Knowledge is good only if it is shared.

Tuesday, March 5, 2013

பிரிவு...

                     த்தியான வெயில் மாதுளைச்செடிகளில் விளையாடிக்கொண்டிருந்த அணில்களின் உடம்பில் திட்டுத்திட்டாய் படர்ந்திருந்தது.அவ்வப்போது அவைஎழுப்பிய கீச்சுக்குரல்கள் ம்யமாயிருந்தன. ஜன்னலின் வெளியே மாதுளைப்பிஞ்சுகள் உதிர்ந்துகிடந்தன.அவற்றின் செந்நிறத்தை நானும் லீவில் ஊரிலிருந்து வந்திருக்கும் தம்பியும் பார்த்துக்கொண்டிருந்தோம். 'போன்' பில் அதிகமாகிவிடது என நேற்றுதான் அண்ணன் திட்டினான்.எனவே தெரியாத ஆளுக்கு போன் போட்டு விளையாட வேண்டும் என்று தோன்றவில்லை.கடந்த ஒரு மாதமாக எனக்கும் தம்பிக்கும் அதுதான் பொழுது போக்கு டெலிபோன் டைரெக்டரியை எடுத்து வைத்துக்கொண்டு ஏதாவது நம்பர் பார்த்து ஒவ்வொருவருக்காய் அடித்துக்கொண்டிருப்போம்.வீட்டில் யாருமே இருக்கமாட்டார்கள்.அண்ணன் கடைக்கு போய்விட்டு மாலையில்தான் வருவான்.அவன் வந்ததும் வீடே அமைதியாகிவிடும்.அது வரை நானும் தம்பியும் எப்போதும் விளையாட்டுதான்.அம்மா மதிய சாப்பாடு முடிந்ததும் தூங்கிவிடுவாள்.பெரியவீட்டில் நாங்களிருவரும்தான் இருப்போம்.இன்னும் மதிய சாப்பாடு சாப்பிடவில்லை.அது வழக்கம்போல மாலை 5 மணிக்குத்தான்.எப்போதும் நாங்களிருவரும் பேசிக்கொண்டேயிருப்போம்.யாராவது அருகில் வந்தால் தம்பி உடனே பேச்சைநிறுத்திவிடுவான்.
"யக்கா, அங்கபாரேன் பெரிய அணில் தவ்வுறத!"
ஜன்னல் கம்பிகளில் வலையடித்திருந்தது.
மாதுளைச்செடியை முழுவதும் குலுக்கியாட்டியபடி அணில்கள் தவ்வியோடின.
"சாப்பிடுவோமாடா?".
"சரிக்கா,ஆனா எனக்கு கொஞ்சம் போதும்."

வெயில் எங்கோ சாய்ந்துகொண்டிருந்தது.
இரவினில் அண்ணன் தாமதமாகத்தான் வந்தான்.அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
தம்பி உறக்கக்கலக்கத்தில் இருந்தான்.அம்மா அண்ணனிடம் சற்று கடுமையாக பேசுவது போல் தோன்றியது.இடையிடையே எனது பெயரும் ,படிப்பும் அடிபடது.எதுவுமே சரியாக கேட்கவில்லை.
எப்போது தூங்கினேன் என தெரியவிலை. விழிப்பு வந்த போது ஏதோ உடுக்கை அடிக்கும் சத்தம் கேட்டது. ராப்பிசக்காரன் ஒவ்வொரு வீட்டின் முன் நின்றும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.அருகில் படுத்திருந்த தம்பியின் கைகளும் கால்களும் பயத்தில் என்னை இறுக்கி அணைத்திருந்தன.
விடியலின்போது அம்மா புலம்பிக்கொண்டேயிருந்தாள்.
ஏனென கேட்டதற்கு,"உங்க அண்ணன் டி.வி வாங்கப்போறானாம்".
"அப்ப,அதுல படமெல்லாம் பாக்கலாமாம்மா?".
"ம்ம்ம்ம்ம் .. அது ஒண்ணுதான் குறைச்சல்.இன்னும் ரெண்டு வருசத்துல பத்தாம் கிளாஸ் போகப்போற டி.வி. வந்தா படிப்பு ஏறுமா?".
தம்பி ,விஷயத்தைக்கேட்டதும் சந்தோஷமடைந்தான். அடுத்த சில நாட்களில் எங்களுடைய பேச்சு டி.வி.யைப்பற்றியே இருந்தது.
கோவில் ரேடியோ உச்சசுருதியில் அம்மன் பாடலை பாடிக்கொண்டிருந்தபோதுதான் வாசலில் கார் வந்து நின்றது.தம்பியும் நனும் ஓடிச்சென்று பார்த்தோம்.
அண்ணன் முன்பக்கம் டிரைவர் அருகிலிருந்து இறங்குகிறான்.பின் சீட்டில் இருந்து இறங்கிய இருவர் காரின் டிக்கியை திறந்து பெரிய அட்டைப்பெட்டியை தூக்கி வந்தனர்.அதில் டி.வி படம் போட்டிருந்தது.
காரின் மேல்பகுதியில் கட்டியிருந்த கம்பியை டிரைவர் அவிழ்த்துக்கொண்டிருந்தார்.
அடுத்த அரைமணிநேரத்தில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. ஊரிலுள்ள ஒருசிலர் ஆச்சர்யமாய் பார்த்துசென்றனர்.
டி.வி பெட்டிக்கு தனியாக வெல்வெட் துணியில் உறைதைத்து போட்டாகிவிட்டது.
பெரும்பாலும் புரியாத மொழியில் பேசிக்கொண்டிருந்தது.மாலையில் மட்டுமே தமிழில் சில நிகழ்ச்சிகள்.
அதுவரை பேப்பரில் டி.வி நிகழ்ச்சிநிரலை பார்க்காத அம்மாவுக்கு இப்போது நிகழ்ச்சிநிரல் மனப்பாடம்.
தம்பியும் எப்போதும் டி.வி முன்னால்தான் இருந்தான். கரண்ட் இல்லாத ஒரு நேரத்தில் தம்பி கேட்டான்,"அக்கா டி.வி.இருக்கிறத உங் கூட படிக்கிறவங்ககிட்ட சொல்லுவியா?"
"ப்ரெண்டுட்டையா? , ஆமா சொல்லுவேனே"
"அப்ப , நானும் சொல்லுவே எங்க அக்கா வீட்டுல மட்டும்தான் டி.வி இருக்குன்னு"

