Knowledge is good only if it is shared.

Wednesday, March 6, 2013

ரெண்டு சாக்கு கல் .

                               

                        வயல் பள்ளகுளத்து பத்தில் இருந்தது. "பத்து" என்றால் நாஞ்சில் நாட்டில் பல வயல்கள் அடங்கிய பகுதி. மாரியான்குளத்துப் பத்து, மாங்குளத்துப் பத்து, பாண்டியாங்குளத்துப் பத்து என்பது போல இது பள்ளகுளத்துப் பத்து. வயல் என்றாலும் அது போல் அமையக் கொடுத்துவைக்க வேண்டும்.10 மரக்கால் விதைப்பாடு. எப்போதும் நல்ல மேனி விளையும். இதுவரை வீட்டுச் சாப்பாட்டிற்கு பஞ்சமில்லாமல் கழிவது இந்த வயலால்தான். 1985-86 ல் தான் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இல்லாததால் பயிர் கருகி 'கருவத்தை' அறுத்தது. குறிப்பாக மடையடி வயல் அது. நாஞ்சில் நாட்டில் தண்ணிக்குப் பஞ்சமில்லையென்றாலும் மடையடி வயல் என்றால் கொஞ்சம் விஷேசம்தான். நேற்றுதான் பாக்டம்பாஸ் உரம் போடப்பட்டது. சம்பா, வாசரமுண்டான் காலம் போய் , பொன்மணி ,பொன்னி காலமும் போய் இப்போது டி. பி.எஸ் காலம் இது. டி.பி.எஸ் என்றால் திருப்பதிசாரம் என்பது எத்தனை விவசாயிகளுக்குத் தெரியும்? இளம் நாற்றுகள் இப்போதுதான் கரும்பச்சை நிறத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. பறிந்து கிடந்த கல் ரோட்டிலிருந்து 12 அடி பள்ளத்தில்தான் வயல்கள் இருந்தன. ரோட்டின் மறுபுறம் செந்தாமரையும் சம்பையும் நிறைந்த குளம். தாமரை இலை அழுகி தண்ணீர் அடர் கறுப்பு நிறமாய் இருந்தது. மதுரத்தென்றலுக்கு வளைந்து சிலிர்க்கும் நாற்றுகள் மனதை கிளர்ச்சியடையச் செய்தன. இன்னும் சில நாட்களில் ஒரு களை பறி. பின்னர் இரண்டு உரம். கொஞ்சம் நோயடித்தால் கொஞ்சமே கொஞ்சம் மருந்தடிக்க வேண்டும். எப்படியும் ஆறேழு கோட்டை நெல் லாபம் வரும். போன 'பூ'வில் நடந்த கதை மனதை சிரிப்பூட்டியது.


                               எனது வீட்டில் இளையவன் சொன்னபடி கேட்பதில்லை. உங்கள் வீட்டில் எப்படியோ? மூத்த மகன்தான் வயலையும் பிற வேலைகளையும் பார்த்துக் கொள்வது.அதுவும் போன 'பூ'வோடு முடிந்த கதை. நமக்கு உத்தியோகம் ஆராம்புளி (ஆரல்வாய்மொழி) நூற்பாலையில். இன்றே நாளையோ என தனது கடைசி சீவனை இழுத்துக் கொண்டு ஓடும் மில் அது. காலையில் போனால் மாலையில்தான் வீடு. மடையடி வயலென்றாலும் தினமும் ஒரு பார்வை பார்த்தால்தான் திருப்தி. மற்றபடி உழவு , மரமடித்தல், நடவு , களைபறி , உரம்போடுதல் , மருந்தடித்தல் , அறுப்பு எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். நடவுக்கு முந்தைய பொழி தட்டலில் வயல் சரியாக நிரவப்படாததில் கன்னிமூலை கொஞ்சம் மேடு. அந்தப் பகுதியில் தண்ணீர் சீக்கிரம் வற்றிவிடும். வயலுக்கான வாமடை வேறு ஈசான்ய மூலையில். போன 'பூ'வைப்போல் இந்த முறை ஆகிவிடக்கூடாது என்றுதான்தினமும் வரப்பைச் சுத்திக்கிட்டு இருகேன்.
                                       ழிந்த 'பூ'விலும் இதேபோல் கன்னிமூலை உயர்ந்து தண்ணீர் இரண்டு நாட்களுக்குள் வடிந்துவிடும். வேலைக்குபோகும் அவரசரத்தில் காலைப் பனியில் எழுந்து வயலுக்குவர கொஞ்சம் சோம்பல் . விளைவு அறுவடையில் தெரிந்தது. வயல் விளைச்சலெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. சாக்குதான் இரண்டு அதிகமாகத் தேவைப்பட்டது. அதுவும் மூத்தமகனை 'மக்கா ,  வயல்ல தண்ணி கெடக்கன்னு பாத்துட்டுவா மக்கா ' என்றால், அவனோ ஈசான்ய மூலையில் நின்று கொண்டு கன்னிமூலையில் கல்லெரிந்து பார்த்திருக்கிறான். தினமும் இதேவேலைதான் நடந்திருக்கிறது. ரோட்டில் இருந்த கல் எல்லாம் வயலில். அறுவடை நேரத்தில் வயலில் கன்னி மூலையில் இரண்டு 'சாக்கு' கல். நல்லவேளை பஞ்சாயத்துக்காரன் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுக்கவில்லை.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...