Knowledge is good only if it is shared.

Saturday, August 7, 2010

மழை!

               ழையே பெய்யாத ஊரில் வெக்கைக்காற்று தெருவெங்கும், ஏன் முடுக்குகள் தோறும் வேட்டை நாயைப்போலவும் இண்டு இடுக்குகளிலெல்லாம் இரவினில் அலையும் பெருச்சாளியைப்போலவும் அலைந்து கொண்டிருந்தது. பச்சை படர்ந்த மரங்கள் எதையும் பார்க்கமுடியவில்லை.இனிமேல் மழை வருமென்ற நம்பிக்கை எவருக்குமில்லை.பதின்ம வயது சிறுவர் சிறுமியர் மழையென்றால் என்னவென்றே அறியாமலிருந்தனர்.வெக்கை காற்றினெதிரே பனையோலை காற்றாடியை பிடித்துக்கொண்டோடிய சிறுவர் சிறுமியரின் தந்தைமார்கள் பட்டணத்தில் கூலி வேலையோ அல்லது கடை கண்ணியிலோ வேலைபார்த்து வந்தனர்.ஊர் திருவிழாவிற்கு அவர்கள் வரும் நாட்களில்தான் ஊரே சந்தோசத்திலிருக்கும். ஊரிலிள்ள எந்தக்கிணற்றிலும் தண்ணீரே இல்லை.சுற்றுச்சுவர்களில் வளர்ந்த ஆலஞ்செடிகள் கூட வளராமல் ஒரே அளவாயிருப்பதாய் தெரிகிறது.வெளிறிய வீதி வழியே பாதவெடிப்போடு வந்தவன் மாடக்கண்ணுவின் வீட்டு கூரையிலிருந்து குச்சியை ஒடித்து பல் குத்தியபடியே நின்றுகொண்டிருந்தான்.ஒட்டிய வயிறொடு பெண் நாயொன்று அதன் காம்புகள் அசைய அவனைக் கடந்து ஓடியது.ஓணான் ஒன்று வேகமாய் வீதியை கடந்து சென்றது.

"லேய், மேக்க நல்ல மழ தெரியுமால" என்றார் மாடக்கண்ணு தாத்தா.

வயத்தெரிச்சல கெளப்பதையும் ஓய்,ஒமக்கென்ன கண்குளிர மழய பாத்தவரு" என்றபடி நகர்ந்தான்

"ஆமால போ...போ...,மோட்டுல இருக்க கலப்பைய பக்கும் போதெல்லாம் வெப்புறாளமா வருது"வந்தவன் ஏதோ முனங்கிக்கொண்டே தெருவைத்தாண்டி எங்கோ மறைந்துவிட்டான்.

ஊரிலுள்ல குளம் மற்றும் வயல் வெளியெல்லாம் உடை மரம் முளைத்திருந்தது. அவற்றினூடே காடை,கவுதாரி சில சமயம் செண்பகம் போன்றவை பறந்து திரிந்தன.எங்கிருந்தோ வரும் வேட்டை நாய்கள் சில வேளைகளில் கவுதாரி குஞ்சுகளை கவர்ந்து சென்றன.

மாடக்கண்ணு கோவில் கல் திண்ணையில் படுக்கச்சென்றார் . திண்ணை குளிர்ச்சியாயிருந்தது .கன்னம் திண்ணையில் உரச படுத்துக்கிடந்தார்.ஆங்காங்கே எறும்புகள் வரிசையாய் சென்றுகொண்டிருந்தன.கோவிலை ஒட்டிச்செல்லும் தெருவில் யாரோ நடந்து செல்வது போலிருந்தது.

கூவி அழைத்தார்.

"என்ன பாட்டா காலைலே படுத்தாச்சு?"

"யாருடே பெருமாளா...?நமக்கு வேற எங்கடே போறது?"

"காலைலே வெக்கய பாத்தேரா ஓய்?"

"என்ன எளவுக்குன்னே தெரியல வெயிலு இந்த போடு போடுது"" ஆமா ஆடெல்லாம் வித்து போட்டியாமே?"

"குட்டி,பெரிய ஆடு எல்லாத்தையும் வித்தாச்சு பாட்டா.சவத்து எளவு திடீர்னு செத்து போவுது ஓய்"

"இனி பொழப்புக்கு?"

"எல்லாவனும் ஆடு வளத்தா பொழைச்சுகிட்டுருக்கான்.கோயில் கொட முடிஞ்ச்தும் நாமளும் அவனுவள மாதிரி கடைகளுக்கு போக வேண்டியதுதான்".

"சரி பாட்டா நான் கெளம்புதேன்"

ரில் திருவிழா முடிந்து இரண்டு நாளாகியிருந்தது. எல்லோர் வீடும் வண்ண மயமாயிருந்தது.மிட்டாய்கள்,கோழிக்கறி,துணிமணிகள்,ஆண்களாயின் மதுவுடனும் பெண்கள் புது நகைகளுடனும் சந்தோசமாயிருந்தனர்.ஆனாலும் வெக்கை மட்டும் குறைந்தபாடில்லை.கிராமத்திலுள்ள அனைத்து பெண்களும் தத்தம் கணவன்மாரிடம் தங்களையும் ,குழந்தைகளையும் பட்டணத்திற்கு அழத்துச்செல்லும் படி வற்புறுத்தினர்.

