Knowledge is good only if it is shared.

Saturday, November 17, 2018

அவ்னி எனும் உயிர்க்கொல்லி.

           காராஷ்ட்ரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் 2016-ம் முதல் 2018 ஆகஸ்ட் மாதம் வரை 13 பேரின் மரணத்திற்குக் காரணமான அவ்னி புலி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது. File:Tigergebiss.jpg
picture courtesy: ArtMechanic 


          பொதுவாக மனிதன் புலிக்கு உகந்த உணவே அல்ல. பிற விலங்கினங்களைப் போல மனித உடலில் மாமிசங்கள் அதிக அளவில் இருப்பதில்லை. எனவே புலி மனிதனை இரையாகக் கருதுவதில்லை. புலி மனிதனைக் கொல்வதற்கான காரணங்களாக வல்லுநர்கள் சிலவற்றைச் சொல்லுவர். 

  • காயமடைந்த புலி விரைவாக ஓடி இரையப் பிடிக்க இயலாததால்  விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதன் ஓடுவதில் பலவீனமானவனாக இருப்பதால் மனிதனை வேட்டையாடி உண்கிறது. முள்ளம்பன்றியை வேட்டையாடும் புலியின் முன்னங்கால்களில் முள்ளம்பன்றியின் முள் குத்தி காலினுள் உடைந்து தங்கிவிடுவதால் புலியின் முன்னங்கால்கள் சீழ் பிடித்து அவற்றால் வேகமாக ஓட இயலாத நிலை ஏற்படும் என ''ஜிம் கார்ப்பெட்" தெரிவிக்கிறார். 
  • மேலும் அவ்னி போன்ற தாயின் குட்டிகள் சிறு வயதிலேயே மனித மாமிசத்தை ருசி பார்த்துள்ளதால் அதுவும் உயிர்க்கொல்லியாக மாறலாம்.

File:Tiger facial marking Sultan (T72) Ranthambhore India 12.10.2014.jpg
picture courtesyDibyendu Ash


          சமூக வலைத்தளங்களிலும், ஜர்னலிசம் எதுவும் படிக்காமல் வேறு வேலை கிடைக்காமலும் பத்திரிகையாளர்களானவர்களும் மிகமிக அறிவுஜீவியாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு அவ்னி புலியை சுட்டுக் கொன்றது தவறு என கட்டுரை எழுதித் தள்ளுகின்றனர். எப்போதுமே வல்லுநர்களின் கருத்துகளே பொருட்படுத்தத்தக்கவை. சிக்கல் என்னவெனில் ஒவ்வொரு துறையிலும் முழு உண்மை தெரியாமல் அரைகுறையாக கருத்துகளை உளரும் ஜாம்பவான்கள் இந்தியாவெங்கும் நிறைந்துள்ளனர்.  இதிலெல்லாம் கொடுமை என்னவெனில் அரைகுறைகளின் கருத்துகளையே தன் கருத்துகளாகக் கொண்டு மக்களும் வாந்தி எடுப்பதுதான். தமிழகத்தில் வார இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நிறைந்துள்ளவர்கள் செய்திகளைச் செய்திகளாக மட்டும் தருவதில்லை. அவரவர் சுய விருப்பினைச் செய்தியோடு கலந்து அளிக்கின்றனர் என்ற உண்மை உறைப்பதில்லை எவருக்கும். 


File:Caspian tiger, north iran.jpg
picture courtesy: The Tiger Foundation          புலி என்றதும் என் நினைவுக்கு வரும் நபர்கள் மூவர். ஒருவர் உல்லாஸ் கரந்த். நியூயார்க் Wildlife Conservation Society - ன் இயக்குனராக இருந்தவர். 30 வருடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மத்தியப் பகுதிக்குள் புலிகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக களப்பணியாளராக அலைந்தவர். இவர் 2013-ல் நீலகிரியில் மேன் ஈட்டராக மாறிய உயிர்க் கொல்லிப் புலியைச் சுட்டுக் கொன்றது சரி என்றார்.  இன்னொருவர் ஜிம் கார்பெட். My India, Man-Eaters of Kumaon, Jungle Lore, The Temple Tiger and More Man-eaters of Kumaon ஆகிய இவருடைய புத்தகங்களை சிறு வயதில் படித்திருக்கிறேன். மேன் ஈட்டர்களாக மாறும் புலிகளைக் கொல்வதே சிறந்தது என்கிறார் இவர். இவர் வேட்டைக்காரராக இருந்தாலும் வன விலங்குகள் பற்றியும் காட்டினைப் பற்றியும் அபார அறிவினைக் கொண்டவர். மூன்றாமவர் தியோடர் பாஸ்கரன், தமிழில் இயற்கைச் சூழலியல் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருபவர் இவர்.  சில வருடங்களுக்கு முன்னர் நீலகிரிப் புலியைக் கொன்றபோது உயிர்க்கொல்லிப் புலிகளைக் கொல்வதே நல்லது என தெரிவித்திருந்தார். 


