Knowledge is good only if it is shared.

Monday, May 4, 2009

வேட்டை


வேட்டைக்கு கிளம்பலாம் என முடிவுசெய்யப்பட்டது.இரவு 1 மணிக்கு தளவாடச்சாமான்களுடன் கிளம்பலாம் என அனைவரும் முடிவு செய்தோம்.அனைவரும் என்றால் என்னையும் சேர்த்து 4 பேர். நான், மணி,குமார்,ராஜா.
ராஜா சொன்னான்,".காத்து பலமா அடிக்கி அதனால வேட்டை ஈஸிதான் ".
தளவாடச்சாமன்கள், சாக்கு என் பொறுப்பு,அரிவாள் குமார் பொறுப்பு,வேட்டைகளம் வழக்கம்போல் மணிதான் முடிவு செய்வான்.வேட்டையாடுவது வழக்கம் போல் ராஜாதான்.
மணி இதில் கொஞ்சம் ஸ்பெசலிஸ்ட்.பகலிலே இடத்தை தேர்வு செய்து விடுவான். மதியம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் குட்டித்தூக்கம் போடும்போது தலைவர் சைக்கிளை எடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்.ஊரை ஒட்டினார்போல சில தென்னந்தோப்புகள்.அதிலே சில மரங்கள் மிகவும் குட்டையானவை.அதிலே தொங்கும் இளநீர் குலைகள்தான் எங்கள் இலக்கு. எந்த ஒரு இளநீரையும் கொடுத்து குடிக்கச்சொன்னால் கண்ணைமூடிக்கொண்டு இன்னார் தோப்பிலுள்ளது என சொல்வதில் குமார் வல்லவன்.ராஜாவுக்கு மரத்தையும் எந்தப்பக்கம் எந்தப்பக்கம் எத்தனையாவது குலை என்பதையும் சொல்லிவிட்டால் போதும்.5 நிமிட இடைவெளியில் 'சேப்டர் குளோஸ்'.
மாலை குளிக்கும் போதே மரத்தையும் இடத்தையும் சொல்லிவிட்டான் மணி.இரவு மெதுவாக கவியத்தொடங்கியது.இது கோடைகாலம். குளத்தினில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.குளித்து முடித்துவந்து அனைவரும் தெரு முனையில் இருந்து பேசத்தொடங்கினோம்.முக்கியமான விஷயம்.எங்களது வேட்டை தொழில்சார்ந்த வேட்டை அல்ல.சும்மா ஒரு ஜாலிக்குத்தான். இதை உங்களால் புரிந்துகொள்ளமுடியுமா என தெரியவில்லை.அதாவது இரவினில் அடுத்தவன் தோப்பில் திருடுவது ஒரு சுகம் .இப்படித்தான் திருடுகிறேன் பேர்வழி என ராஜா எங்களுக்குத்தெரியாமல் மணியின் தோப்பிலே திருடியது தனிக்கதை.நாம் விஷயத்திற்கு வருவோம்.கிட்டத்தட இரவு 12:30 ஆகிவிட்டது.ஒவ்வொருவராக வீட்டிற்குச்சென்று தளவாடச்சாமான்களை எடுத்துவரலாம் என கிளம்பினோம்.மணிக்கு தளவாடச்சாமான்கள் பொறுப்பு எதுவுமில்லை என்றாலும் வீட்டுற்கு சென்று மப்ளர் எடுத்துவருகிறேன் என சென்றான்.இப்போது அவனைத்தான் காணவில்லை.நேரம் ஓடிக்கொண்டிருந்தது.சரி இன்று அவனைவிட்டு விட்டு நாங்கள் மூவரும் கிளம்பலாம் என முடிவுவெடுத்து கிளம்பினோம். மணி சொன்ன அங்க அடையாளங்களுடைய தோப்பும் மரமும் கண்டுபிடிக்கப்பட்டது.ராஜா மரத்தில் ஏறி தனது வேலையை செவ்வனே செய்தார். அனைத்தும் கீழே விழுந்ததும் குவிக்கப்பட்டு சாக்கினில் அடைக்கப்பட்டது. அதே நேரம் பெரும் ஊளைச்சத்தமும் அதைதொடர்ந்து 'டார்ச்" வெளிச்சமும் எங்களை நோக்கி வரத்தொடங்கியது. அவ்வளவுதான் பாதி மரத்தில் இறங்கிக்கொண்டிருந்த ராஜா கீழே குதித்தான். மூவரும் இளநீர் சாக்கை விட்டுவிட்டு ஓடத்தொடங்கினோம்.சிறிது தூரம் வரை விரட்டி வந்த வெளிச்சமும் ஆளையும் காளவில்லை. நிலவற்ற வானம் எங்களை காட்டிக்கொடுக்கவில்லை. ஓடும் போது குமார் வாய்க்காலில் பல்டியடித்தது தனி விஷயம். கிட்டத்தட்ட 250 மீட்டர் தூரம் வந்திருப்போம்.மூச்சு வாங்கி நின்றோம்.இப்போது முக்கிய பிரச்சனை. இளநீரை எப்படி எடுப்பது. ஒருவேளை அந்த ஆள் இன்னும் அங்கே இருந்தால்.சரி வீட்டுக்கு கிளம்பலாம் என சுற்றுப்பாதையில் வீட்டிற்குச்சென்றோம்.குமார் புலம்பிக்கொண்டே வந்தான் .இன்று பார்த்து மணி வரவில்லையே என.வந்திருந்தால் அவனும் மாட்டியிருப்பானே என.
நாங்கள் முதலில் பேசிக்கொண்டிருந்த தெருமுனைக்கு வந்து சேர்ந்தோம்.மணி காதுவரை மூடிய மப்ளருடன் அங்கே இருந்தான்.
"மக்கா,ஏம்ல என்ன விட்டுட்டு போனியோ?"
"உன்ன காங்கல அதான்"- ‍‍இது குமார்.
மணி "கடகட"வென சிரித்தான்.
சரி ஓட்டம் எப்படி இருந்தது.
அப்போதுதான் பார்த்தோம் அவன் கையில் 'டார்ச்" இருந்தது.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...