Knowledge is good only if it is shared.

Monday, October 14, 2013

நியாபகம்.

            பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்பாள் என் ஆச்சி. ஆனால் இங்கே ஊரைச் சொல்லாம் பெயரைத் தான் சொல்ல முடியாது. ஏனெனில் பெயர் தெரியாது. ஊர் "திருவெண்பரிசாரம்" என்றழைக்கப்படும் திருப்பதிசாரம். 2002-ன் கோடைக்காலத் தொடக்கம்.
             படிப்பை அரைகுறையாக முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதென இரண்டு வருட போராட்டக்காலம். உடன் படித்த நண்பர்கள் பலர் கணிப்பொறித்துறையில் நுழைந்த அல்லது நுழையக் காத்திருந்த காலம். சரி ஏதாவது ஒரு கணிப்பொறி மொழி கற்றுக் கொள்ளலாம் என தினமும் நாகர்கோவில் சென்று வந்து கொண்டிருந்தேன். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் போதுதான் தினமும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். அண்ணல்ங்கிறது நான் தான். அவள் பெயர் தெரியல. கொஞ்சம் உயரமான ஒல்லியான பெண். மஞ்சள் உடம்பு அதிலும் மஞ்சள் பூசிய முகம். ஓவல் ஷேப் முகம். இந்த ரெண்டுக் கண்கள்ட்டதான் நான் மாட்டுனது. ஏதோ ஒரு கவிஞன் முந்திக்கிடான். உண்மையிலேயே வாள்வீச்சைப் போல தான் அவளின் கண்கள் அலைபாய்ந்தது. சரி எவ்ளோ நாள்தான் அலைபாயுறது. பேசிப் பாக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு. பட், தைரியம் இல்லை.

              எனக்கு வலப்புறம் இரண்டு சீட் முன்னால் உட்கார்ந்திருப்பாள். 11:10 க்குக் கிளம்பும் பஸ்ஸுக்கு 10:45 ற்கே இருவரும் ஆஜராகி விடுவோம். 11:25 க்கு பஸ் அவளின் ஊரை அடையும். ஒரு 4 அல்லது 5 முறை யதேச்சயாய் பார்ப்பது போல் பார்ப்பாள். நமக்கு யதேச்சையாய் எல்லாம் கிடையாது நேருக்கு நேராய் நோக்குவதுதான் வேலையே. ஊரில் இறங்கியதும் பஸ்ஸின் எதிர்த்திசையில் நான் இருக்கும் சீட்டின் பக்கத்தில் என் இடக்கை ஓரம் நடந்து சொல்வாள். அப்போதும் ஒரு பார்வை. வலக்கை நடுவிரலால் தலைமுடியை ஸ்டைலாய் ஒதுக்கிவிட்டு சிறு புன்னகை. சிறு புன்னைகைதான். ஆனால் அந்தப் புன்னகை கொடுக்கும் 'கிக்' அதிகம். இப்படியே ஓடிக் கொண்டிருந்தது வண்டி. சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களெல்லாம் மனதிலுள் சிம்பொனி தான். கடைசி வரை பேசவே இல்லை.
அப்புறம் வாழ்க்கை நெட்டித் தள்ளியதில் எனக்கு சிங்கப்பூர் வாசம். என்ன ஆனாளோ... இல்லை சனியன் ஒழிஞ்சது என நினைத்திருப்பாளோ அல்லது பசலை நோய் வந்து வளைகள் கழன்றிருக்குமோ. அன்னமோ, மயிலோ, மேகமோ தூதும் வரவில்லை.
              விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தவன் வடசேரி பஸ் ஸ்டாண்டில் சுற்றிக் கொண்டிருந்தேன். "ஏட்டி, எட்டி வாட்டீ" என ஒரு குரல். கறுத்த கால்களுடன் பட்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி குள்ளமாய் ஒருவன். பின்னால், அண்ணலை நோக்கிய அவளேதான். பட்டுப் புடவை. மஞ்சள மாறாத தாலி, கழுத்து நிறைய நகைகள். நின்று நிதானமாய் முழுதாய்ப் பார்த்தேன்.


எந்தச் சந்தேகமும் இல்லை, அவளேதான். "ருஸ்கின் பாண்ட்" எழுதிய 'Night Train at Deoli' ங்கிற கதைல வர்ற மாதிரி அவளைப் பார்காமலாவது இருந்திருக்கலாம், மனசாவது நிம்மதியா இருந்திருக்கும். ஆனால் அவள் என்னைப் பார்க்கவில்லை. பரவாயில்லை போகட்டும் அதுவும் நல்லதுதான், அவளுக்காவது மனசு நிம்மதியாயிருக்கட்டும்.


நன்றி : ஓவியர் இளையராஜா.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...