File:Ullas karanth2.jpg
உல்லாஸ் கரந்த், picture courtesy: Kalyanvarma

          
           உயிர்க் கொல்லிகளாக மாறியப் புலிகளை பிடித்து சரணாலயங்களில் வளர்ப்பதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் எனும் பெயரில் உலாவரும் வேலைவெட்டி இல்லாதவர்கள் சமூக ஊடகங்களில் உளருவதைப் படிக்கும் போதெல்லாம் சிரிப்பாக இருக்கும். வனப்பகுதிகளில் உள்ள மனிதர்களை அங்கிருந்து வெளியேற்ற அரசு முயற்சிக்கும் போதெல்லாம் இதே  சமூக ஆர்வலர்கள் அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்குவர். புலி-மனித மோதலைத் தவிர்ப்பதற்கான வழிகளுள் ஒன்று மனிதர்களிடமிருந்து காட்டினைப் பாதுகாத்தல்.(அரசு காட்டின் மேம்பாட்டிற்காக அமைக்கும் குழுக்களில் வனப்ப்குதியில் வாழும் மனிதர்களும் அங்கத்தினர்)  மனிதன் காட்டினுள்ளும் இருக்க வேண்டும் அதே சமயம் உயிர்க்கொல்லிப் புலியைச் சுட்டுக் கொல்லவும் கூடாது எனும் இரட்டை வேட அறிவிலி சமூக சேவகர்கள் நிறைந்த தேசம் நம் இந்தியா. 
உயிர்க் கொல்லியைப் பிடித்து அதை சரணாயலத்தில் வளர்க்க ஆகும் செலவில் வனத்திலுள்ள பிற விலங்கினங்களைப் பாதுகாக்கலாம் என்கிறார் உல்லாஸ் கரந்த்.

Tuesday, October 16, 2018

சின்மயியும் வைரமுத்துவும்

           யோசித்துப்பார்க்கிறேன்... சின்மயி ஹெச். ராஜா மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால் நம் சமூகம் எப்படி எதிர்வினையாற்றியிருக்கும்? இதுபோல சின்மயி ஆதரவின்றி தனித்து விடப்பட்டிருப்பாரா? குற்றம் சாட்டப்பட்டவரைவிட  குற்றம் கூறியவர் மீது அதிக விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது நம் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. வைரமுத்துவின் குணநலன்கள் நமக்குப் பெரிதாகத் தெரியாது. அவர் குற்றமிழைத்தாரா என்பதும் தெரியாது. அதேசமயம் சின்மயின் குற்றச்சாட்டினை புறந்தள்ளுவது அறிவுடமையாகாது.

        சினிமாத்துறையில் பெண்கள் நிலைத்து நிற்க பாலியல் ரீதியாக வளைந்து கொடுக்க வேண்டும் எனப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. எத்தனையோ சங்கங்கள் உள்ள திரைத்துறையில் எதேனும் ஒரு சங்கமாவது வாராந்தரிகளில் நடிகர் நடிகைகள் பற்றி வரும் கிசுகிசு வதந்திகள் தொடர்பாய்  நீதிமன்றத்திற்குச் சென்றதுண்டா?

       தமிழ ஊடகம் தன் நிலையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குச் சென்று பல்லாண்டுகளகிறது. சென்னை வெள்ளத்தினை வட இந்திய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தபோது நமக்கிருந்த தார்மீகக் கோபம் உண்மையெனில் இப்போது சின்மயி விவகாரத்தினை அலட்சியம் செய்யும் ஊடகங்களின் மீதும் இருந்திருக்க வேண்டுமல்லவா? சினிமாக்காரிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என அவர்கள் ஒதுங்க முடியாது. ஒட்டுமொத்த ஊடகங்களும் சினிமாத்துறையிலிருந்து கசியும் அல்லது கசிய விடப்படும் ஒவ்வொரு செய்திகளுக்கும் காத்திருப்பது வெள்ளிடைமலை.

