Knowledge is good only if it is shared.

Wednesday, February 6, 2013

BARAN (மழை)


                             ரானியப் படங்களுக்கு எப்போதுமே நம் மனதோடு நெருக்கமாகும் வித்தை தெரியும் போலும். அவை எப்போதுமே இதயத்தால் உணரப்பட வேண்டியவை. ஒவ்வொரு பிரேமிலும் வாழ்வின் தரிசனம் வழிந்து கொண்டிருக்கும். மிக இயல்பான நடிப்போடு , சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வைச் சொல்லுவதாலேயே ஈரானிய திரைப்படங்களை விரும்பிப் பார்க்கிறேன். யதார்த்தை மிஞ்சாதபடி நினைத்ததை படமாக்கும் வித்தை ஈரானிய திரைப்படங்களுக்கே உரியது. இயக்குனர் 'மஜித் மஜிதி' யின் பிற படங்களைப் போலவே இதுவும் நம் மனதிலேயே தங்கிவிடுகிறது.

     குறைவான கதை மாந்தர்கள் ஆனால் நிறைவான படம். பல்வேறு விருதுகளைக் குவித்த படம். மதம், வறுமை, காதல் இவற்றினூடே பின்னப்பட்ட எளிமையான அழகானச் சித்திரம். ஆர்பாட்டமில்லாமல் மனதைத் தொடும் படம் இது.
                               லத்தீப் கட்டுமானவேலை நடக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்குத் தேயிலை போட்டுக் கொடுப்பது மற்றும் உணவு சமைக்கும் வேலை செய்பவன். சக ஊழியர்களுடன் எப்போதும் சண்டையிடும் மனநிலை உடைய இளைஞன். உடன் வேலை செய்யும் நஜாப் வேலையிடத்தில் கீழே விழுந்து அடிபட்டதால் அடுத்தநாள் அவரது மகன் ''ரஹ்மத்'' ''சொல்டான்'' எனும் ஊழியருடன் வேலைக்கு வருகிறான். ரஹ்மத் ஓரு ஆப்கான் அகதி. பல்வேறு இரானியர்களுடன் மேலும் பல சட்டவிரோத ஆப்கான் அகதிகளும் அங்கே வேலை பார்க்கிறார்கள்.

 அதிகாரிகள் பரிசோதனைக்கு வரும் போது ஆப்கான் அகதிகள் ஓடி ஒழிந்து கொள்ள வேண்டும். இத்தொழிலாளர்களின் மேனேஜர் ''மெமர்''. வேலைக்கு வரும் சிறுவன் ரஹ்மத் சிறிய பையனாக இருக்கிறான். அச்சிறுவன் ரஹ்மத்தால் கடினமான வேலைகளைச் செய்யமுடியவில்லை. இதைக்கண்ட மெமர் லத்தீப்-ன் வேலையை ரஹ்மத்திற்கு கொடுக்கிறார். லத்தீப் சக தொழிலாளர்களோடு கட்டுமான வேலை செய்கிறான். அவனது கோபம் முழுவதும் ரஹ்மத்தின் மீது திரும்புகிறது. ரஹ்மத்திற்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக்கிறான். ரஹ்மத்தோ எதுவும் செய்யாமல் தனது வேலையைத் திறம்பட செய்கிறான். சக ஊழியர்கள் சிறுவனின் சமையலைப் பாராட்டுகின்றனர். எதேச்சயாய் லத்தீப் ரஹ்மத்தின் சமயலறைப்பார்க்கும் போது அதிர்ந்துவிடுகிறான். ரஹ்மத் சிறுவன் அல்ல. அவள் ஓர் சிறுமி, பதின்ம வயதுப் பெண். ரஹ்மத்தின் மனதில் பெரிய மாற்றம் வருகிறது. இப்படத்தின் டிரைலர் கீழே..


                          அதன் பின் அவன் அச்சிறுமியத் தொந்தரவு செய்வதில்லை. அவன் மனதில் அவளின் மேல் அன்பு உருவாகிறது. சுத்தமான உடை அணிந்து வேலைக்கு வருகிறான். மறைமுகமாகத் தனது காதலைத் தெரிவிக்கிறான் அவன். அச்சிறுமி கடைக்குச் சென்றுவிட்டு வரும் போது எதிர்பாராதவிதாமாய் பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளிடம் அவள் நேருக்குநேராய்ச் சிக்க நேருகிறது. அவ்வதிகாரிகளுக்குப் பயந்து ஓட ஆரம்பிக்கிறாள். லத்தீப் ஓடிச்சென்று அவளைத்துரத்தும் அதிகாரியைப் பிடித்து கீழே தள்ளி அச்சிறுமியை விடுவிக்கிறான். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் லத்தீப்பை மெமர் விடுவித்துக் கூட்டிச் செல்கிறார். அவர் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும் மேலும் ஆப்கான் அகதிகளை வேலையிலிருந்தும் அனுப்பிவிட வேண்டும். லத்தீபை திட்டிக்கொண்டே வருகிறார்.

