Knowledge is good only if it is shared.

Monday, March 4, 2013

பெயரில் என்ன இருக்கிறது?

          பெயர்க்குழப்பம் அடிக்கடி வருவதுண்டு. மேல்நிலை முதலாம் ஆண்டில் தாவரவியல் ஆசிரியை பாலசுப்பிரமணியம் என்ற பெயரை மணிகண்டன் என்றே கூப்பிடுவார். வகுப்பில் உண்மையாகவே ஒரு மணிகண்டன் இருந்தான். இவ்வளவிற்கும் ,  அவனுக்கும் எனக்கு எந்த ஒற்றுமையும் கிடையாது. பூசினாற் போன்ற உடம்புடன் சராசரிக்கும் குள்ளமான உயரத்தில் மாநிறமாய் இருப்பான் அவன். நானோ பனைமரத்தில் பாதி ,  நிறமும் அதே பனைமர நிறமே  , ஒல்லிப்பிச்சான் வேறு. என்னைப்பார்த்து "மணிகண்டன் , சொல்லு "எனக் கேள்வி கேப்பார். அவருக்குமட்டுமல்ல அந்த வகுப்பிற்கே தெரியும் என்னால் அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாதென்பது. நான் பவ்யமாய் முகத்தை வைத்துக் கொண்டு நிற்பது அவருக்கு ரெம்பப் பிடிக்கும் போலும் அடிக்கடி என்னிடமே கேள்வி கேட்பார். எனக்கு எல்லா வகுப்புமே வேப்பங்காயாய் கசக்கும் அதிலும் தாவரவியல் வகுப்பு வேப்ப மரமாய் கசக்கும். வகுப்பறைக்கு வெளியேயான வேப்பமரத்தை ஒட்டிய மதில் சுவரேறிக் குத்தித்துதான் வகுபிற்கு  ' கட் '  அடித்துக் கொண்டு வீட்டிற்கு வருவேன்.
      ரில் எனது பெயர் முருகன். பல முருகன்கள் இருந்தனர் ஊரில். ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி உண்டு . எனக்கு 'பெரிய முருகன் ' என்ற நாமம் எப்போது யாரால் இடப்பட்டது என்பது இன்னும் நினைவில் இல்லை. ஏனெனில் எனது சின்னத்தாத்தா பேரனாகிய எனது தம்பியின் பெயரும் முருகனே. அடுத்தடுத்த வீடுதான் இருவருடையதும். அவனோ குள்ளமோ குள்ளம் , நானோ வானத்தை எட்டிப்பிடிக்கும் உயரம். எனவே இருவருக்கும் அடைமொழி இடுவதில் யாருக்கும் சிரமமில்லை. பொறியியல் கல்லூரி நண்பர்கள் இருவர் எனைக் காண ஊருக்கு வந்து ஒரு யுவதியிடம் எனது வீட்டை விசாரிக்கும் போது அவள் கேட்ட முதல் கேள்வி , "எந்த முருகன் வீடு " ?
" ம்ம்ம்..இந்த வேல் வைத்துக்கொண்டு மயில் மேல் போவாரே " அந்த முருகன் வீடு என்றதும் . சரிதான் இப்படிப் பதில் சொன்னால் இது நெட்ட முருகனைத் தேடித்தான் வந்திருக்கிரார்கள் என யூகித்து எனது வீட்டை அடையாளம் காட்டியது அந்த யுவதியின் புத்திசாலித்தனமின்றி வேறென்ன ?