        வட இந்திய ஊடகங்களில் சின்மயி விவகாரம் வெளிவந்த பின்னரே தமிழக ஊடகங்களில் சின்மயி - வைரமுத்து விவகாரம் வெளியாகியது. அதிலும் வைரமுத்துவின் பக்கம் நியாயமிருப்பதுபோலவே அனைத்துக் கட்டுரைகளும் வெளியாகின. இன்று வைரமுத்துவால் பாலியில் சீண்டலுக்கு அழைக்கப்பட்ட இன்னுமிரு பெண்களின் "மீ டூ" ஹேஷ் டேகுகள் வெளியாகியுள்ளன. தமிழக் ஊடகம் எத்தனைக் காலம்தான் பொத்திப் பாதுகாக்குமெனத் தெரியவில்லை. திமுகவின் அரசவைக் கவிஞரான வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டினை நக்கீரனோ பிற திமுக சார்பு புலனாய்விதழ்களோ வெளியிடுமா?

          வேலைபார்க்கும் இடங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார். இதை மறைக்கவோ மழுப்பவோ தேவையில்லை. அதையும் மீறி அச்சம்பவத்தினை துணிச்சலாக வெளிக்கொண்டுவரும் ஒரு பெண்ணிற்கு பக்கபலாமாயிருந்தால் நாளைய உலகம் நம் குடும்பத்துப் பெண்களுக்கும் உகந்த இடமாக இருக்கும்.  

Tuesday, September 18, 2018

நம்மிலெத்தனைபேருக்குத்தெரியும்....

Quora வலைத்தளத்தில் BJP ஆதரவு பதிலொன்றை எழுதப்போய் அது கடைசியில் சுற்றி வளைத்து குலக்கல்வியில் வந்து நின்றது. குலக்கல்வியையும் BJP யையும் எப்படி குழப்பிக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.
குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்றே கிடையாது. கிராமப் புறங்களில் Satellite TV யை SUN TV கனெக்‌ஷன் என்று சொல்வார்கள். அதுபோல ராஜாஜி அமுல்படுத்திய ஒரு திட்டத்திற்கு ஈ. வே. ராமசாமி உள்ளிட்ட திராவிடவாதிகள் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி அவதூறு செய்தனர். Hereditary Education Policy திட்டம் 1949 - 1950 களில் பி.எஸ். குமாரசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழங்குவதற்கான வழி முறைகள் ஆராயப்பட்டன. குறைந்த பள்ளிகளும் குறைந்த ஆசிரியர்களும் இருப்பதால் பள்ளிகளில் ஷிப்ட் முறை அமுல்படுத்தப்பட்டது. கட்டமைப்பு வசதிகளை உடனடியாகப் பெருக்க அரசிடம் நிதி இல்லாததாலும், மத்திய அரசின் உதவி கிடைக்காததாலும் (வட இந்திய பஞ்சத்தின் காரணமாக அரசிடம் சாப்பாடிற்கே வழியில்லை. ஜெய்பிரகாஷ் நாராயணன் கஞ்சித் தொட்டி திறந்து சேவையாற்றினார்-) இருக்கும் பள்ளிகளைக் கொண்டு ஷிப்ட் முறையில் பள்ளிகளை நடத்துவதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டு பரீட்சாத்தமாக செயல்படுத்தப்பட்டது. அத்திட்டம் பயனளிக்கவே பின்னர் வந்த ராஜாஜி அத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவு படுத்தினார். காலையில் பள்ளி சென்று மதியம் திரும்பும் மாணவன் என்ன செய்வான் எனப் பத்திரிகையாளர் கேட்ட போது வீட்டில் பெற்றோர்களுக்கு உதவி செய்யலாம் என ராஜாஜி சொன்னார். இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என ராஜாஜி சொல்லவில்லை, சாதி பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவரை எதிர்த்து அரசியல் செய்த ஈ. வே. ராமசாமி, அண்ணாத்துரை உள்ளிட்டவர்கள் அதை குலக்கல்வித் திட்டம் என அவதூறு செய்தனர். மேலும் ஆசிரியர்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்கு முன்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலை தூரங்களுக்கு சைக்கிளில் சென்று பாடம் எடுப்பதால் சீக்கிரமே வீடு திரும்பினர். ஷிப்ட் முறைப்படி அவர்கள் பள்ளி முடியும் வரை இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்களின் மனநிலையை வாக்குகளாக மாற்ற உருவாக்கப்பட்ட பொய்யே குலக்கல்வித்திட்டம்.