                         ரஹ்மத் வேலைக்கு வராததால் அவளைத் தேடிச் செல்வதென முடிவெடுத்து தனது மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு செல்கிறான் லத்தீப் .ரஹ்மத் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கிறான்.  சொல்லானைச் சந்தித்து அப்பணத்தை ரஹ்மத்தின் தந்தை நஜாப்பிடம் கொடுக்குமாறு சொல்கிறான். அடுத்தநாள் தான் வந்து சொல்டானைச் சந்திப்பதாக சொல்கிறான். ஆனால் அடுத்தநாள் சொல்டானைச் சந்திக்க முடியவில்லை , எனவே  நேராக நஜாப்பின் வீட்டிற்குச் செல்கிறான். அங்கே ரஹ்மத் கதவைத்திறக்கிறாள். நஜாப் லத்தீப்பிடம் பேசும்போது , "நேற்று சொல்டான் வேறொருவர் அவருக்குக் கொடுத்த பணத்தை எனக்குத் தர வந்தார், நான் அவரிடம் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு அவரை அப்பணத்தைக் கொண்டு ஆப்கானுக்கு செல்லுமாறு சொல்லிவிட்டேன்" கூறுகிறார். ஆம், அப்பணம் லத்தீப் கொடுத்து அனுப்பியது என நஜாப்பிற்குத் தெரியாது. லத்தீப் மீண்டும் வேலையிடத்திற்கே வந்து மெமரிடம் முன் பணம் கேட்கிறான். அவரும் திட்டிக்கொண்டே கொடுக்கிறார். அடுத்தநாள் அப்பணத்தை எடுத்துக் கொண்டு நஜாப்பைச் சந்தித்து, "மெமர் இப்பணத்தை உனக்குக் தரச்சொன்னார்" எனக் கொடுக்கிறான். நாளை தனது குடும்பம் ஆப்கான் செல்வதாக நஜாப் கூறியதும் லத்தீபிற்கு அதிர்சி.

மேலும் ரஹ்மத்தின் பெயர் BARAN என்பதையும் அறிகிறான். அடுத்தநாள் தனது சாமான்களை டிரக்கில் ஏற்றும் நஜாப்பின் குடும்பத்திற்கு உதவி செய்கிறான் லத்தீப். கடைசிக் கூடையை எடுத்துக் கொண்டு BARAN வருகிறாள். தவறிவிழும் கூடையிலிருந்து காய்கறிகள் சிதறுகின்றன. அவற்றை BARAN கைகளும் லத்தீப் கைகளும் பொறுக்குகின்றன. இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் நேருக்கு நேர் நெருக்கமாய் பார்க்கின்றனர்.முகத்தில் மெல்லிதாய் எழும் புன்னகையோடு BARAN பர்தாவால் முகத்தை மூடுகிறாள். சகதியில் மாட்டிக்கொண்ட அவளின் காலணியை கைகளால் சுத்தம் செய்து அவளிடம் கொடுக்கிறான். அவள் அதை மாட்டிக்கொண்டு டிரக்கில் சென்று அமருகிறாள். டிரக்கில் அமர்ந்திருக்கும் BARAN-னைப் பார்த்தபடி நிற்கிறான் லத்தீப். டிரக் நகருகிறது. மெல்லிய புன்னகையோடு லத்தீப் சகதியில் பதிந்துள்ள BARAN-னின் காலணித்தடத்தை பார்த்துக் கொண்டுடிருக்கிறான். மழைத்துளிகள் காலணித்தடத்தை நீரால் நிரப்புகின்றன. கருப்புத்திரையில் எழுத்துகள் மேலே நகருகின்றன. நம் மனதில் ஓர் இனம்புரியா திருப்தி.
ஒவ்வொரு ஈரானியத் திரைப்பட ரசிகர்களின் டாப் லிஸ்டில் இந்தப் படம் கண்டிப்பாய் இருக்கும். 

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...