           சில சமயங்களில் பெயர்குழப்பமே என்னைக் காப்பாற்றியிருக்கிறது. 20ம் நூற்றாண்டில் இறுதியில் எங்கள் கிராமத்தில் ஊர்த்தலைவருக்கு அரிவாள் வெட்டு. இதுவும் சரித்திரச் செய்தியன்றி வேறென்ன. அதுவரை வாய்ச் சொல் வீரர்களாயிருந்த எம்மக்கள் ஆயுதம் தரிக்கத் தொடங்கிய நாள் அது. இளவெயில் காயும் மாலை மேமாதக் கோடை வேறு . குளிக்கும் குளத்திற்குச் செல்லும் வழியில்தான் வெட்டப்பட்ட ஊர்த்தலைவரின் வீடு. காவலர்கள் விசாரணைக்காக வந்திருந்தனர். அவ்வழியே சென்ற என்னிடமும் என் நண்பனிடமும் ஒரு பேப்பரில் கையெழுத்துப் போடச்சொன்னனார் சுசீந்திரத்து போலீஸ் ஏட்டையா ( எங்கள் ஊரில் ஒருவரின் பட்டப் பெயரும்  ' ஏட்டையா ' - சும்மா தகவலுக்காக..) எதற்காக கையொப்பம் என்ற போது நாங்கள் இங்கே விசாரிக்க வந்ததற்கான அத்தாச்சிதான் வேறொன்றும் இல்லை என்றனர். விவசாயக் காவலர்கள் தினமும் எங்கள் சுற்றுப் புற விவசாய நிலங்களை பாதுகாக்க சைக்கிளில் வருவர். அவர்களும் இதே போல் கையெழுத்து வாங்குவர் எங்களிடம். அதாவது அவர்கள் எங்கள் ஊருக்கு காவலுக்கு  வந்தார்கள் என்பதற்கான அத்தாச்சி அது. அதைப்போலத்தான் ஏட்டையாவும் கேட்கிறார் என கையெழுத்துப் போட்டது வினையாகிவிட்டது.இரண்டு மாதம் கழித்து பழுப்பு மங்கலான கடிதம் ஒன்று எனது நண்பனுக்கு வந்தது. "ஊர்த்தலைவரை வெட்டியதைப் பார்த்த்தாக" சாட்சி சொல்ல கோர்ட்டிற்கு வரும்படி தகவல் இருந்தது அதில். போலீஸ் ஏட்டையாவின் திறமை மெய்சிலிர்த்தது. ஆனால் எனக்கு அப்படி எந்தக்கடிதமும் வராதது ஆசரியமாய் இருந்தது. அந்த அச்சரியம் இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை. அன்று மாலையே என்னைவிட 10 வயது கூடுதலுள்ள ஒருவர் என்னிடம் வந்து உனக்கு வரவேண்டிய கோர்ட் ஆர்டர் எனக்கு வந்து விட்டது என்றார். சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த அந்தச் (ஆ)சாமி கோர்ட் கூண்டில் எனக்கும் " இதற்கும்சம்பந்தம் இல்லை "  இது என்னுடைய கையெழுத்தே அல்ல என சாட்சி சொன்னது தனிக்கதை.  சொல்ல மறந்துவிட்டேனே , அந்தச் சாமியின் பெயரும் பாலசுப்பிரமணியன். எங்கள் வீட்டிலிருந்து நாலு வீடுதள்ளி அவரது வீடு.

2 comments:

வே.ம.சசிவரதன் said...

விஜய் டிவி, ராஜ் டிவி யில் பின்னிரவு 30 நிமிடங்கள் ஸ்லாட் வாங்கி, Pollachi time சேனலில் 6 மாதமும் 3 நாட்கள் பாடல்கள் தொகுத்து வழங்கிய ப்ரியாவையும் பக்கத்துல உக்காரவச்சி பெயரை மாற்றுங்கள் அடுத்த வாரத்திற்கும் அடுத்த வாரம் அம்பானிக்கு அடுத்தபடியா நீங்க தான்னு பொழப்பை ஓட்டும் பெயரியல் மாமேதை Dr.Raaujuendraann (Rajendran தான் ) உன் தலைப்பை பார்த்தா டென்சென் ஆகிடுவாரு.


உன் எழுத்துநடை ஜோர். நிறைய எழுதவும்.


என் கதை இன்னும் மோசம். ஒரு கட்டுரையோடு நிறுத்திகொண்டாய் உன் பெயர் குளறுபடிகளை. முருகனுக்கும் பாலசுப்ரமணிக்குமே இவ்ளோ என்றால் மூச்சை பிடித்துகொள் என் உண்மையான பெயர் பக்ருதீன்.

பாலா.R said...

ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹம்மது !

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...