Knowledge is good only if it is shared.

Friday, April 12, 2013

புலிக்குட்டி ஐயர்.

                               புலிக்குட்டி ஐயர் தான் எனது பெயர்.என் பெயரைக் கேட்டவுடன் சிரிப்பு வருதுல்ல உங்களுக்கு? சிரிப்பா சிரிச்சுக்கிட்டு இருந்த என் வாழ்க்கை இப்போ கொஞ்ச நாளா நல்லாப் போயிகிட்டு இருக்கு. ஆமா,  ஊருல இடம் வாங்கி சொந்த வீடு கட்டிமுடிச்சாச்சு. என்னமோ பெருசா சாதிச்சிட்டியான்னு கேக்கிறது காதுல விழுது.பெருசா ஒண்ணும் இல்ல. ஏதோ கொஞ்சம்.அடிக்கிற வெயில்ல இட்டமொழி பஸ் ஸ்டாண்டில இருந்து ஒருத்தன் திருச்செந்தூர் கோயிலுக்கு நடந்தே வரணும்னா , அது அவனுக்கு வேண்டுதலா இருக்கணும்னு அவசியம் இல்ல. வறுமையாக்கூட இருக்கலாம். சுப்பிரமணி தான் என் பேரு. வறுமை விளையாடியபோதும் அதே பேருதான். பொண்டாட்டியோட நச்சரிப்பு தாங்காம  செந்தூர் முருகனை நாலு கேள்வி கேக்கலாம்னுதான் முதல்ல வந்தேன்.

                               ச்சு அது ஒரு 5 வருசம் ஓடியே போச்சு. என்ன சொல்லிகிட்டு இருந்தேன்... ஆங்..நடந்தே வந்தேன். வந்த உடனே பசிமயக்கத்துல ஒரு குளி. உடனே கோயிலுக்குப் போனேன். எந்தப் புண்ணியவானோ அண்ணைக்கி அன்னதானம் செய்சுகிட்டு இருந்தான். நல்ல சாப்பாடு. கல்தூணுல சாய்ஞ்சுகிட்டே ஒரு தூக்கம். அப்பதான் ரெண்டு வெளிநாட்டுகாரன் கோயிலுக்கு வந்தான் . ஓடிப்போய் அவனோட பேக்கை கையில வாங்கிகிட்டேன். கோவில ரெண்டு மூணு சுத்து சுத்தி காட்டினேன். 100 ரூவா குடுத்தான். அண்ணைக்கிதான் முருகன் என்னப் பாத்து சிரிக்க ஆரம்பிச்சான். நம்புனா நம்புங்க அண்ணைக்கி ராத்திரி தூக்கமே வரல.. அடுத்த நாள் காலைல பூசைக்கு வர்ற ஐயரு காலுல விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னேன். அவரு மெரண்டுட்டாரு. அவ்வளவுதான் சோலி முடிஞ்சுது. தினமு ஐயரு வீட்டுக்கு 500 ரூவா கொண்டு போக ஆரம்பிச்சாரு. எந்த ஐயரு டூட்டில இருந்தாலும் அவருக்கு தினமும் 500 ரூவா படி கொடுக்க ஆரம்பிச்சேன். அதிகாரிக்கும் பணம் மற்றும் வேறு சில உதவிகள் செஞ்சேன்.

                             கோயில் வாசலில் அதே கல்தூணில்தான் இப்போதும் இருக்கிறேன். பம்பரமா சுத்தி சுத்தி பணம் சம்பாதிச்சேன். சின்ன உருவம் எனக்கு. என் உருவத்தப் பாத்து எதுத்தாப்புல செருப்புக்கு டோக்கன் கொடுக்கிறவர்தான் எனக்கு ' புலிக்குட்டி ' ன்னு பேரு வச்சாரு. அப்புறம் காவி வேட்டிய கட்டுனேன். ஒரு ருத்திராட்ச மாலையும் கழுத்துல தொங்குது. சாமி கும்பிட வர்றவங்க என்னையப் பாத்தும் சாமின்னாங்க. அவங்க கூட்டிட்டு போய் சாமிக்கு முன்னால ரெம்ப கிட்டக்க ..அந்த ஸ்டென்லெஸ் ஸ்டீல் கம்பிக்கும் தாண்டி உக்கார வைக்கிறதுதான் என்னோட வேலை. கியூ எல்லாம் வேண்டாம். எவ்வளவு கூட்டம்னாலும் தூணுகிட்ட வந்து புலிக்குட்டி ஐயருன்னு கூப்பிட்டா போதும். முட்ட சொறிஞ்சுக்கிட்டு சும்மா இருந்துகிட்டு இருந்த நான் ஓடி வருவேன். நீங்க எங்கிட்ட வருவீங்கன்னு எனக்குத் தெரியும். கோயிலில் உங்களுக்கு வேண்டிய எல்லாம் என்னால செய்ய முடியும். 200 ரூவா கொடுத்தா சாமிகிட்ட உங்கள உக்கார வைப்பேன். மொட்ட போடது , பால்குடம், காதுகுத்து , கல்யாணம் எல்லாம் செய்வேன். தினமும் அது எந்த ஐயரு டூட்டினாலும் கால்ல விழுந்து திருநீறு வாங்கி நெத்தில ஒரு இழுப்பு அப்புறம் அந்த தூணு கிட்ட உக்காந்து ஆளு புடிக்க வேண்டியதுதான் பாக்கி. காவியையும் உத்திராட்சத்தையும் பாத்து  வர்ற போறவங்க சாமி , ஐயருன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதுதான் இப்போ புலிக்குட்டி ஐயருன்னு பேராயிடுச்சு நமக்கு.
                             சொல்ல மறந்துட்டேனே. வீடு கட்டுன செலவு 20 லட்சம் தாண்டிற்று. சாதனையான்னு சொல்லத்தெரியல. ஆனா 'லோன்' போடாம வீட்டு வேலை முடிஞ்சது சாதனைன்னு எனக்குத் தோணுது  . உங்களுக்கு?

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...