ராஜன், சட்டநாதக் கரையாளர், சந்தானம் ஆகியோரின் சுயசரிதையைப் படித்தால் ராஜாஜி வெள்ளையனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த வரலாறு நம்மவர்களுக்குத் தெரியும். சுதந்திரதிற்காகப்போராடியவர் அவர். வெறும் வாயில் தோரணம் கட்டும் திராவிடக் கோமாளிகள் வரலாற்றுத் திரிபுகளின் மூலம் குலக்கல்வி எனத் தொடர்ச்சியாகப் பொய்களைச் சொல்லி அதை மக்களை உண்மையென நம்ப வைத்துவிட்டனர். வசதியான வாழ்வையும் பணத்தையும் விட்டொழிந்து மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார் ராஜாஜி. திராவிடத் தற்குறிகளைப் போல வாரிசு அரசியலோ, ஊழலோ செய்தவரில்லை அவர்.

பொட்டிஶ்ரீராமுலு இறந்த அன்று ஒட்டு மொத்த ஆந்திராவும் பற்றி எரிந்தபோதும் மிகப் பிடிவாதமாக இருந்து சென்னையை தமிழகத்தோடு இணைத்தவர் ராஜாஜி. ராஜாஜி இல்லையேல் சென்னை இன்று தமிழகத்தில் இல்லை.
கிராமப் பொருளாதாரம் மதுவினால் சீரழிவதைக் கண்ட அவர் உடனடியாக மதுவிலக்கினை அமுல்படுத்தினார். அரசின் வரிவருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என மதுவிலக்கை கறாராக அமுல்படுத்திய ராஜாஜியை திராவிடக் கோமாளிகள் விமர்சித்தனர். ஈ. வே. ராமசாமி மதுகுடிப்பது எங்கள் உரிமை மதுவைப் பரவலாக்க வேண்டும் என போராடினார். இதுதான் உண்மையான வரலாறு. உங்கள் அபிலாஷைகளின்படிதான் செய்திகள் வேண்டும் என்றால் திராவிடக் கோமாளிகளின் திரிக்கப்பட்ட வரலாற்றை தாராளம் நம்பலாம். 

Friday, September 14, 2018

கோடாலிக் காம்பு...

இந்து மத நம்பிக்கைகளில் விநாயகருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகனை முதலில் நினைத்துக் கொள்வது வழக்கம். இந்திய நிலப்பரப்பில் இப்பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பிரபல அந்நிய மதங்கள் தங்கள் மதங்களை இந்தியாவில் பரப்பும் நோக்கில் இந்து மதத்தினைக் காயப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மோசமாக உள்ளது. தென்காசி, செங்கோட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர். செங்கோட்டையில் ஊர்வலமாகச் சென்ற விநாயகர் இப்பகுதி வழியாகச் செல்லக்கூடாது என கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர் இஸ்லாமியர்கள்.
எங்கள் பகுதி எஸ்.பி அலுவலக சி.ஐ.டி காவலருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. விநாயகர் ஊர்வலத்திற்கு எதிராக கிறுத்துவர்கள்  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என வருத்தத்துடன் கூறினார்.
உச்சகட்டமாக திராவிடர் கழகம் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடது என வழக்கு தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் கிறுஸ்துமஸ் நடைபெறுவதையொட்டி ஆங்காங்கே பொது இடங்களில் கிறுஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்படும். திராவிடர் கழகம் வழக்கம்போல வாய் மூடி மெளனியாயிருக்கும். நடுநிலைவாதிகளெனக் கருதும் இந்துகளும் திமுகவிற்கும், தி.க விற்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பர், தாம் கோடாலிக் காம்பென்பதை உணராமல். 

