Knowledge is good only if it is shared.

Monday, June 23, 2014

கஷ்டமர்களா நாம்?

                    கஸ்டமர் சர்வீஸ் என்றால் என்னவென்றே தெரியாத தேசம் எங்கள் ஊரான நாகர்கோவில். அது எதோ புது ரக கத்திரிக்காய் என நினைக்கு அளவிற்குத்தான் அவர்கள் அறிவு. நாகர்கோவில் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இப்படித்தான். இவ்வளவு ஏன், இந்தியா முழுமைக்கும் அப்படித்தான். விதிவிலகாய் ஒரு சில இடங்கள். எங்கள் ஊரின் வேப்பமரச் சந்திபிலுள்ள நல்லபெருமாள் & சன்ஸ் துணிக்கடை மிகப் பிரபலம்.  கடையின் விஸ்தாரம், அமைந்திருந்த இடம், குளுகுளு ஏஸி வசதி என  அமர்க்களப்படுத்தியிருந்தனர். கடைக்கு உள்ளேயும் பல ரகங்கள். அளவுக்கு அதிகமான பணியாளர்கள் என உபசரிப்பிற்குக் குறைவிருக்காது. எல்லா இடத்திலும் கருப்பு ஆடு ஒன்று உண்டுதானே?
            சில வருங்களுக்கு முன் துணி எடுப்பதற்காகக் குடும்பத்தோடு சென்றிருந்தேன். வழக்கம்போல எடுக்க நினைத்தது ஒன்று எடுத்தது ஒன்று என்றானது. ஒருவாறு மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கெளண்டரில் பில் தொகையைக் கட்டி மீதியைப் பெறும் போது உச்ச கட்ட மன உளைச்சலுக்கு உள்ளானேன். அனாயாசமாய் மீதிச் சில்லைரையையும் பில்லையும் டேபிளின் மேல் விசிறி எறிந்தார். விசிறி எறிந்தார் என்பதைவிட அலட்சியமாய் மீதியை மரப்பலைகையில் வைத்தார். எனக்கு உண்மையிலேயே வருத்தமாகிவிட்டது. என்ன நடக்கிறது இங்கே? நான் வாடிக்கையாளன், அவர்கள் என்னை நம்பி இருக்கின்றனர் என்ற மிகச் சிறிய விஷயம் கூடத் தெரியாமல் எப்படி இவரை வைத்து வேலை வாங்குகின்றனர் என யோசித்தபோது எனக்குப் பின்னால் நின்ற பெண்ணுக்கும் அப்படியே விசிறியடித்தார். அப்பெண்ணும் எதையும் கண்டுகொள்ளாமல் அவற்றைப் பொறுக்கிக் கொண்டார். நமக்கு எப்பவும் மனசுக்குள்ள அந்நியன் அலர்ட்டா இருப்பான். இதை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்து மேனேஜரிடம் பொறுமையாகச் சொன்னேன். அடுத்த முறை நீங்கள் வரும் போது பாருங்கள் அவர் அந்த இடத்தில் இருக்கமாட்டார். கோடவுணுக்கு மாற்றிவிடுகிறேன் எனப் பணிவாகச் சொன்னார். அதன் பின் சென்று பார்க்கவேயில்லை. ஒருவேளை மாற்றியிருக்கலாம். அல்லது கண்துடைப்பிற்காக என்னிடம் அவர் கதையளந்திருக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------
                     2014 மார்ச் இளவெயில் நேரம் இடலாக்குடி சப் ரிஜிஸ்டரர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்றிருந்தேன். திருமணப்பதிவின் போது 800 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். ஊரைக் கூட்டுமளவிற்கு கத்தியதும் வெறும் 40 ரூபாயில் எல்லாம் கிடைத்தது. நான் காத்திருக்கத் தயார், வரிசையில் செல்லவும் தயார். ஆனால் உண்மையான வரிசையாய் இருக்க வேண்டும். இடையில் நுழையும் தெனாவெட்டுகளை அனுமதிப்பதில்லை. சுசுசீந்திரம் கோயில் முதல் ரயில்வே ஸ்டேசன் வரை இது தான் ரூல்ஸ். எந்த இடமென்றாலும் சரிதான். விதி எப்போதுமே வலியது. ரிஜிஸ்டரர் அலுவலகத்தில் ரெம்பத் தெனாவட்டான உடல்மொழியுடன் சிலர் இருந்தனர். நேரே அவள்களிடம் போய் இறப்புச் சான்றிதழுக்கு எழுதிக் கொடுத்திருந்தேன், இன்று வரச் சொன்னார்கள் என்றேன். "உங்களை யாரு உள்ளே வரச் சொன்னது? வெளியே உக்காருங்க கூப்பிடுவோம்" என்றார். ஓகே..நேரம் சரியில்லை. ஆனால் அது யாருக்கு எனத் தெரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.
"பெரியவரே, நாங்க உள்ளே வரக்கூடாதுன்னா அப்போ யாருதான் உள்ளே வரலாம்? இது எங்களுக்கான அலுவலகம் தானே" எனக் கடுமை காட்டினேன்.
"அதுக்கு இல்லை சார் ரிக்கார்ட்ஸ் எல்லாம் இருக்குல்லா?" என்றார்.
கொஞ்ச நேரத்தில் என்னோடு படித்த ஒரு பெண் விருவிருவென ரிஜிஸ்டரின் அருகில் போய் என்னமோ போய்க் கொண்டிருந்தாள். சரிதான் இவளும் மாட்டினாள் என நினைத்தேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. என்ன விஷயமெனில் அப்பெண் பத்திர எழுத்து அலுவகத்தின் ஏஜெண்டாம். விளங்கிரும்.
கூப்புடுடா பெரியவரை என மனம் கொதித்தது. நேராக மீண்டும் உள்ளே சென்றேன். இந்த முறை ரிஜிஸ்டரர் கத்தினார்.
''சும்மா சும்மா எல்லோரும் உள்ள வராதீங்க''.
உடனே நான் ''ஆமா படியளக்கிற ஏஜெண்ட் மட்டும் வந்தால் போதும் அப்படித்தானே''
அவர் இன்னும் முறுக நான் மீண்டும் முறுக்க. கடைசியில் 5 நிமிடத்தில் எனது வேலை முடிந்தது. பாவம் என்னோடு படித்தப் பெண் என்னைப் பார்த்தப் பார்வையில் வன்மம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------
தனியாரிலும், அரசிலும் உள்ள அலட்சியம் உன்னை விட நான் பெரியவன், என்னால் உனக்குக் கதை நடக்க வேண்டியிருக்கிறது என்பதை மறைமுகமாகக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. 

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...