ஆண்கள் வழக்கம் போல முடியாதெனவும் அதிலுள்ள செலவுச்சிக்கலையும் கூறி சமாதானப்படுத்தினர்.முன்னிலும் வேகமாக வெக்கை தாழ்வாரங்களிலிருந்து வீட்டினுள் இறங்கி வந்தது.குடிநீரெல்லாம் எறும்புகள் அப்பிக்கிடந்தன.சிலந்திவலைகள் சிலந்தியின்றி வெறுமையாயிருந்தன.

தெருவானது பகலில் பெருங்குரலெடுத்து அழுவது போலிருந்தது।குழந்தைகள் வெளியே வர அஞ்சினர்.மக்கள் நடமாட்டத்தை மாலையில்தான் காண முடிந்தது.சிறுமிகள் சிறு குழுக்களாய் விளையாடிக்கொண்டிருந்தனர்.கோழி ஒன்று குப்பையை கிளறிக்கொண்டிருந்தது.எல்லாமே வழக்கம் போலத்தான் இருந்தது.சிறுவர்கள் சிலர் நாயைத்துரத்தியபடி ஓடிச்சென்றனர்.

நத்தை,மழைப்பூச்சி,ஈசல்,கரையான் போன்ற சொற்களை மக்கள் மறக்கத்தொடங்கியிருந்தனர்।நாளுக்கு நாள் வெயில் உக்கிரமாவது போல் தோன்றியது.எப்போதும் வெக்கை. இரவினில் எல்லோரும் விட்டு முற்றத்தில் சாக்கின் மேல் படுத்து தூங்கினர்.சிறுமிகள் நட்சத்திரங்களை எண்ணியபடி உறங்க பழகியிருந்தனர்.மாடக்கண்ணு தாத்தா ஒவ்வொரு நாளும் அடிக்கடி வானத்தை பார்த்து மழை வருமா என போவோர் வருவோரிடெமெல்லாம் கேட்கத்தொடங்கியிருந்தார்.
ருநாளும் இல்லாத திரு நாளாய் வெயிலின் சீற்றம் சற்று குறையத்தொடங்கியிருந்தது.பறவைகள் சிறகடிப்பும் அதன் கீச்சுக்குரலும் கேட்கும்படி மேலே பறந்து சென்றன।குழந்தைகள் வெளியெ விளையாடிக்கொண்டிருந்தனர்। ஆண்கள் வீட்டினுள் பெட்டியில் பொருட்களை அடுக்கியபடியிருந்தனர்। பெரியவர்களும் பெண்களும் ,"அதை வச்சாச்சா? இதை வச்சாச்சா " என நினைவூட்டிக்கொண்டிருந்தனர்.

மாலையில் சற்று குழுமையான காற்று வீசியது.பின்னர் ஒன்றிரெண்டாயும் சீராகவும் விழுந்த துளி பெரு மழையாய் மாறியது.இரவு நடுநிசியிலும் மழை உக்கிரமாய் ஊரை விழுங்கும் உத்வேகத்துடன் பெய்தது.நெடுநாட்களுக்குப்பின் அனைவரும் வீட்டினுள் உறங்கினர்.மாடக்கண்ணு தாத்தா திண்ணையிலிருந்து ஆசைதீர மழையை பார்த்துக்கொண்டிருந்தார்.அதை முழுவதும் பருகும் உத்வேகத்துடன் கண் இமைக்காமல் அதையே பார்த்தபடியிருந்தார்.

6 comments:

Rex Harrison J said...

ஹாய் பாலா ரொம்ப நல்லாருக்குப்பா, தொடர்ந்து எழுது.

Anonymous said...

Excellent! Bala! Reminds me of places like Radhapuram or Udankudi. What a delight for the senior citizen! I can only fill in his shoes! May your thoughts through the medium of our Mother-tongue continue to flow like crystal-clear stream water! Your friend, Ignatius.

patrick said...

Bala i did visit the site, but then, again Tamil, for some reason i don't have the patience to read it on the comp, Btw how do u type in tamil?

tamilnadunews said...

அருமையான எழுத்து நடை!
வாழ்த்துக்கள் பாலா!
நிங்கள் பெரிய எழுத்தாளராக வருவீர்கள்!

பாலா.R said...

அனைவருக்கும் மிக்க நன்றி.
ஒருவித தயக்கத்துடனே இதை பதிவிட்டேன்.
பாராட்டுக்களுக்கு நன்றி.

ஜீவா ஓவியக்கூடம் said...

பாலா,
இது முதல் கதை என்று நம்ப முடியவில்லை. வெக்கையில் நாமே வாடியது போல ஒரு உணர்வு....
எழுதுங்கள்
எழுதிக்கொண்டேயிருங்கள்!

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...