Tuesday, September 4, 2018

திமுகவுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா?

தமிழக அரசியல் அதலபாதாளத்தினை நோக்கிச் செல்கிறது. கருத்துரிமை எனும் பெயரில் கேடுகெட்டச் செயல்களைச் செய்பவர்களை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன.
மத்திய மாநில அரசுகளைத் தூக்கி எறிய வேண்டும் என ஸ்டாலின் பேசி வருகிறார். அவரது அப்பாவோ அவருக்கு ஓட்டுப்போடாத தமிழக மக்களைச் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றார். திமுக வேண்டாம் என்றுதான் மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எப்பாடுபட்டாவது ஆட்சியில் அமர்ந்துவிடவேண்டும் என்ற ஆசையில் திமுக செயல்படுகிறது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்கும் பொறுமையும் இல்லை!

சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் விமானத்தில் அவருடன் பயணித்த அரசியல்வாதி தமிழிசையை நோக்கி 'பாசிச பாஜக ஒழிக' எனக் கோஷம் எழுப்பியுள்ளார். அது சரி என ஸ்டாலினும் வக்காலத்து வாங்கியிருக்கிறார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கறுப்புக்கொடி காட்டியிருந்தாலோ அல்லது திமுக ஒழிக என பிற அரசியல் கட்சிகள் அவ்வூர்வலத்தில் கோஷமிட்டிருந்தாலோ ஸ்டாலின் அதை கருத்துரிமை என்பாரா? நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்த பாஜக அரசை மக்கள் விரோத அரசு என எப்படிக்கூறுகிறார்கள்?????. தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் நிராகரிக்கப்பட்ட கட்சி திமுக என்பது அவருக்கு நியாபகம் இருக்கிறதா?

கடந்த இரு சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்கள் திமுக வேண்டாம் என்று மிகத் தெளிவாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என யாராவது ஸ்டாலினுக்கு நியாபகப்படுத்தலாம்.

Wednesday, August 29, 2018

கள்ளியின் ஓங்காரம்

இலக்கிய உலகிற்கு போதாத காலம் இது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. திரைப்படப் பாடலாசிரியராகிய இவரை கவிஞர் என நம்ப வைத்தாகிவிட்டது. அடுத்து இலக்கியவாதியாகவும் பாதி நம்ப வைத்தாகிவிட்டது. தமிழ் மொழியின் இலக்கியவாதிகள் என யோசித்தால் உடனடியாகத் தோன்றும் பெயர்கள் கீழே...

1. சுந்தர ராமசாமி 
2. தி.ஜானகிராமன் 
3. புதுமைப் பித்தன்
4. கி.ராஜநாராயணன்
5. ஜெயமோகன் 
6. நாஞ்சில் நாடன்
7. எஸ். ராமகிருஷ்ணன்
8. விமலாதித்த மாமல்லன்
9. மனுஷ்ய புத்திரன்
10. அசோகமித்ரன்
11. பிரமிள் 
12. விக்கிரமாதித்யன் 
13. ஆ. மாதவன் 
14. தோப்பில் முஹம்மது மீரான்
15. ஜி. நாகராஜன்
16. சி.சு. செல்லப்பா
17. வண்ணநிலவன்
18. க. நா. சுப்ரமண்யம் 
20. மெளனி
21. கு. ப. ராஜகோபாலன்
...
இன்னும் கொஞ்சம் தம் கட்டி யோசித்தால் மேலும் சில பெயர்கள் தோன்றும். தலைகீழாய் நின்றாலும் வைரமுத்துவின் பெயரை இதில் சேர்க்க முடியாது. கள்ளிக்காட்டு இதிகாசம் ஆனந்தவிகடனின் வீச்சினாலும் வைரமுத்துவின் சினிமாச் செல்வாக்கினாலுமே பரவலானது. படைப்பாளி, படைப்பின் தாக்கம் வாசகன் மனதில் எப்படி வெளிப்படவேண்டும் என  வரிக்குவரி ஓலமிட்டு அழுத காவியம்தான் கருவாச்சி காவியம். சுருங்கச்சொன்னால் எழுத்தாளனின் பேரழுகையே கருவாச்சி காவியம். அரசியல் லாபியினால் சாகித்ய அகடமி விருது கிடைத்தது. இன்று பிற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பதன் மூலம் தமிழின் இலக்கிய முகமாக பிற மொழியினர் இதையே நினைப்பர். வண்ணநிலவனின் ஏதாவது ஒரு கதையின் ஒற்றை வரிக்கு ஈடாகுமா இவரின் புலம்பல் குப்பைகள். வைரமுத்துவின் பாடல்வரிகள் பிரமிளின் சொல் வீச்சின் முன் எம்மாத்திரம். மனுஷ்யபுத்திரனின் மொழிச் செழுமைக்கும், வார்த்தை வீச்சுக்கும் ஒருகாலும் ஈடாகாது வரைமுத்துவின் குப்பைகள். வைரமுத்து மிகச் சிறந்த திரைப்பட பாடலாசிரியர் என்பதில் ஐயமில்லை. அதனாலேயே அவர் கவிஞருமல்லர், இலக்கியவாதியுமல்லர். 