மாதுழைச்செடிகள் அதிகமாகவே காய்த்திருந்தன.மாலையில் தண்ணீர் விடுவதேயில்லை.எல்லா வேலைகளும் காலையிலே செய்துமுடிக்கப்பட்டன.
இரவு சாப்பாடு இப்பொழுதெல்லாம் டி.வி.இருக்கும் அறையில்தான்.
ஞாயிறு ராமாயணம் பார்க்க மட்டும் ஊர் மக்கள் ஒருசிலர் வருவர். மற்றபடி எப்போதும் நான் அம்மா, தம்பி மூவரும்தான்.
இரவு அண்ணன் வந்ததும். நானும் தம்பியும் தனியாக வந்து விடுவோம்.அண்ணன் பெரும்பாலும் செய்தியை மட்டுமே பார்ப்பான்.
             நாட்கள் வரவர வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. டிவி பெட்டிக்கு வாங்கிய வெல்வெட் துணி நிறம் மங்கத்தொடங்கியிருந்தது. அம்மா அடிக்கடி படிக்குமாறு சொல்லிக்கொண்டே இருந்தாள். தம்பிக்கு இப்போதெல்லாம் டிவி அலுத்துவிட்டது போலவே தோன்றுகிறது. கரண்ட் இல்லையெனில் மொட்டைமாடிக்கு போகலாமா என கேட்க்கத்தொடங்குகிறான். சம்மதிக்கவில்லையெனில் அவனது குரல் நச்சரிப்பாய் மாறுகிறது.டிவி பற்றி பேசுவதை முற்றிலுமாய் தவிர்க்கிறான். "அக்கா,மொட்டமாடிக்கு போவோமா?"."இண்ணைக்கி அமாவாசை நெறைய நச்சத்திரம் இருக்கும்".நச்சத்திரங்களை பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். சில நச்சத்திரங்களுக்கு பெயர் கூட வைத்திருக்கிறான்.ஆர்வமாய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவனால் வானத்தைப் பார்த்தபடி இருக்க முடியும்.
விடிந்தும் விடியாத விடியற்காலை வேளை சாணித்தெளித்து கோலமிட்டுகொண்டிருக்கும் போதுதான் எதிர்வீட்டு பாட்டி கேட்டாள்,"என்னம்மா ராத்திரி தூங்கவே இல்லையா?"ஒரே பாட்டுச்சத்தமா கேட்டுது?".
"ஆமா ஆச்சி... படம் பாத்துக்கிட்டே இருந்தோம்."
" தாத்தா அந்த சத்தத்துல தூங்கவே இல்லை..."
"இனிமே குறைச்சு வச்சு கேக்கிறோம் ஆச்சி"
"சரிம்மா.."
                         தம்பியின் நடவடிக்கைகள் விசித்திரமாய் இருந்தன. சரியாக யாருடனும் பேசுவதில்லை.நானும் அம்மாவும் டிவி பார்த்துகொண்டிருந்தால் அவன் ஏதாவது புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட நானும் அவனும் சேர்ந்து சாப்பிடுவதையே மறந்து விட்டோம் .அவன் பெரும்பாலும் தனியாகத்தான் இருக்கிறான். டிவி என்னை அதனுள் கட்டிப் போட்டுவிட்டது போலும். 
திடீரென ஒருநாள் தம்பி ஊருக்குச் செல்லவேண்டும் என அழ ஆரம்பித்தான். எனக்கு துணைக்கு டிவி இருப்பதால் அவன் புறப்பாடு பெரிய வருத்தத்தைக் கொடுக்கவில்லை. 
ஆனால் அவன் கண்களில் பெரிய ஏக்கம் தெரிய ஆரம்பித்தது. என்னுடனனான அவனது உறவை டிவி எடுத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டான் போலும்.
தம்பி கிளம்பிய சில நாட்களுக்குப் பின்னான கரண்ட் இல்லாத மதிய வேளையில் மாதுளைச் செடி அணில்கள் வழக்கம்போல் துள்ளியோடிய போதும் எனக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...