்து அங்கு மீத்தேன் வாயு இல்லை என உறுதிபடுத்தினாலும் மங்கள்யான் மீத்தான் வாயு இருக்கிறதா என சோதனை செய்யவே அனுப்பப்படுகிறது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவின் மேவன் விண்கலமும் செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்தக் காணொளியைப் பாருங்கள்...


                        பிஎஸ்எல்வி மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் முதலில் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது. பூமியின் அருகே வரும்போது அதிலுள்ள இயந்திரத்தைக் குறிப்பிட்ட அளவு நேரம் இயக்கி அதன் பாதையைச் சிறிது மாற்றுவதன் மூலம் நீள்வட்டப்பாதையின் நீளத்தை அதிகரித்தனர். வரைபடம் கீழே,
இதுதான் அந்த மேஜிக்


        இவ்வாறு அதிகரிக்கும் போது மங்கள்யான் தனது நீள்வட்டப்பாதையில் பூமியின் அருகே வரும் போது அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். இவ்வாரு ஏழு முறை அதிகரித்து ( ஆறு முறைதான் திட்டமிடப்பட்டிருந்து, ஆனால் எதிர்பார்த்த படி நீளத்தை அதிகரிக்க இயலாதலால் நான்காவது  முறைக்கும் ஐந்திற்கும் இடையே ஒரு முறை அதிகரிக்கப்பட்டது) அது பூமியின் அருகே வரும் போது மீண்டும் அதிலுள்ள இயந்திரத்தை இயக்கி பூமியின் வட்டப்பாதையிலிருந்து திசம்பர் ஒன்று 2013 அன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி தள்ளப்பட்டது. இதை Trans Mars Injection என்பர்.
Deep Space Network Antenas

          தள்ளியதும் செவ்வாயை நோக்கிச் செல்லும் விண்கலத்தின் பாதை இந்தியாவின் தொலைதூர விண்வெளி வலைப்பின்னைல் (Indian deep Space network)அமைப்பினால் கண்காணிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின்  NASA- வினுடைய Deep space network- ன் உதவியும் பெறப்பட்டது. மாட்ரிட், கோல்ட்ஸ்டோன் மற்றும் கான்பெரா-வில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த ஆண்டனாக்கள் மங்கள்யானை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தன. சக்திவாய்ந்த அலைசெலுத்தி/அலைவாங்கி (ஆண்டனா) கீழே,

     
     சரி, எதற்கு மூன்று இடங்களில்? ஒரு வட்டம் வரைந்து அதைச் சுற்றி 120 டிகிரி இடைவெளியில் மூன்று புள்ளி வைத்து அவற்றிலிருந்து வட்டத்தின் இரு பக்கப் பரிதியை தொடும்படி கோடு வரைந்து பாருங்கள் எளிதாய்ப் புரிந்துவிடும். 
Deep space network கீழே,
உலகின் மூன்று பகுதிகளில் 120 டிகிரி கோண இடைவெளியில் அமைந்துள்ள ஆண்டனாக்கள்.
 
         இவ்வாறான பத்துமாதக் கண்காணிப்பினூடே விண்கலத்தின் பாதையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டது. இதை maneuver correction என்பர். இறுதியாக 24 செப்டம்பர் 2014 அன்று செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றது மங்கள்யான். முக மிக்கியமான நிகழ்வு இது. பாதிக் கிணறுதான் தாண்டியிருகிறோம். பாதை மாற்ற திட்ட (Maneuver correction) விளக்கப் படம் கீழே,
Maneuver correction

               அருகில் சென்று பிரயோஜனம் இல்லை. அதை செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் செலுத்த வேண்டும். இதை Mars Orbit Insertion என்பர். எப்படிச் செலுத்துவது? அப்படிச் செலுத்துவதற்கு முன்னர் விண்கலத்தின் அமைப்பு நிலையை மாற்ற வேண்டும். அதாவது விண்கலத்தின் இயந்திர நாஸில்கள் விண்கலம் செல்லும் திசையில் முன்னோக்கியவாறு இருக வேண்டும். அப்போதுதான் அதை இயக்கி விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க முடியும். அதற்காகவே விண்கலத்தின் எட்டு சிறிய திரவ எரிபொருள் இயந்திரங்கள் மற்றும் அதற்கான எரி பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கப்பட்ட இயந்திரம் கீழே,
440 N Liquid Engine

 பத்து மாதங்கள் (297 நாட்கள்) தூங்கிக் கொண்டிருந்த 440 N Liquid Engine எனும் இயந்திரம் இயங்குமா? அதற்காகவே இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது செப்டம்பர் 22 அன்று அந்த இயந்திரம் 4 வினாடிகள் (3.968 வினாடிகள்) இயக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி அவை இயங்கியது. இதில் இன்னுமொரு சிக்கல் என்ன வெனில் அவை விண்கலத்தில் நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் நமக்கு சராசரியாக 12.5 நிமிட தாமதமாகவே தெரியவரும். சமிக்கைகள் நம்மை வந்து அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் இது. கடைசியாக செடம்பர் 24 அன்று காலை விண்கலம் செவ்வாய் சுற்றுப் பாதையை சந்திக்கும் போது இயந்திரங்களை இயங்கச் செய்து அதன் பாதையை அப்படியே செவ்வாயின் சுற்றுப் பாதையை நோக்கித் திருப்ப வேண்டும். வரைபடம் கீழே,
அமைப்பு நிலையை மாற்றம்


          இதில் இன்னுமொரு சிக்கல். இந்நிகழ்வு நடைபெறும் போது மங்கள்யான் விண்கலமானது செவ்வாயின் பின்புறத்தில் இருக்கும். பூமியிலிருந்து அதைத் தொடர்புகொள்ள முடியாது.
தொடர்பற்ற நிலை (Communication blackout)

            எனவே இயந்திரங்கள் இயங்குவதற்கான ஆணைகள் அனைத்தும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தியதிகளில் தரவேற்றம் செய்யப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டன. திட்டமிட்டபடி எல்லாச் செயல்களும் ஒழுங்காக நடந்தன.

            முதலில் மங்கள்யானின் அமைப்பு நிலை சரி செய்யப்பட்டது. பின்னர் அவற்றின் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வேகம் குறைக்கப்பட்டது. கடைசியாக இயந்திரங்களை இயக்கி செவ்வாய் சுற்றுப் பாதையில் மங்கள்யான் செலுத்தப்பட்டது. இவை அனைத்தும் சராசரி 12.5 நிமிட தாமதமாகவே உறுதிபடுத்தப்பட்டன. 
        நகம்கடித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற விண்வெளி ஆர்வலர்கள் கண்கள் விம்மியது. அமெரிக்காவின் ஜெட் ப்ரொபெல்யூஷன் செண்டர் நமக்குத் தேவையான கண்காணிப்பு உதவிகளை வழங்கியது. சீன பாக்கிஸ்தான் நாளிதள்கள் கூட உடனடிச் செய்திகளை வழங்கின. சீனா தோல்வியுற்ற ஒன்றில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். உலகின் பெரும்பாலான முக்கிய செய்தி நிறுவனங்கள் இச்செய்தியை உடனடியாக வெளியிட்டன.

    முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே. இன்னும் செல்ல வேண்டிய தொலைவு மிக மிக அதிகம். ஆனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது மிக மிக முன்னால் சென்று கொண்டிருக்கும் நான்கு நாடுகளுள் நாமும் ஒருவர். வாழ்த்துகள் ஐஎஸ்ஆர்ஓ. 
சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள்.
புகைப்பட உதவி: ஐஎஸ்ஆர்ஓNo comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...