Tuesday, August 21, 2018

நீங்கள் அறிவாளியா?

                              யற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் தவறாமல் இயற்கையைச் சூறையாடுவதைப்பற்றி பேசுகிறோம். பெரும்பாலான பேச்சுகள் கீழ்க்கண்டவாறே இருக்கும்.

* ஆற்றில் மணல் அள்ளுகிறார்கள், அதனால் நிலத்தடி நீர் அதலபாதாளம் சென்றுவிட்டது.

* காடுகளில் மரங்களை வெட்டுவதால் மழைவளம் இல்லை.

* அதிக அளவு ஆற்று நீரை குளிபான நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன.

* மலைகள் கல்குவாரிகளால் தகர்க்கப்படுகின்றன.

* கழிவு நீர் ஓடைகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன.

* காடுகளில் யானை வழித்தடங்களை மறித்து உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

 இப்படியாக பல....

ஒருவேளை நீங்களும் இம்மாதிரி சொல்லியிருக்கக்கூடும். நிற்க, சொன்னவை எல்லாமே சரிதான். ஆனால்,

*ஆற்றில் அள்ளப்படும் மணல் எங்கு செல்கிறது?

* காடுகளில் வெட்டப்படும் மரங்கள் எங்கு செல்கிறது?

* தயாரிக்கப்படும் குளிர்பானங்களின் நுகர்வோர்கள் யார்?

* கல்குவாரிகளில் உருவாக்கப்படும் ஜல்லிகளும் எம் சாண்டுகளும் யாரிடம் செல்கின்றன?

* கழிவு நீரில் எங்கிருந்து கிளம்பி ஆற்றில் கலக்கிறது?

* யாருக்காக காடுகளில் யானை வழித்தடங்களை மறித்து உல்லாச விடுதிகள் கட்டப்படுகின்றன?சுற்றி வளைப்பானேன்..

* நீங்கள் வசிக்கும் வீட்டின் கதவு, நிலை ஜன்னல்கள் எந்தக் காட்டின் மரம்?

*நீங்கள் வசிக்கும் வீட்டின் கட்டுமானப் பெருட்கள் எந்த மலையில் உடைத்த ஜல்லி, எந்த ஆற்றில் அள்ளிய மணல்?

* நீங்கள் குடிக்கும் குளிர்பானம்  எந்த ஆற்று நீர்?

* உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிந்த நிறுவனக்களின் கழிவு நீர் எங்கே செல்கிறது?

* காடுகளில் யானை வழித்தடங்களை மறித்துக் கட்டப்பட்ட உல்லாச விடுதியில் கும்மாளமடிப்பதும் நாம்தான்.


ஓரளவு நெருங்கிவிட்டோம் அல்லவா?

ஆக, அனைத்து சுற்றுச்சூழல் சீரழிவும் நமக்காகவே செய்யப்படுகிறது. வசதியாக அதையெல்லாம் மறந்துவிட்டு வாய்கிழிய நியாயம் பேசுகிறோம். இயற்கையைச் சீரழித்தே நாம் ஒவ்வொரு பொருட்களையும் பெறுகிறோம். எனவே அடுத்தவரைக் குற்றம் சொல்வதைவிட நம்மையே குற்றம் சொல்ல வேண்டும்.
அவ்னி எனும் உயிர்க்கொல்லி.

            ம காராஷ்ட்ரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில்  2016-ம் முதல் 2018 ஆக...